
பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம்
வியாழக்கிழமை
உரோமையர் 3: 21-30
நம்பிக்கையினாலேயே கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்
நிகழ்வு
வெப்பமண்டல நாடு (Tropical Country) ஒன்றில் மறைப்பரப்பு பணியைச் செய்துவந்தார் குருவானவர் ஒருவர். அவருடைய போதனையால் ஈர்க்கப்பட்டு, பலரும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அதில் பெண் ஒருவரும் அடங்குவார்.
அந்தப் பெண் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தாள். குறிப்பாக திருவிவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் அப்படியே நடக்கும் என உறுதியாக நம்பிவந்தாள். இப்படியிருக்கையில் திடீரென்று ஒருநாள் அந்தப் பெண்ணின் இரண்டு வயது மகன் நோய்வாய்ப்பட்டு, சாவின் விளிம்புவரைச் சென்றுவிட்டான். இதைப் பார்த்து மிகவும் பதறிப்போன அந்தப் பெண் தன்னுடைய மகனைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்த மருத்துவரிடம் ஓடினாள். மருத்துவர் அந்தப் பெண்ணின் மகனைச் சோதித்துப் பார்த்துவிட்டு, “பனிக்கட்டி இருந்தால் உன்னுடைய மகனைக் குணப்படுத்த முடியும்… இல்லையென்றால் காப்பாற்ற முடியாது” என்று சொல்லிவிட்டார்.
‘பனிக்கட்டிக்கு நான் எங்கே போவது…?’ என்று யோசித்த அந்தப் பெண், ‘குருவானவரிடம் சென்று என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, அவரை இறைவனிடம் மன்றாடச் சொன்னால், அவர் இறைவனிடம் மன்றாடி பனிக்கட்டியைப் பெற்றுத் தருவார். அதைக் கொண்டு என்னுடைய மகனை எளிதாகக் குணப்படுத்திவிடலாம்’ என்று நம்பிக்கையோடு குருவானவரை நோக்கி ஓடினாள். குருவானவரை அடைந்ததும், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “சுவாமி! நீங்கள் என் மகனுக்காகப் பனிக்கட்டி வேண்டுமென்று இறைவனிடம் உருக்குமாக வேண்டினால், அவர் வானத்திலிருந்து பனிக்கட்டிகளைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுவார். அவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் கொடுத்தால், அவர் என்னுடைய மகனை எளிதாகக் குணப்படுத்தி விடுவார்” என்றாள்.
குருவானவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். அவர் அந்தப் பெண்ணிடம் ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப் பெண் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் வானம் இருண்டு மழை கொட்டோ கொட்டெனக் கொட்டியது; அதுவும் சாதாரண மழையல்ல, ஆலங்கட்டி மழை. அவள் மிகவும் பூரித்துப்போய் தனக்கு முன்பாகக் கிடந்த ஆலங்கட்டிகளை அள்ளிக்கொண்டு மருத்துவரிடம் ஓடினாள். மருத்துவர் அவள் கொடுத்த ஆலங்கட்டிகளை, அவளுடைய மகனின் உடலில் வைக்க, அவனிடமிருந்த நோய் நீங்கியது.
‘நம்புகிறவர்க்கு எல்லாம் நிகழும்’ (மாற் 9: 23) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணி தன்னுடைய மகனுக்காகப் பனிக்கட்டி வேண்டி, இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடினார். அவர் மன்றாடியது போன்று பனிக்கட்டி கிடைத்தது. நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுகின்றபோது அல்லது அவரிடம் நம்பிக்கையோடு இருக்கின்றபோது, அவர்க்கு ஏற்புடையவர்களாவோம். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நம்பிக்கை கொள்வோர் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆகின்றனர்
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் யார் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார் என்ற கேள்விக்குப் பதில் தருகின்றார். கடவுளுக்கு ஏற்புடையவர் வேறு யாருமல்ல, அவர்மீது நம்பிக்கை கொள்பவரே ஆவார்.
இங்கு இயேசுவின்மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் புனித யாக்கோபு சொல்வது போன்று ‘பேய்கள்கூட கடவுளை நம்பி அஞ்சி நடுங்குகின்றன (யாக் 2: 19). அந்தத் பேய்கள் அல்லது சாத்தான்கள் கொள்ளக்கூடிய நம்பிக்கை போன்று நம்முடைய இருக்கக்கூடாது. நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும் (யாக 2:17). அப்பொழுதுதான் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறமுடியும். இல்லையென்றால், நம்மால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறமுடியாது.
இயேசு எல்லார்க்குக்கும் கடவுள்
ஒருவர் இயேசுவின்மீது கொள்ளும் (நற்செயல்களில் வெளிப்படும்) நம்பிக்கையினாலேயே கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் என்று சொன்ன புனித பவுல், அடுத்ததகாச் சொல்லக்கூடிய செய்திதான் இயேசு எல்லார்க்கும் கடவுள் என்பதாகும்.
இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் பாவிகள். ஏனெனில், எல்லாரும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தவர்கள். ஆகையால், பாவிகளை மீட்க இந்த உலகிற்கு வந்த இயேசு, நாமும் பாவிகள் என்ற வகையிலும் நம்மை மீட்க அவர் வந்தார் என்ற வகையிலும் அவர் எல்லார்க்கும் கடவுள் ஆகின்றார் என்பது உண்மையாகின்றது. எனவே, பாவிகள் யாவரையும் மீட்க வந்த இயேசுவின்மீது நாம் நம்பிக்கை கொண்டோம் எனில், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம் என்பது உறுதி.
சிந்தனை
‘நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்’ (எபி 11:2) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, அவர் மகன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
