
தவக்காலம் இரண்டாம் வாரம்
புதன்கிழமை
I எரேமியா 18: 18-20
II மத்தேயு 20: 17-28
“என் உயிரைப் போக்க குழி பறிக்கின்றார்கள்”
படைவீரருக்கு நம்பிக்கையூட்டிய படைத்தளபதி:
ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நடந்தபொழுது, ஸ்பெயின் நாட்டுப் படைவீரன் ஒருவன் அழுதுகொண்டிருந்தான். அதைக் கவனித்த ஸ்பெயின் நாட்டுப் படைத்தளபதி அவனிடம், “உனக்கு என்ன பிரச்சனை, நீ ஏன் அழுதுகொண்டிருக்கின்றாய்?” என்று கேட்க, அவன், “போரில் எதிரிநாட்டவரை எப்படி எதிர்கொள்வது என்பதை நினைக்கும்போது எனக்கு ஒரே அச்சமாக இருக்கின்றது. அதை நினைத்துத்தான் நான் அழுதுகொண்டிருக்கின்றேன்” என்றான்.
உடனே படைத்தளபதி அவனிடம், “நீ எதிரிநாட்டவரோடு போர்புரியும்பொழுது உனக்கு முன்பு நான் நிற்கின்றேன். ஒருவேளை எதிரிகள் உன்னைத் துப்பாக்கியால் தாக்க நேர்ந்தாலும், அது என்மேல்தான் விழும். அதனால் அஞ்சாதிரு” என்றார். அவர் அவனிடம் இவ்வாறு சொன்னதும், அவனுடைய முகத்தில் ஒருவிதமான மாற்றம் தெரிந்தது. அப்பொழுது அவர் அவனிடம், “உனக்குள் ஓர் ஆற்றல்மிக்க வீரன் ஒளிருந்திருக்கின்றான் என்பது எனக்குக் நன்றாகவே தெரிகின்றது. விரைவில் நான் அவனைப் பார்க்க விரும்புகின்றேன்” என்றார். இதற்குப் பிறகு அவன் நாட்டிற்காக மிகத்துணிச்சலாகப் போரிட்டு, வெற்றியைப் பெற்றுத்தந்தான்.
ஆம், எதிரிநாட்டவரோடு போரிடுவதற்கு அஞ்சிக்கொண்டிந்த படைவீரனிடம் படைத்தளபதி நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொன்னதும், துணிவோடு நாட்டிற்காகப் போரிட்டான். முதல்வாசகத்தில் எரேமியா எதிரிகள் தனக்கெதிராகச் செய்வதைக் குறித்து ஆண்டவரிடம் புலம்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். அவருக்கு ஆண்டவர் என்ன நம்பிக்கையூட்டும் செய்தியைச் சொன்னார் என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய முதல்வாசகத்தில், எரேமியா எதிரிகள் தனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யப் போவதாகவும், தன்மீது குற்றம்சாட்டப் போவதாகவும், தான் சொல்வதைக் கேட்காமல் இருக்கப் போவதாகவும் ஆண்டவரிடம் முறையிடுகின்றார். எரேமியாவின் இந்த முறையீடு ஐந்தாவது முறையீடாகும். முன்னதாக அவர் கீழ்க்கண்ட பகுதிகளில் ஆண்டவரிடம் முறையிட்டதைக் காணலாம் (எரே 11: 18-23, 12:1-5, 15:10-18, 17: 14-18, 20: 1-18). எரேமியா இவ்வாறு ஆண்டவர் முறையிடும்பொழுது, ஆண்டவர் அவரிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அதுதான்: “அவர்கள் முன் அஞ்சாதே! ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்” (எரே 1: 8) என்பதாகும்.
நற்செய்தியில் இயேசு தம் பாடுகளை சீடர்களிடம் முன்னறிவிக்கின்றார். இயேசு இறைவாக்கினர் எரேமியாவைப் போன்று தான் அடையவிருந்த பாடுகளை நினைத்துப் புலம்பவில்லை; மாறாக, அதைத் துணிவோடு எதிர்கொண்டார். நாமும் நமது வாழ்வில் வரும் துன்பங்களை நினைத்துப் புலம்பாமல், அவற்றை இயேசுவைப் போன்று துணிவோடு எதிர்கொள்வோம்.
சிந்தனைக்கு:
இறைபற்றுடன் வாழ விரும்புவோர் இன்னலுற்றுத்தான் ஆகவேண்டும் (2 திமொ 3: 12)
உலகில் உங்களுக்குத் துன்பங்கள் உண்டு, எனினும் துணிவோடிருங்கள் (யோவா 16: 33).
இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)
இறைவாக்கு:
‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?’ (உரோ 8: 31) என்பார் புனித பவுல். எனவே நாம் கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற உணர்வோடு துணிவோடு வாழ்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
