
தவக்காலம் நான்காம் வாரம்
சனிக்கிழமை
I எரேமியா 11: 18-20
II யோவான் 7: 40-53
“கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை”
கோயிலில் காந்தியடிகள் புறக்கணிக்கப்படல்:
காந்தியடிகள் சிறுவனாக இருந்தபொழுது திருவிவிலியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை வாசிக்கத்தொடங்கினார். ஒருகட்டத்தில் திருவிவிலியம் அவரது உள்ளத்தைத் தொட, அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வெளிநாட்டு மறைப்பணியாளர் திருவழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தார். அவர் காந்தியடிகளைக் கண்டதும், வெளியே வந்து, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, காந்தியடிகள் அவரிடம், “நான் கிறிஸ்தவ மதத்தில் சேர விரும்புகின்றேன்” என்ற தன்னுடைய விருப்பத்தைச்சொன்னார். “உங்களைப் போன்றவர்களுக்கு இங்கு இடம் கிடையாது; நீங்கள் உங்களுடைய மக்களோடு சேர்ந்து வழிபட்டுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மறைப்பணியாளர் அவரை அனுப்பிவிட்டார். இதனால் கிறிஸ்தவராகி, இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு காணவேண்டும் என்ற மிகப்பெரிய கனவோடு வந்த காந்தியடிகள், கிறிஸ்தவத்துக்குள்ளும் வேறுபாடு இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தி, கிறிஸ்தவராக வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டார்.
ஒருவேளை கோயிலில் இருந்த மறைப்பணியாளர் மட்டும் காந்தியடிகளை வேறுபாடு பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டிருந்திருப்பார் (Our Daily Bread, March 6, 1994). நற்செய்தியில், “கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை” என்று பரிசேயர்களும் தலைமைக்குருக்களும் இயேசுவைப் புறக்கணிக்கின்றனர். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்களின் திருவிழாவின்போது இயேசு பேசியதைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் இவரே!” (இச 18: 15-18), “மெசியா இவரே”, “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?” என்று பேசிக்கொள்கின்றார்கள். இதனால் மக்கள் நடுவில் பிளவு ஏற்படுகின்றது.
இயேசு பெத்லகேமில் பிறந்தாலும், தன் பெற்றோரோடு எகிப்துக்குச் சென்று, தன்னைக் கொல்லமுயன்ற ஏரோது இறந்த பிறகு நாசேரத்தில் குடியேறி, நசரேயன் என அழைக்கப்பட்டார் (மத் 2: 13-23). இவையெல்லாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கலிலேயாவிலிருந்துதான் இறைவாக்கினர்கள் எலியாவும் (1 அர 17: 1), யோனாவும் (2 அர 14: 25) வந்திருந்தார்கள். இவை எதுவுமே தெரியாமல், இயேசுவை அவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பேசிய போதுதான், நிக்கதேம் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்கிறார். நாமும்கூட ஒருவரை முழுமையாக அறியாமல், முன்சார்பு எண்ணத்தோடு தீர்ப்பிடுகின்றோம். இத்தகைய போக்கை நாம் நம்மிடமிருந்து அகற்றுவோம்.
சிந்தனைக்கு:
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல், அவரைப் பற்றித் தீர்ப்பிடுவது குற்றம்.
முன்சார்ப்பு எண்ணங்களோடு வாழ்வது முழுமையான வாழ்வாக இருக்காது.
நீதியின்படி தீர்ப்பிடுங்கள் (இச 1: 16).
ஆன்றோர் வாக்கு:
‘முன்சார்பு எண்ணம் என்பது அறியாமையின் குழந்தை’ என்பார் வில்லியம் ஹஸ்லிட் என்ற அறிஞர். எனவே, ஒருவரைத் திறந்த மனத்தோடு ஏற்கப் பழகி, இறைவனுக்குகந்த வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
