
உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 46-50
அக்காலத்தில் தங்களுக்குள் பெரியவர் யார் என்ற விவாதம் சீடர்களிடையே எழுந்தது. இயேசு அவர்களின் எண்ணங்களை அறிந்து ஒரு சிறுபிள்ளையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, அவர்களிடம், “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்றார்.
யோவான் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.
இயேசு அவரை நோக்கி, “தடுக்க வேண்டாம்; ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்”
இங்கிலாந்தில் உள்ள ‘நோர்போக்’கில் (Norfolk) அரசாக இருந்தவர் தாமஸ் ஹோவர்ட். தான் அரசர் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லாமல் மிகவும் எளியவராய், காட்சி இனியவராய், தேவையில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்க்கு ஓடிச்சென்று உதவக் கூடியவராய் இருந்தார்.
ஒருநாள் இவர் தன்னுடைய அரண்மனைக்கு அருகாமையில் இருந்த இருப்பூர்தி நிலையத்தில் (Railway Station) அமர்ந்திருந்தார். அப்பொழுது ஓர் இளம்பெண் கையில் பெட்டியுடன் இருப்பூர்தியிலிருந்து கீழே இறங்கி வந்தார். அவர் அங்கிருந்த சுமைதூக்கும் தொழிலாளியிடம், “இங்கிருந்து இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பக்கத்திலுள்ள அரண்மனைக்கு செல்லவேண்டும். அதற்கு எவ்வளவு ஆகும்” என்று கேட்டார். அதற்கு அந்தச் சுமைதூக்கும் தொழிலாளி பெட்டியைத் தூக்கிப் பார்த்துவிட்டு, “பெட்டி மிகவும் கனமாக இருக்கின்றது. அதனால் இங்கிருந்து இப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அரண்மனைக்குச் செல்லவேண்டும் என்றால், ஐந்து ஷில்லிங் வேண்டும்” என்றார்.
இளம்பெண்ணோ தன்னிடம் எவ்வளவு ஷில்லிங் இருக்கின்றது என்று, தான் வைத்திருந்த கைப்பைக்குள் துலாவிப் பார்த்தார். அதில் ஒரே ஒரு ஷில்லிங்தான் இருந்தது. உடனே அவர் அந்தச் சுமைதூக்கும் தொழிலாளியிடம், “இப்பொழுது என்னிடம் ஒரே ஒரு ஷில்லிங்தான் இருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு இந்தப் பெட்டியை இங்கிருந்து தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு வரமுடியுமா?” என்று கேட்டார். அவரோ, “அதெல்லாம் கட்டுபடியாகாதம்மா” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து போனார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தாமஸ் ஹோவர்ட், அந்த இளம்பெண்ணிடம் சென்று, “அம்மா! நீங்கள் எங்கு செல்லவேண்டும்? உங்கட்கு நான் எவ்வாறு உதவவேண்டும்?” என்று கேட்டார். உடனே அந்த இளம்பெண், நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, “ஐயா! நான் பக்கத்திலுள்ள அரண்மனைக்குச் செல்லவேண்டும். என்னிடமிடமுள்ள இந்தப் பெட்டியை அரண்மனைவரைக்கும் தூக்கிக்கொண்டு வரமுடியுமா?” என்று கேட்டார். தாமஸ் ஹோவர்டோ தன்னை யாரென்று அவரிடம் காட்டிக்கொள்ளாமல், “தாராளமாகத் தூக்கிக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் பின்னாலேயே நடந்து சென்றார்.
வழியில் தாமஸ் ஹோவர்ட் அவரிடம், “என்ன விசயமாக அரண்மனைக்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார். “அரண்மனையில் பணிப்பெண்ணாக இருக்க ஆள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதனால்தான் நான் அங்கு செல்கின்றேன்” என்றார் அவர். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டு செல்லும்போது, அரண்மனை வந்துவிட்டது. அரண்மனை வந்ததும் அந்த இளம்பெண் தன்னுடைய பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த மனிதர்க்கு ஒரு ஷில்லிங் கொடுத்துவிட்டு அவர்க்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார்.
அடுத்தநாள் அவர் அரசரைப் பார்ப்பதற்காக அவருடைய அறைக்கு வந்தபோது, அங்கு முந்தைய நாளில், யார் தன்னுடைய பெட்டியை இருப்பூர்தி நிலையத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்தாரோ, அவர் வீற்றிருப்பதைக் கண்டு அதிர்ந்து போய், “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். தெரியாமல் இப்படிச் செய்துவிட்டேன்” என்றார். அதற்கு தாமஸ் ஹோவர்ட், “இனிமேல் நீங்கள் இந்த அரண்மனையில் பணிசெய்யப்போகிறீர்கள். இந்த ஒருமுறை உங்கட்கு நான் பணிவிடை செய்ய ஒரு வாய்ப்பினைத் தந்தீர்களே. அதற்கு நன்றி” என்றார்.
பெரிய அரசராக இருந்தாலும், அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல், சாதாரண ஒருவர்க்கு சேவை செய்த நோர்போக் அரசர் நமது கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் சீடர்கள் நடுவில் யார் பெரியவர் என்ற விவாதம் வருகின்றபோது, இயேசு அவர்களிடம், “உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர்” என்கின்றார். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதம்.
இயேசு தன் பாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய சீடர்களோ தங்கட்குள் யார் பெரியவர் விவாதம் செய்துகொண்டிருக்கின்றார்கள். சீடர்கள் இவ்வாறு விவாதிப்பதற்குக் காரணம், இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசு தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்றுபேரை மலைக்குக் கூட்டிக்கொண்டு செல்வார். இதன்பொருட்டு மற்ற ஒன்பது பேர், அந்த மூன்றுபேர் மேல் பொறாமை கொண்டு இப்படியொரு விவாதத்தில் ஈடுபடுவார்கள். அவர்களுடைய விவாதத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவென்றால், இயேசு பேதுருவை அழைத்து, கோவில் வரி செலுத்த அனுப்பி வைத்தார் (மத் 17: 24-27). இதனாலும் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் பொறாமை கொண்டு தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டார்கள்.
ஒருவர் மற்றவரிடம் அன்பு இல்லை.
சீடர்கள் இப்படி தங்கட்குள் யார் பெரியவர் என்ற விவாதித்த்தற்கு மிக முக்கியமான காரணம், அவர்களிடம் ஒருவர் மற்றவர்மீது அன்பு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை அவர்களிடம் உண்மையான அன்பு இருந்திருந்தால், அவர்கள் இப்படி விவாதித்திருக்க மாட்டார்கள். சீடர்கள் இப்படி விவாதிக்கத் தொடங்கியதும், இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி அவர்கட்குப் பாடம் புகட்டுகின்றார். மட்டுமல்லாமல், பெரியவராக இருக்க விரும்புகிறவர் சிறியவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும் என்கின்றார். நாம்கூடப் பலநேரங்களில் இயேசுவின் சீடர்களைப் போன்று யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கின்றோம். இத்தகைய நிலை நம்மிடமிருந்து மாறவேண்டும்.
ஒருவருடைய பெருமை அவர் வகித்திருக்கும் பதவியில் இல்லை, அவர் அந்தப் பதவியைக் கொண்டு எப்படி பணிவிடை செய்கின்றார் என்பதில் அடக்கியிருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டால் நாம், யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டிருக்கமாட்டோம்.
சிந்தனை.
‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற 121 குறளுக்கு விளக்கமளிக்கின்றபோது கலைஞர் கருணாநிதி, “அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும்” என்பார். நாம் அடக்கத்தோடும் பணிவோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
