
தனித்து வாழும் இம்மக்களின் கலாச்சாரத்தையும் தேவைகளையும் சரிவர உணர்ந்து உடனடி செயல்களில் திருஅவை ஈடுபட தவறும்போது, இம்மக்கள், ஏனைய குழுக்களால் பயன்படுத்தப்பட்டு, அவர்களது உரிமைகள் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று, இந்த மாமன்றத்தின் 5ம் அமர்வில் பேசப்பட்டது.
பழங்குடி மக்களின் நடுவே வாழும் பெண்கள் பெருமளவில் துன்பங்கள் அடைவதால், அவர்களிடையே பணியாற்ற, பெண் நற்செய்தி பணியாளர்கள் பெருமளவில் தேவைப்படுகின்றனர் என்று கூறிய மாமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினராக வாழும் பெண்கள், இத்தகையப் பணிகளுக்கென உருவாக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
திருத்தூதுப் பணியில் பொது நிலையினர்
அருள்பணியாளர்கள் மற்றும் தியாக்கோன்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பதால், பொது நிலையினர் நடுவே நற்செய்திப் பணிக்கும், திருத்தூதுப் பணிக்கும் தேவையானவர்களை உருவாக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திக் கூறினர்.
பழங்குடியின முகத்தைக் கொண்டுள்ள திருஅவை உருவாக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, பழங்குடியினரின் கலாச்சாரம், கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இறையியல் உருவாகும் வழிகள் குறித்து, மாமன்ற ஆயர்கள் இந்த 5ம் அமர்வில் விவாதங்கள் மேற்கொண்டனர்.
அதே வண்ணம், மேற்கத்திய மருத்துவ முறைகளுக்கு ஒரு மாற்றாக, பழங்குடியினரின் மருத்துவ முறைகளின் அவசியத்தை அமேசான் பகுதி மக்களுக்கு உணர்த்துவதும் முக்கியம் என்ற கருத்தும் இவ்வமர்வில் பேசப்பட்டது.
Source: New feed