
புனித யோசேப்பைக் குறித்துத் திருவிவிலியத்தில் சொல்லப்படுகிற ஒரே பண்பு அவர் “நேர்மையாளர்” என்பதாகும்.
நேர்மையாளர் என்பதற்குத் திருவிவிலியம்
அ. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்
(திபா 112).
ஆ. அடுத்தவரிடம் இரக்கம் கொள்பவர் (திபா 122: 4).
ஆ. வறியோரின் தேவையைப் பூர்த்தி செய்பவர்
போன்ற பல அர்த்தங்களைத் தருகிறது. இதில் நேர்மையாளர் என்றால் அடுத்தவரிடம் இரக்கம் கொள்பவர் என்பதை மட்டும் இன்று நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.
இணைச் சட்ட நூல் 22: 20-21 – இல் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: “ஒரு பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால், அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டு வந்து, அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர்.”
மேற்கண்ட இறைவார்த்தை அல்லது மோசேயின் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் சிந்தித்துப் பார்த்தோமேயானால், யோசேப்பு தனக்கு மண ஒப்பந்தமான மரியா தன்னோடு கூடி வாழும் முன்பே கருவுற்றிருக்கின்றார் என்ற செய்தி தெரிந்ததும், அவரைக் கல்லால் எறிந்து கொன்றிருக்கலாம்! ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை. மாறாக யோசேப்பு மரியாவைத் தனியாக விலக்கிவிடத் திட்டமிடுகின்றார் (மத் 1: 19).
யோசேப்பு மரியாவை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார் என்பதைக் கொண்டே அவர் மரியாவின்மீது இரக்கம் காட்டினார் அல்லது அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். அப்படியானால் ஒருவர் மற்றவர்மீது இரக்கம் காட்டுகின்றபோது அல்லது மற்றவர் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும்போது அவர் நேர்மையாளராகின்றார் என்பது உறுதியாகிறது.
நமது குடும்ப வாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி மற்றவர்மீது இரக்கம் கொள்வதும, அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்கின்ற குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதும் மிகவும் இன்றியமையாதவை.
நமது இந்திய நாட்டில் தோன்றிய மிகப்பெரிய மகானாகிய கபீர்தாசருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது.
ஒருநாள் அவரைப் பார்க்க அவருடைய பக்தர்கள் சிலர் வந்தார்கள். அவரும் அவர்களுக்குப் பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார். எல்லாரும் போன பின்பு ஒருவர் மட்டும் அங்கு இருந்தார். அவருடைய முகத்தில் கலக்கம் தெரிந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கபீர்தாசர் அவரிடம், “உங்களுடைய குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா?” என்றார். அவரும் ஆம் என்பதுபோல் தலையை ஆட்டினார். பின்னர் கபீர்தாசர் அவரிடம், “சிறிது நேரம் இங்கு இருங்கள். உங்களுடைய குடும்பப் பிரச்சனை தீர நான் ஒரு வழி சொல்கிறேன்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுக் கபீர்தாசர் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து, ஒரு நூல் கண்டை எடுத்து, அதில் இருந்த சிக்கலைப் பிரித்து எடுக்கத் தொடங்கினார்.
மாலை நேரம் ஆனது. ஆனாலும் வெளியே நல்ல வெளிச்சமாக இருந்தது. அப்பொழுது அவர் தன் மனைவியிடம், “விளக்கை ஏற்றி வெளியே வை” என்றார். அவருடைய மனைவியும், ‘வெளியேதான் வெளிச்சமாக இருக்கிறதே! பிறகு எதற்கு விளக்கை ஏற்றி வெளியே வைக்க வேண்டும்?’ என்று கேட்காமல், அவர் சொன்னது போன்றே செய்தார்.
சிறிதுநேரம் கழித்துக் கபீர்தாசர், தன் மனைவியிடம், “இரண்டு குவளைகளில் தேநீர் கொண்டு வா” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தன் மனைவி கொண்டுவந்த தேநீர்க் குவளைகளில் ஒன்றை எடுத்துத் தன் பக்தருக்குக் கொடுத்து விட்டு, மற்றொன்றை அவர் பருகத் தொடங்கினார். பக்தரால் தேநீரைக் கொஞ்சம்கூடப் பருக முடியவில்லை. ஏனெனில் அதில் சர்க்கரை மிகுதியாக இருந்தது.
அந்நேரத்தில் கபீர்தாசரின் மனைவி அவரிடம், “தேநீரில் சர்க்கரையின் அளவு எப்படி இருக்கிறது?” என்று கேட்டதற்கு அவர், “தேநீரில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறது” என்றார்.
இவை எல்லாவற்றையும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்த கபீர்தாசரின் பக்தர், “வெளியே வெளிச்சமாக இருந்தபொழுதும் ‘விளக்கை ஏற்றி வெளியே வை’ என்று கபீர் தாசர் சொன்னதை அவர் மனைவி பெரிய குறையாகப் பார்க்கவில்லை. அதேநேரத்தில் தன் மனைவி கொண்டுவந்த தேநீரில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருந்தபொழுதும் அதைக் கபீர்தாசர் ஒரு பெரிய குறையாகப் பார்க்கவில்லை. அப்படியென்றால் ஒருவர் மற்றவரிடம் இருக்கும் குறைகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்வதுதான் இல்லற வாழ்க்கை” என்ற உண்மையை உணர்ந்தவராய், முகத்தில் தெளிவோடு அங்கிருந்து சென்றார்.
ஆம். இல்லற வாழ்க்கையில் மற்றவர் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. மாறாக, ஒருவர் மற்றவர் செய்யும் குறைகளைப் பொறுத்துக் கொண்டு, அவர்மீது இரக்கம் காட்டி வாழ்ந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்வோம்.
எனவே நேர்மையாளர் புனித யோசேப்பு தன் மனைவி மரியாவிடம் எப்படி இரக்கம் காட்டி வாழ்ந்தாரோ அப்படி நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பங்களில் மற்றவர் தவறு செய்தால், அவர்மீது இரக்கம் காட்டி நேர்மையாளர்களாம் வாழ்வோம்.
Source: New feed