
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 19-21
அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் இயேசுவிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.
“உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அவருக்கு அறிவித்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர்க்குக் கிடைக்கும் பேறு.
அது ஒரு கிறிஸ்தவக் கிராமம். அந்தக் கிராமத்தில் செவிலித்தாய் ஒருவர் இருந்தார். அவர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் தவறாது கலந்துகொள்வார். மட்டுமல்லாமல், தன்னை நாடுவோர்க்கு முகம் கோணாமல் உதவி செய்வார்.
‘மிகவும் கைராசியான மருத்துவச்சி’ என்று மக்களிடம் பெயர் எடுத்த இவர், இரவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓடிச் சென்று மக்கட்கு மருத்துவ உதவிகளைச் செய்வார். காய்ச்சல், தலைவலி முதற்கொண்டு பிரசவம் பார்த்தல் வரை நிறைய மருத்துவ உதவிகளை இவர் மக்கட்குச் செய்துவந்தார். இவற்றிற்கெல்லாம் இவர் மக்களிடமிருந்து மிகவும் சொற்பமான தொகையையே பெற்றுவந்தார்; சமயங்களில் கட்டணம்கூட வசூலிக்காமல் மருத்துவ உதவிகளைச் செய்துவந்தார்.
இவர் செய்துவந்த மருத்துவ உதவிகளைக் கவனித்து வந்த பெரியவர் ஒருவர், “தாயே! கடவுளுக்குத் தெரியும் நீங்கள் செய்துவரும் இந்த மருத்துவ உதவி எத்துணை உயர்ந்து என்று! அப்படியிருக்கும்போது இன்னும் ஏன் மிகவும் சொற்பமான தொகையை வசூலித்து வருகிறீர்கள்… இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் தொகையை வசூலிக்கலாம் அல்லவா?” என்றார். “நான் ஆற்றி வருகின்ற இந்த மருத்துவச் சேவை எத்துணை உயர்ந்தது என்று கடவுளுக்குத் தெரியுமல்லவா! அதுவே போதும். கூடுதலாகக் கண்டனம் வசூலித்து நான் என்ன செய்யப் போகிறேன்” என்று கனிந்த உள்ளத்தோடு சொன்னார் அந்தச் செவிலித்தாய்.
பெயர்க்கு கிறிஸ்தவராக இருந்துவிடாமல், உள்ளார்ந்த அன்போடும் வாஞ்சையோடும் மருத்துவ உதவிகளைச் செய்துவரும் இந்தச் செவிலித்தாய் உண்மையிலேயே இயேசுவின் உண்மையான உறவினர் என்றால் அது மிகையாகாது. நற்செய்தி வாசகம், இயேசுவின் உண்மையான உறவினர் யார் என்ற கேள்விக்கு விடையாக அமைகின்றது. எனவே, அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு மதிமயங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கவரும் உறவுகள்.
ஆண்டவர் இயேசு, இறையாட்சிப் பணியை ஓய்வில்லாமலும் உண்பதற்குக்கூட நேரமில்லாமலும் செய்துவந்தார். ஆனால், மக்களோ ‘இவர் மதிமயங்கி விட்டார்’ என்றும் மறைநூல் அறிஞர்களோ ‘இவர் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார்’ என்றும் விமர்சித்தார்கள். இச்செய்தி இயேசுவின் தாய்க்கும் அவருடைய உறவினர்கட்கும் தெரிய வர, அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போக அவரிடம் வருகின்றார்கள்.
இந்த இடத்தில் இயேசு உதிர்கின்ற வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்னம், இயேசுவின் உறவினர்களிடம் இருந்த குறையை அல்லது செய்த தவறை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்ன தவறு எனில், மக்கள் இயேசுவைக் குறித்து பலவாறாக பேசினாலும், ‘இயேசு அப்படிப்பட்டவர் கிடையாது’ என்று அவர்கள் அதைப் புறக்கணித்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அதைப் புறக்கணியாமல், மக்கள் பேசிக்கொண்டது உண்மையாக இருக்குமோ என்று நம்பியதும், நம்பியதோடு மட்டுமல்லாமல், இயேசுவைப் பிடித்துக்கொண்டு போக அவரைத் தேடி வந்ததும்தான், அவர்கள் செய்த மிகப்பெரிய தவறுகளாகும்.
இறைவார்த்தையைக் கேட்டு நடப்போரே உண்மையான உறவினர்கள்.
தன்னுடைய உறவினர்கள் எதற்காகத் தன்னைத் தேடி வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகின்றவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்” என்கின்றார்.
இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் முதலாவது கருத்து, இயேசுவின் இரத்த உறவுகளாகவே இருந்தாலும், அவர்கள் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கவில்லை என்றால், அவர்கள் இயேசுவின் உண்மையான உறவினர்களாக இருக்க முடியாது என்பதாகும். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒருவகையில் இயேசுவுக்கு உறவினர்களாக இருந்திருக்கலாம். அப்படியிருந்தும் அவர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்காமலேயே இருந்தார்கள். எப்படி இன்றைக்கு ஒருசில கிறிஸ்தவர்கள் பெயரளவுக்குக் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு, கிறிஸ்துவின் விழுமியங்கட்கு எதிராகச் செயல்படுகின்றார்களோ, அப்படி இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த யூதர்கள் இயேசுவின் வார்த்தையைக் கேட்காமல், அதன்படி செயல்படாமல் வாழ்ந்து வந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவின் உறவினர்களாக மாறமுடியாது என்பது உண்மை.
இயேசு சொன்னதில் இருக்கும் இரண்டாவது கருத்து, ஒருவர் இயேசுவுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தார் எனில், அவர் இயேசுவின் உண்மையான உறவினர். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறையாட்சிக் குடும்பத்தில் இயேசுவின் இரத்த உறவுகளை விட, அவருடைய வார்த்தையின்படி நடப்பவர்களே, அவருடைய உண்மையான உறவினர்கள் ஆவார்கள். நாம் இயேசுவின் உண்மையான உறவினர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை.
‘நன்றாகச் சிந்திப்பதை விடவும் நன்றாகச் செயல்படுவது மேலானது’ என்பார் ஹோரஸ் மேன் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இறைவார்த்தைக்குச் செயல்வடிவம் கொடுக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
