
இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-56
இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாய் இருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறு ஓர் ஊருக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————-
பகைமையும் பொறுமையும்
பொதுக் காலத்தின் இருபத்து ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I யோபு 3: 1-4a, 11-17, 20-25
II லூக்கா 9: 51-56
பகைமையும் பொறுமையும்
துறவியும் இளைஞனும்:
இளைஞன் ஒருவன் தன்னுடைய ஆடுகளை ஓட்டிக்கொண்டு ஓர் அடர்ந்த காடு வழியாகச் சென்றுகொண்டிருந்தான். ஓரிடத்தில் துறவி ஒருவர் தியானம் செய்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் இளைஞன் அவரருகில் சென்று, “சுவாமி! நீங்கள் எதற்காகத் தியானம் இருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?” என்றான். துறவி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இக்கேள்வியை அவன் இரண்டு மூன்று முறை கேட்டுப் பார்த்தும், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
இதனால் அவன் பொறுமையிழந்து, “சுவாமி! உங்களுக்குக் காது சரியாகக் கேட்காதா? ‘நஎதற்காகத் தியானம் செய்கிறீர்கள்?’ என்று நான் எத்தனை முறை கேட்கிறேன். ஒருமுறையாவது பதில் சொல்ல மாட்டீர்களா?” என்று அவன் சீறியபோது, துறவி அவனிடம், “எதற்காகத் தியானம் இருக்கிறீர்கள் என்று கேட்டாய் அல்லவா! பொறுமையோடு இருக்கத்தான் தியானம் இருக்கிறேன். அதை உனக்கு உணர்த்துவதற்குத்தான் பொறுமையோடு இருந்தேன்” என்றார்.
ஆம், நாம் நினைத்தது உடனே நடக்கவில்லை என்றால் பொறுமை இழக்கின்றோம்; எப்படியெல்லாமோ நடந்துகொள்கின்றோம். இந்நிலையில் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நாம் பொறுமையோடு இருக்கவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சமாரியர்களுக்கும் யூதர்களுக்குமிடையே காலங்காலமாகவே பகை இருந்தது. இதனால் யூதர்கள் எருசலேமிற்குப் போகும்போது சமாரியர்களின் ஊர்கள் வழியாகப் போகாமல், யோர்தான் ஆற்றைச் சுற்றி எருசலேமிற்குப் போவார்கள். இத்தனைக்கும் சமாரியர்களின் ஊர்கள் வழியாகப் போனால் எருசலேமிற்கு எளிதாகச் சென்றுவிடலாம் என்றாலும், சமாரியர்களின் ஊர்கள் வழியாகச் சென்றால் ‘தீட்டு’ என்று தூய்மை வாதம் பேசிய யூதர்கள் அவர்களின் ஊர்கள் வழியாகச் செல்லாமல், யோர்தான் வழியாகச் சுற்றியே சென்றார்கள்.
இயேசு மற்ற யூதர்களைப் போன்று தூய்மைவாதம் பேசிக்கொண்டிருக்காமல், தன்னுடைய சீடர்களைச் சமாரியர்களின் ஊர்கள் வழியாகவே போகச் சொல்கின்றார். அவ்வாறு போகும்போது சமாரியர்கள் தன்னுடைய சீடர்களை ஏற்றுக்கொள்ளாதபோது, அதற்காக சீடர்கள் அவர்களை அழிக்கட்டுமா? என்று கேட்கும்போது, இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். காரணம், இயேசு இவ்வுலகில் பகைமையை அல்ல, அமைதியை ஏற்படுத்தவே வந்தார். அதனால் தன்னை ஏற்றுக்கொள்ளாத சமாரியர்களை அவர் அழிக்காமல், பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடித்து, வேறோர் வழியாக எருசலேமிற்குப் போகிறார்.
முதல் வாசகத்தில் யோபு தனக்கு ஏற்பட்ட தொடர் துன்பங்களைக் கண்டு கடவுளைச் சபிக்கவில்லை. மாறாக, அவர் தான் பிறந்த நாளையே சபிக்கின்றார் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், யோபு தனக்கு வந்த தொடர் துன்பங்கள் நடுவிலும் பொறுமையோடு இருந்தார் என்று சொல்லலாம்.
கடவுளின் மக்களான நமக்குப் பொறுமை என்பது மிகவும் முக்கியம். அந்தப் பொறுமை நமக்கு இருந்தால், எவ்வளவு பெரிய துன்பத்தையும் அவமானத்தையும் நிராகரிப்பையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆண்டவர் இயேசுவும் தனக்கு வந்த துன்பங்களையெல்லாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். எனவே, இயேசுவைப் போன்று, யோபுவைப் போன்று நாம் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொண்டு கடவுளின் ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
பகைமை அழிவு வழிவகுக்கும்; பொறுமை வாழ்வுக்கு வழிவகுக்கும்.
தீமைக்குப் பதில் தீமை என்றால், இவ்வுலகில் யாரும் நிலைத்து நிற்க முடியாது.
பிறருடைய கருத்தும் மதிப்பளிப்பது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்’ (திபா 103:8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவரைப் போன்று பொறுமையோடும், பிறருடைய கருத்துக்கு மதிப்புத் தருபவர்களாகவும் இருந்து, கடவுளுக்கு ஏற்றவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed