
பல்வேறு வழிகளில் அழைக்கும் கடவுள், எல்லா நேரங்களிலும் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஓர் அர்ப்பணிக்கப்பட்ட துறவி, தன் வாழ்வில் கடவுள் தலையிடவும், அவரால் கேள்வி கேட்கப்படவும் அனுமதியாமல் இருப்பது, அவர் துறவு வாழ்வில் மகிழ்வற்று இருப்பதை வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.
தான் பலிகடாவாக ஆக்கப்படுகிறேன் என, தொடர்ந்து புகார் சொல்லும் துறவியர், அநீதிகளைச் சேமித்து வைப்பவர்கள் என்று கூறியத் திருத்தந்தை, இந்தச் ‘சிணுங்கல்’ மனநிலை, மனமாற்றத்தால் அகற்றப்பட வேண்டும் என்றும், குழு வாழ்வில் நுழைவதென்பது, தொடர்ந்து மனமாற்றம் அடைந்துகொண்டே இருப்பதற்குத் தயாரிப்பதாகும், ஏனெனில், இந்த மனநிலைக்கு, தாழ்ச்சி மிகவும் அவசியம் என்று கூறினார்.
தூதுரைப் பணியாளர்
தூதுரைப் பணியாளராய் வாழ்வது பற்றிப் பேசிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர், தங்களைப் பற்றி நினைக்காமல், சாட்சிய வாழ்வு வாழ்வது பற்றிச் சிந்திக்க வேண்டுமென்றும் கூறினார்.
அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளார் பரிந்துரைத்துள்ளதுபோன்று, மத மாற்றத்தில் ஈடுபடாமல், வார்த்தைகளைவிட வாழ்வால், இயேசுவைப் போதிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கப்புச்சின் துறவியர், தாழ்மையோடு மட்டுமல்லாமல், நடைமுறையில் வாழப்படும் ஏழ்மை நிலையோடும் சாட்சி பகருமாறு பரிந்துரைத்தார்.
திருஅவையில் உலகப்போக்கு
திருஅவையைச் சேதப்படுத்தும் உலகப்போக்கு பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இத்தகைய போக்கு திருஅவையைப் புண்படுத்துகிறது என்றும், இந்த தீமைக்கு எதிராய்ச் செயல்படுவதற்கு நமக்கு தாழ்ச்சி தேவை என்றும் கூறினார்.
மன்னிப்பதில் சோர்வடையாத கடவுள்
கடவுளின் இரக்கம் பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, கடவுள் மன்னிப்பதில் ஒருபோதும் தளர்வுறாதவர், நாம்தான் மன்னிப்பு கேட்பதில் சோர்வடைகிறோம் என்றும், புவனோஸ் அய்ரஸ் நகரில் வாழ்ந்த ஒரு வயதான கப்புச்சின் துறவியிடம் பல விசுவாசிகள் ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பார்கள், ஏனெனில் அவர், கடவுளின் இரக்கம் பற்றிய எந்தவித சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் தூதுரைப் பணி
இறுதியில் ஐரோப்பாவிற்கு, தூதுரைப் பணி அதிகம் தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இளம் திருஅவைகள், பழைய கண்டங்களுக்கு உதவி விசுவாசத்தை மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்க முடியும் என்றும், பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தை வியக்கும் இளையோரிடம், மகிழ்வும், எளிமையும் கலந்த சாட்சிய வாழ்வை வெளிப்படுத்துங்கள் என்றும், கப்புச்சின் துறவிகளிடம் கேட்டுக்கொண்டார்.
Source: New feed