
அக்டோபர் 12, இச்சனிக்கிழமையன்று, பிரேசில் நாட்டின் பாதுகாவலராகிய Aparecida அன்னை மரியா விழா சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, இந்நாளின் காலை பொது அமர்வின் இடைவேளையில், பிரேசில் நாட்டு மக்களுக்கு தன் நல்வாழ்த்துக்களையும், ஆசீரையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
காணொளி வழியாக பிரேசில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, பிரேசிலில், பல்வேறு அரசியல், சமுதாய மற்றும், சூழலியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் முன்னேற இயலாமல் துன்புறும் அந்நாட்டினரின் அமைதி, மகிழ்வு மற்றும், நீதிப் பயணத்தில் அன்னை மரியா உதவுவாராக என்றும் செபித்தார்.
இன்னும், இக்காலை பொது அமர்வின் துவக்கச் செபத்தை வழிநடத்துவதாக இருந்த Manaus பேராயர் Sergio Eduardo Castriani அவர்கள், உடல்நலம் காரணமாக அவைக்கு வராததால், அவர் தயாரித்து வைத்திருந்த சிந்தனைகளை Manaus துணை ஆயர் José Albuquerque de Araújo அவர்கள் வாசித்தார்.
புத்தகங்களோ, வழிபாட்டுமுறைகளோ தேவைப்படாத மற்றும், ஏழைகளின் செபமாகிய அன்னை மரியாவை நோக்கிய செபமாலையை செபிக்கின்றோம், தனது திருப்பணியில் பெண்களை அங்கீகரிக்கும் திருஅவை, எப்போதும் ஓர் அன்னையாக இருந்து வழிநடத்துவாராக, Aparecida அன்னை மரியா நமக்காகப் பரிந்துபேசுவாராக என்று செபித்தார், ஆயர் José.
மனிதருக்கும், சூழலியலுக்கும் இடையேயுள்ள தொடர்பை வலியுறுத்தும் கல்வியின் அவசியம், சூழலியலைப் பாதுகாக்கும் பணிகள், பெண்களின் பங்கு, இறையழைத்தல்கள், புலம்பெயர்வோர் எண்கள் அல்ல, அமேசானியா வர்த்தக இடம் அல்ல, அப்பகுதியில் காலனி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற தலைப்புக்களில் இச்சனிக்கிழமை காலை பொது அமர்வுகளில் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
Source: New feed
