
இலங்கையில், 2019ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்நாட்டுத் தலத்திருஅவை, மார்ச் 07, வருகிற ஞாயிறை, “கறுப்பு ஞாயிறாக” கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட, அரசுத்தலைவரின் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை, இந்த தாக்குதல்களுக்குப் பின்புலத்தில் இருந்து பணியாற்றிய, உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காட்டத் தவறிவிட்டது என்று, கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அறிக்கை தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும், இந்த கொடுமையான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும், இக்காரணத்திற்காகவே, ஆயர்களும், அருள்பணியாளர்களும், கறுப்பு ஞாயிறை அறிவித்துள்ளனர் என்றும், கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக, அந்நாட்டின் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சிறப்பு இறைவேண்டல்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், இந்த பிப்ரவரி 23ம் தேதி இலங்கை மக்களவையில், சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கையின் நகல் ஒன்றைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று, மூன்று ஆலயங்களையும், மூன்று ஆடம்பரப் பயணியர் விடுதிகளையும் தாக்கிய தற்கொலை குண்டுவெடிப்பு குழு ஒன்று, அந்நாட்டு தேசிய Thowheed Jamath இஸ்லாமிய அமைப்போடு தொடர்புடையது என்று கூறப்பட்டது. இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு, இரு நாள்கள் சென்று, இதற்கு, ஐஎஸ் இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்களில், குறைந்தது 279 பேர் உயிரிழந்தனர். இவை தொடர்பாக, 440 சாட்சிகளிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன.
Source: New feed
