
ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
புனித மாசில்லாக் குழந்தைகள்
மத்தேயு 2: 13-18
தம் குழந்தைகளுக்காக அழும் இராகேல்(கள்)
நிகழ்வு
கிராமப்புறத்தில் இருந்த தொடக்கப்பள்ளி அது. அந்தப் பள்ளிபில், ஒரு பிற்பகல் வேளையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை மாணவர்களிடம், “அடுத்து நான் கேட்கப் போகும் கேள்விக்கு யார் சரியான பதிலைச் சொல்கின்றாரோ, அவர் உடனே வீட்டுக்குச் செல்லலாம்”
ஆசிரியை இவ்வாறு சொன்ன மறுவினாடி, அந்த வகுப்பில் இருந்த எழில் என்ற மாணவன் தனது புத்தகப் பையைச் சன்னல் வழியாக வெளியே வீசினான். சத்தம் வந்த திசையைப் பார்த்த ஆசிரியை, “யார் புத்தகப் பையை வெளியே வீசி எறிந்தது?” என்று சினத்தில் கத்தினார். அப்பொழுது எழில் ஆசிரியையிடம், “நான்தான் என்னுடைய புத்தகப் பையை வெளியே வீசி எறிந்தேன்” என்றான். பின்னர் அவன் அவரிடம், “அம்மா! நீங்கள் கேட்ட கேள்விக்குச் பதில்சொல்லிவிட்டேன். அதனால் நான் வீட்டிற்குச் செல்கின்றேன். நாளை பார்க்காலாம்” என்று சொல்லிவிட்டுச் சன்னலுக்கு வெளியே கிடந்த புத்தகப் பையை எடுத்துக்கொண்டு, வேகமாக வீட்டுக்குக் கிளம்பினான் எழில்.
இதைப் பார்த்துவிட்டு ஆசிரியை எழிலின் அறிவுக்கூர்மையை எண்ணி வியந்துபோனார்.
ஆம், குழந்தைகள் எப்பொழுதுமே புத்திசாலிகள், அதே நேரத்தில் மாசற்றவர்கள். இப்படிப் புத்திசாலிகளாகவும் மாசற்றவர்களாகவும் இருக்கும் குழந்தைகளின் விழாவைத்தான் புனித மாசில்லாக் குழந்தைகள் விழா என்று கொண்டாடுகின்றோம். இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஏரோதுவின் அதிகார வெறி
உலகில் நடைபெறும் போர்கள், கலவரங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கின்றார்கள். இது யாரும் மறுக்க முடியாத உண்மை
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றதை அறிந்த ஏரோது மன்னன், பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி, இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றொழிக்கின்றான். இவ்வாறு ஏரோதால் கொல்லப்பட்ட குழந்தைகள் யாவும் இயேசுவுக்காகத் தங்களுடைய இன்னுயிரைத் துறந்தவர்கள் ஆகின்றார்கள்.
‘யூதர்களின் அரசராக’ப் பிறந்திருந்த குழந்தையால் எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி, ஏரோது மிகப்பெரிய கொடுஞ்செயலைச் செய்கின்றான். இந்த ஏரோது தன்னுடைய பதவிக்கு இடையூறாக தனது குடும்பத்தில் இருந்த பலரையும் கொன்றுபோட்டவன் என்று குறிப்பிடத்தக்கது. பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைப்பதற்காக எந்தவோர் எல்லைக்கும் சென்ற ஏரோதுவைப் போன்றுதான், இன்றைக்குப் பலர் தங்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும், தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் குழந்தைகளையும், குழந்தைகளைப் போன்று வறியவர்களாக இருக்கின்றவர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஏரோதுக்கு நேர்ந்த கொடிய சாவு நேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்
“உலகில் நடக்கின்ற ஒவ்வொரு போரும், குழந்தைகளுக்கு எதிரான போர்தான்” என்பார் எக்லாண்டைன் ஜெப் (Eglantyne Jebb) என்ற அறிஞர். இது எவ்வளவு அப்பட்டமான, அதே நேரத்தில் மிகவும் கசப்பான உண்மை! ஆம், இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு போரினாலும் வன்முறையினாலும் குழந்தைகள் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாய் இருக்கின்றது. இதற்கு நடுவில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள், தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை மறுப்பு ஆகியவை எல்லாம் குழந்தைகளின் வாழ்வை மிகவும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன.
குழந்தைகள் எப்பொழுதும் தங்களுடைய பெற்றோரை, பெரியவரை நம்பியிருப்பவர்கள். ஆதலால், அவர்களுடைய வாழ்க்கையை அழாகாக்கித் தருவது பெரியவர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளைப் போன்று மாசற்றவர்களாகவும் தூயவர்களாவும் இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
அன்று மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்பட்டதால், “இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்” என்ற இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகள் நிறைவேறின (எரே 31: 15), இன்று நாம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நிகழ்த்தி, ‘இராகேல்களை’ அழ வைக்காமல், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி, இயேசு சொன்னது போன்று நாம் சிறு பிள்ளைகளாக மாறி, இராகேல்களாகிய தாய்மார்களை அமைதியாக வாழ வைப்போம்.
சிந்தனை
‘நம்மிடமுள்ள மிகப்பெரிய சொத்து குழந்தைகள்தான். அவர்களே நம்முடைய எதிர்காலம்’ என்பார் நெல்சன் மண்டேலா. ஆகையால், நம்மிடமுள்ள மிகப்பெரிய சொத்தும், நம்முடைய எதிர்காலமுமான குழந்தைகளின் நலனைப் பேணுவோம்; அவர்களைப் போன்று மாசற்ற உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed