
பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21
அக்காலத்தில்
சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று அவர் கேட்க, அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
“ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “ஏழு” என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
“நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது”
பொதுக்காலம் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I தொடக்க நூல் 6: 5-8; 7: 1-5, 10
II மாற்கு 8: 14-21
“நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது”
எந்தவோர் எதிர்பார்ப்பின்றி காட்டப்படுவதுதான் இரக்கம்/ அருள்:
பெருங்குற்றம் செய்த பெண்மணி ஒருத்தி எலிசபெத் அரசியின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரித்தில் பேசிய எலிசபெத் அரசி, “நான் உன்னிடத்தில் நீதிக்குப் பதில் இரக்கம் காட்டி, உன் குற்றத்தை மன்னித்தால், நீ எனக்கு உண்மையுள்ள உதவியாளராய் இருப்பாயா?” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “நிபந்தனையோடு காட்டப்படுவதற்குப் பெயர் இரக்கமே அல்ல” என்றார். “அப்படியானால் உன்னிடத்தில் நான் எந்தவொரு நிபந்தனையுமின்றி இரக்கம் காட்டுகிறேன்” என்றார் எலிசபெத் அரசி. உடனே அந்தப் பெண்மணி, “எப்பொழுது நீங்கள் என்மீது எந்தவொரு நிபந்தனையுமின்றி இரக்கம் காட்டுவதாகச் சொன்னீர்களோ! அப்பொழுதே நான் இனிமேல் நான் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவியாளராக அல்ல, ஓர் அடிமையைப் போன்று பணிவிடை செய்ய முடிவெடுத்துவிட்டேன்” என்றார்.
ஆம், எலிசபெத் அரசி எந்தவொரு நிபந்தனையுமின்றிப் பெருங்குற்றம் செய்த பெண்மணியிடம் இரக்கம் காட்டியதால், அந்தப் பெண்மணி எலிசபெத் அரசிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் உண்மையாய் இருந்தார். முதல் வாசகத்தில், ஆண்டவரின் அருள் பார்வை நோவாவிற்குக் கிடைத்ததால், அவர் நேர்மையானவராகவும் குற்றமற்றவராகவும் இருக்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக மனம் வருந்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் ஏன் மனம்வருந்த வேண்டும் எனில், அவர் படைத்த மக்கள் அவரை மறந்து, உலகப் போக்கினாலான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதலாயே ஆகும் (எண் 25: திபா 106: 28-29). இது குறித்து புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறும்பொழுது, “உலகத்தோடு நட்புக் கொள்வது கடவுளைப் பகைப்பது ஆகும்” (யாக் 4: 4) என்பார்.
மக்களெல்லாம் கடவுளை மறந்து உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்தபொழுது நோவா மட்டும் நேர்மையானவராகவும் குற்றமற்றவராகவும் இருந்தார். இதனால் ஆண்டவரின் அருள் பார்வை அவருக்குக் கிடைக்கின்றது. மட்டுமல்லாமல் அவர் வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றப்படுகின்றார். நாமும் உலகப் போக்கில்லான வாழ்க்கை வாழாமல், ஆண்டவருக்குகந்த வாழ்க்கை வாழ்ந்தால், அவரது அருள் பார்வை நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
சிந்தனைக்கு
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24).
நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவா 15: 19).
நாம் நீதியின்படி தண்டனைக்குரியரானாலும், கடவுள் தம் இரக்கமிகுதியினால் நம்மை மீட்டார்.
இறைவாக்கு:
‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ (திபா 1: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவர் முன் நேர்மையாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
