
பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம்
திங்கட்கிழமை
லூக்கா 4: 16-30
இயேசுவின் மகத்துவம் அறியாதவர்கள்
நிகழ்வு
இத்தாலி நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய இசைமேதை கியோசினோ ரோச்சினி (Gioachino Rossini). இவருடைய இசையால் பெரிதும் கவரப்பட்ட பிரான்ஸ் நாட்டு அரசர், இவர்க்கு விலையுயர்ந்த ஒரு கைக் கடிகாரத்தைப் பரிசாக அளித்தார். கியோசினோ ரோச்சினியும் அதை மிகப்பெரிய கவரவமாக நினைத்துத் தன்னுடைய கையில் அணிந்துகொண்டார்.
நாள்கள் சென்றன. ஒருநாள் கியோசினோ ரோச்சினி தன்னுடைய நெருங்கிய நண்பரோடு பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் இடையில் தன்னுடைய கையில் அணிந்திருந்த கைக் கடிகாரத்தை அவரிடம் காட்டி, “இது பிரான்ஸ் நாட்டு அரசர் எனக்குப் பரிசளித்தது… மிகவும் விலையுயர்ந்தது” என்றார். அந்தக் கைகடிகாரத்தை உற்றுக்கவனித்த கியோசினோ ரோச்சினியின் நண்பர் அவரிடம், “நண்பா! அந்தக் கைகடிகாரத்தை என்னிடம் கொடுங்கள்…அது ஏதோ வித்தியாசமான கைக் கைகாரம் போல் தெரிகின்றது” என்றார்.
கியோசினோ ரோச்சினி தன்னுடைய கைக்கடிகாரத்தை அவரிடம் கழற்றிக் கொடுத்ததும், அவர், அதைப் பின்பக்கமாகத் திருப்பி, பக்கவாட்டில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார். மறுகணம் அந்தக் கைக்கடிகாரம் சற்று விரிந்தது. அதில் கியோசினோ ரோச்சினியின் உருவம் அற்புதமாக வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு கியோசினோ ரோச்சினி, “இத்தனை நாள்களும் இந்தக் கைக்கடிகாரத்தின் மகத்துவம் தெரியாமல் பயன்படுத்தி இருக்கின்றேன்… இப்பொழுதுதான் இதன் மகத்துவம் புரிகின்றது” என்று தன் நண்பர்க்கு நன்றி சொன்னார்.
கியோசினோ ரோச்சினி எப்படி பிரான்சு நாட்டு அரசர் தனக்குக் கொடுத்த கைக்கடிகாரத்தின் மகத்துவம் தெரியாமல் பயன்படுத்தினாரோ, அதுபோன்று இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவருடைய மகத்துவத்தையும் மேன்மையும் தெரியாமல் அவரைப் புறக்கணித்தார்கள். நற்செய்தி வாசகத்தில் இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசேரத்துக்கு வந்து, தொழுகைக் கூடத்தில் கற்பிக்கின்றபோது, அங்கிருந்தவர்கள் அவரைப் புறக்கணிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் மகத்துவம் தெரியாத நாசரேத்து மக்கள்
இயேசு தன்னுடைய வழக்கத்தின்படி, ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்கு வந்து கற்பிக்கத் தொடங்குகின்றார். அவருடைய வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த மக்கள், சிறிதுநேரத்தில், ‘இவர் யோசேப்பின் மகனல்லவா” என்று புறக்கணிக்கத் தொடங்குகின்றார்.
இயேசுவின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல், நாசரேத்தைச் சார்ந்த மக்கள் புறக்கணித்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் அவரை மனிதக் கண்ணோட்டத்தோடு பார்த்ததுதான், வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவருடைய வெளித்தோற்றம், அவருடைய குடும்பப் பின்னணி… இவற்றைக் கொண்டு அவரைப் பார்த்தார்கள். அதனால்தான் அவர்கள் அவருடைய மகத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல் புறக்கணித்தார்கள்.
இயேசுவின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல் நாசரேத்து மக்கள் அவரைப் புறக்கணித்ததற்கு மற்றுமொரு காரணம், இயேசு தன்னுடைய பணி யூதர்கட்கு மட்டுமல்லாது, எல்லா மக்கட்கும் இருக்கும் என்று சொன்னதால் ஆகும். எப்படி இறைவாக்கினர் எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணிடையே அனுப்பப்பட்டரோ (1அர 17: 8-16) எப்படி இறைவாக்கினர் எலிசா சிரியாவைச் சார்ந்த நாமானை நலப்படுத்தினாரோ, அதுபோன்று தானும் எல்லா மக்கட்கு மத்தியிலும் பணிசெய்வேன் என்று சொன்னதால், மக்கள் அவரைப் புறக்கணிக்கின்றார்கள்; அவரை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடவும் பார்க்கின்றார்கள்.
ஒரு புத்தகத்தை அதன் உறையை வைத்துத் தீர்ப்பிடவேண்டாம்
அன்று நாசரேத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இயேசுவை அவருடைய வெளித்தோற்றத்தை வைத்துத் தீர்ப்பிட்டார்களோ, அதுபோன்றுதான் இன்றைக்குப் பலர், இறையடியார்க்ளையும் கலைஞர்களையும் திறமைசாலிகளையும் அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்துத் தீர்ப்பிடும் அல்லது மதிப்பிடும் போக்கானது நிலவிக் கொண்டிருக்கின்றது.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு, “Dont Judge a Book by its cover.” இதனை தமிழில் ‘ஒரு புத்தகத்தை அதன் உறையை வைத்துத் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்லலாம். எப்படி புத்தகத்தினுள் இதுதான் இருகின்றது என்று அதன் உறையைப் பார்த்து சொல்வது எவ்வளவு முதிர்ச்சியற்ற தன்மையோ, அதுபோன்று இவர் இப்படித்தான் என்று அவருடைய வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதும். இயேசுவை நாசரேத்தைச் சார்ந்த மக்கள் அவருடைய வெளித்தோற்றத்தை, அவருடைய குடும்பப் பின்னணியை வைத்து மதிப்பிட்டதால் எப்படி அவருடைய மகத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல் போனார்களோ அதுபோன்று நாமும் ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்டுக் கொண்டிருந்தால், அவருடைய மகத்துவத்தை உணர்ந்துகொள்ளாமலே போய்விடுவோம்.
ஆகையால், இத்தகைய தவறுகளை இனிமேலும் செய்யாமல், ஒருவரை அப்படியே ஏற்றுக்கொண்டு, அவருடைய திறமைகளைப் பாராட்டும் நல்ல மனதோடு வாழ்வோம்.
சிந்தனை
‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் (1 சாமு16:7) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், ஆண்டவரைப் போன்று மனிதர்களின் அகத்தைப் பார்த்து, அவர்கட்கு உரிய மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
