
பாஸ்கா காலம் முதல் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 16: 9-15
அறிவோம்; அறிவிப்போம்
நிகழ்வு
மிகப்பெரிய அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் ஸ்வார்த்மோர் என்ற கல்லூரில் (Swarthmore College) பேசுவதற்காகச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவரும் அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்தக் கல்லூரில் பேசுவதற்குச் சென்றிருந்தார்.
கல்லூரி அரங்கில் இருந்த எல்லாரும் இவர் என்ன பேசப்போகிறார் என்று ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது இவர், மேடையில் ஏறி, “பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். எல்லாரும் ஒருவினாடி அதிர்ந்துபோனார்கள். ‘என்ன இவர்! மிகப்பெரிய அறிவியல் மேதை என்றுதானே இவரைப் பேச அழைத்திருக்கின்றார்கள். ‘பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிவிட்டாரே!’ என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மீண்டுமாக மேடை ஏறினார். அரங்கில் இறந்தவர்கள் இப்பொழுது என்ன பேசப் போகிறார் என்று ஆர்வமாய் அவரைப் பார்த்தார்கள். இவரோ, “பேசுவதற்கு ஏதாவது இருந்தால், அப்பொழுது வந்து பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்கிவிட்டார். அரங்கில் இருந்தவர்களுக்கோ ஒரே ஏமாற்றமாகிப் போய்விட்டது. அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு அங்கிருந்து நகர்ந்துசென்றார்கள்.
இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஸ்வார்த்மோர் கல்லூரின் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், “இப்பொழுது என்னிடம் உங்களிடம் பேசுவதற்கு நிறைய இருக்கின்றது” என்றார். உடனே கல்லூரி முதல்வர், மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை விட்டு, எல்லாரையும் அரங்கத்திற்கு வரவழைத்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் அங்கு சென்று பேசினார். அவருடைய பேச்சைக் கேட்டு எல்லாரும் வியந்துபோனார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வேண்டுமானால், சில நேரங்களில் பேசுவதற்கும் அறிவிப்பதற்கும் பறைசாற்றுவதற்கும் எதுவும் இல்லாமல் போகலாம்; ஆனால், ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக நமக்கு பேசுவதற்கும் அறிவிப்பதற்கும் பறை சாற்றுவதற்கும் அவருடைய நற்செய்தி இருக்கின்றது. அந்த நற்செய்தியை நாம் படைப்பிற்கெல்லாம் அறிவிக்கவேண்டும். அதுதான் இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சீடர்களுக்கும் நமக்கும் கொடுக்கக்கூடிய கட்டளையாக இருக்கின்றது. அது குறித்து இப்போப்ழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையின்றி இருந்த இயேசுவின் சீடர்கள்
புனித மாற்கு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்கள் பலருக்குத் தோன்றுவதையும் இறுதியாக அவர் அவர்களுக்குக் கொடுக்கின்ற ‘நற்செய்தி அறிவிக்கவேண்டும்’ என்ற கட்டளையையும் எடுத்துச் சொல்கின்றது. மாற்கு நற்செய்தியில் இடம்பெறுகின்ற இப்பகுதி (மாற் 16: 9-20) இரண்டாம் நூற்றாண்டிலோ அல்லது அதற்குப் பின்னாலோ சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று திருவிவிலிய அறிஞர்கள் சொல்வார்கள் (Life Application New Testament Commentary – Bruce Barton, D.Min. Pg. 228). இது ஒரு பக்கம் இருந்தாலும், இப்பகுதி வழியாக இறைவன் நமக்குச் சொல்லக்கூடிய செய்தியை கருத்தில் கொள்வது நல்லது.
உயிர்த்த ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களுக்குத் தோன்றுகின்றபொழுது, அவரிடத்தில், தன்னுடைய உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாததை அவர் காண்கின்றார். குறிப்பாக உயிர்த்த ஆண்டவரை முதலில் காண்கின்ற மகதலா மரியா, அவரைப் பற்றிச் சீடர்களிடம் சொல்கின்றபொழுது, அவர்கள் நம்ப மறுக்கின்றார்கள். அதனால்தான் எம்மாவு நோக்கி இரண்டு சீடர்கள் செல்கின்றார்கள். மற்ற சீடர்கள்கூட இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாமல், கடின உள்ளத்தோடு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களைக் கடிந்துகொள்கின்றார்; அவர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார். அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு கட்டளையைத் தருகின்றார்.. அந்தக் கட்டளை என்ன என்று நாம் சிந்திப்போம்.
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
நம்பிக்கையின்றி இருந்த சீடர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய இயேசு அவர்களிடம், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று கூறுகின்றார். இயேசுவின் சீடர்கள் அவரைப் பற்றி, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிப்பதற்கு முன் அவரோடு இருந்தார்கள்; அறிந்தார்கள் (மாற்கு 3: 14). அதனால் அவர்கள் மிகச் சிறப்பாக இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தார்கள். நாமும் இயேசுவைப் பற்றி அறிவிக்கவேண்டும். அதற்கு நாம் அவரை அறிந்துகொள்வது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
ஆகையால், நாம் இயேசுவைப் பற்றி படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்க, அவரை ஆழமாய் அறிவோம். அறிந்த அவரை அடுத்தவருக்கும் அறிவிப்போம்.
சிந்தனை
‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ (1கொரி 9: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நற்செய்தி அறிவிப்பதை நம்முடைய கடமை என உணர்ந்து, நற்செய்தியை அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
