இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம், சனவரி 25, இவ்வெள்ளி காலை 3.30 மணிக்கு, பானமா நகரின் Cinta Costera எனப்படும் Santa Maria La Antigua வளாகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள இந்த இடம், பானமா கால்வாய்க்கு கப்பல்கள் செல்லும் இடம், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள் என, பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறத்தாழ 2 இலட்சத்து 50 ஆயிரம் இளையோர், தங்கள் தங்கள் நாடுகளின் பெரிய கொடிகளை ஆட்டிக்கொண்டு ஆரவாரத்துடன் கூடியிருந்தனர். இவர்கள் மத்தியில் திறந்த காரில் வலம்வந்த திருத்தந்தை, 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். முதலில் இந்த உலக நாளின் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், பானமா பேராயர் ஹோசே தொமிங்கோ மெந்தியெட்டா அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர், ஐந்து இளையோர் பிரதிநிதிகள், கலாச்சார ஆடைகளை அணிந்துகொண்டு, தங்கள் நாட்டுக் கொடிகளுடன் மேடைக்குச் சென்று திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர்.
பானமாவின் பிரபலமான, ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டு மாற்றுத்திறனாளர் செசார் பாரியா உட்பட இளைஞர் விளையாட்டு வீரர்கள், கால்பந்து விளையாட்டு வீரர் ஃபெலிப்பே பலோய் விளையாட்டு வீரர் உட்பட, இளையோர் பிரதிநிதிகள், பானமா Guna பூர்வீக இனத்தவரின் கலைவண்ணமிக்க பெரிய விரிப்பை, நினைவுப் பரிசாக திருத்தந்தைக்கு வழங்கினர். பின்னர், எல் சால்வதோர், பெரு, ஹெய்ட்டி, மெக்சிகோ ஆகிய நாடுகளின் இளையோர் பிரதிநிதிகள், புனிதர்கள் ஆஸ்கர் ரொமேரோ, ரியோவின் ஜொசே சாங்க்செஸ், மார்ட்டின் தெ போரஸ், லீமா நகர் ரோஸ், ஜான்போஸ்கோ, திருத்தந்தை 2ம் ஜான் பால், ஹூவான் தியெகோ, அருளாளர் அருள்சடகோதரி மரிய ரொமேரோ ஆகிய உலக இளையோர் நாளின் பாதுகாவலர்களின் திருவுருவங்களை மேடைக்கு எடுத்துச் சென்றனர். அதன் பின்னர் திருத்தந்தையும், தன் உரையை வழங்கினார்.
Source: New feed