
இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13
அக்காலத்தில்
பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
தன் சகோதரன்மீது கடுஞ்சினமுற்ற காயின்
பொதுக்காலம் ஆறாம் வாரம் திங்கட்கிழமை
I தொடக்க நூல் 4: 1-15, 25
II மாற்கு 8: 11-13
தன் சகோதரன்மீது கடுஞ்சினமுற்ற காயின்
சினம்கொள்ளும்பொழுது இடைவெளி மிகுதியாகும்:
துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் துறவி தன் சீடர்களிடம், “எதற்காக நமக்கு சினம் வருகின்றபொழுது கத்திப் பேசுகின்றோம்?” என்றார். உடனே ஒரு சீடர், “நாம் அமைதியை இழப்பதால் கத்திப் பேசுகின்றோம்” என்றார். “ஒருவர் தொலைவில் இருந்தால்தானே கத்திப் பேசவேண்டும்; நாம் சினங்கொள்ளக்கூடிய மனிதர் அருகிலேயே இருக்கும்பொழுது, அவரிடம் கத்திப்பேசவேண்டிய தேவையென்ன?” என்றார் துறவி. இதற்கு அந்தச் சீடரிடம் சரியான பதிலில்லை. மற்ற சீடர்களும் துறவி கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க முயன்றும் யாரும் சரியான பதிலளிக்கவில்லை.
அப்பொழுது துறவி அவர்களிடம், “சினம் வருகின்றபொழுது கத்திப் பேசக் காரணம், சினம் கொள்பவருக்கும், யார்மீது அவர் சினங்கொள்கின்றாரோ அவருக்கும் இடையே உள்ள இடைவெளி மிகுதியாகிவிடுகின்றது. அதனாலேயே அவர் கத்திப் பேசுகின்றார். அதே நேரத்தில் ஒருவர் எதிரே இருக்கும் மனிதரிடம் அன்புகொண்டிருக்கின்றார் எனில், அவர் கத்திப் பேசமாட்டார்; அமைதியாகத்தான் பேசுவார். ஏனெனில், இருவருக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறைவு” என்றார்.
ஆம், எப்பொழுதெல்லாம் நாம் சினம் கொள்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் நமக்கும் நம்மோடு இருக்கும் சகோதர் சகோதரிக்கும் இடையே உள்ள இடைவெளி மிகுதியாகின்றது. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் காயின் தன் சகோதரர் ஆபேல்மீது கடுஞ்சினம்கொண்டு, அவரைக் கொன்றுபோடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
காயின், ஆபேல் இருவரும் ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்த, ஆண்டவர் ஆபேலின் காணிக்கையை மட்டும் கண்ணோக்குகின்றார். ஆண்டவர் காயினின் காணிக்கையைக் கண்ணோக்காததால், காயின் ஆபேல்மீது கடுஞ்சினமுறுகின்றார்; இறுதியில் அவர் ஆபேலைக் கொலையும் செய்கின்றார்.
உண்மையில், காயின் ஆண்டவருக்கு உவப்புடைய விதமாய்க் காணிக்கை செலுத்தியிருந்தால், அவரது காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது அவர் உயர்வடைந்திருக்கலாம். அவர் கடவுளுக்கு உவப்புடைய விதமாய்க் காணிக்கை செலுத்தாததால் அவரது காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை; அவர் உயர்வடையவும் இல்லை. மாறாக, அவர் தன் சகோதரர் ஆபேல்மீது சினம்கொண்டு கொலை செய்கின்றார். கடவுளிடமிருந்து பிறந்தவர் பாவம் செய்வதில்லை என்பார் யோவான் (1 யோவா 3: 12). காயின் கடுஞ்சினம்கொண்டு ஆபேலைக் கொலை செய்ததால், அவர் கடவுளிடமிருந்து பிறக்கவில்லை என்பது உறுதியாகின்றது (யோவா 8: 44).
சிந்தனைக்கு:
நல்லுறவோடு செலுத்தப்படும் காணிக்கையே கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கும் (மத் 5: 21-26.
சினம் வருகின்றபொழுது பொறுமையாக இருந்துவிட்டால், நூறு நாள்களுக்குக் கவலையில்லாமல் இருக்கலாம் – சீனப் பழமொழி.
கையில் புண்களோடு எப்படி மற்றவரோடு கைகுலுக்க முடியாதோ, அப்படி உள்ளுக்குள் சினத்தை வைத்துகொண்டு நல்லவிதமாகப் பேச முடியாது.
இறைவாக்கு:
‘பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்’ (எபே 4: 26) என்பார் புனித பவுல். எனவே, நாம் சினத்தைத் தவிர்த்து, அன்போடு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed
