
தான் என்னும் உணர்வை விட்டு நாம் நீங்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் நமக்கே நாம் இறந்தாக வேண்டும். அதாவது, நம் ஆன்ம புலன்களின் செயல்பாடுகளையும் சரீரப் புலன்களையும் மறுக்க வேண்டும். நாம் எதையும் கேளாதவர்களைப் போல் கேட்க வேண்டும். இவ்வுலக பொருட்களை உபயோகியாதவர்களைப்போல் அவற்றை உபயோகிக்க வேண்டும். (1 கொரி. 7.29-30).
புனித சின்னப்பர் இதையே “தினமும் உயிரை விடுகிறேன் (1 கொரி. 15:31) என்கிறார். கோதுமை மணி நிலத்தில் விழுந்து மடியாவிட்டால் அது தனியே இருக்கிறது. எந்த நற்பலனையும் அது கொடுப்பதில்லை (அரு. 12,24-25). நமக்கு நாம் சாகாமலும், மிகப் புனிதமான நம் பக்தி முயற்சிகள் இந்த அவசியமான, பலன் விளைவிக்கும் மரணத்துக்கு நம்மைக் கொண்டுவராமலும் இருந்தால், நாம் ஒரு நற்பலனையும் கொடுக்க மாட்டோம்.
நம் பக்தி முயற்சிகள் யாவும் நமக்குப் பயனற்றுப் போகும். நம் நற்செயல்கள் எல்லாம் சுய நலத்தாலும் சுய விருப்பத்தாலும் கறைப்பட்டு விடும். நாம் செய்யும் மிகச்சிறந்த செயல்களையும் நம் மிகப் பெரும் பரித்தியாகங்களையும் கடவுள் அருவருப்பாகக் காண்பார். இதன் விளைவாக நம் மரண சமயத்தில் எந்தப் பேறு பலனும் புண்ணியமும் நம்மிடம் இல்லாதிருக்கக் காண்போம். தங்களுக்குத்தானே மரித்து, சேசு கிறிஸ்துவுடன் கடவுளில் மறைந்த வாழ்வையுடைய ஆன்மாக்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் தூய அன்பின் ஒரு பொறி கூட நம்மிடம் இல்லை என்று அப்போது காண்போம்.
மாமரியின் பக்தி முயற்சிகளுள், எது அதிக நிச்சயமாக நமக்கு நாமே இறக்கும்படி செய்யுமோ, அந்த பக்தி முயற்சியே மிகச்சிறந்தது என்றும், அதிக அர்ச்சிப்பைத் தருவது என்றும், நாம் கொள்ள வேண்டும். ஏனென்றால் மின்னுவதெல்லாம் பொன் என்றும், தித்திப்பதெல்லாம் தேன் என்றும் எண்ணக்கூடாது.
செய்வதற்கு எளிதாயும் பெருந்தொகையினரால் கைக்கொள்ளப்படுவதாயும் இருக்கின்றவைகள் அதிக அர்ச்சிப்பைத் தரும் எனக் கருதக்கூடாது. இயற்கையிலே சில இரகசியங்கள் உள்ளன. அவை சில காரியங்களை துரிதமாயும் குறைந்த செலவிலும் எளிதாயும் செய்ய நமக்கு உதவுகின்றன.
அதுபோலவே வரப்பிரசாத முறையிலும் சுபாவத்துக்கு மேலான காரியங்களை துரிதமாயும் இனிமையுடனும் எளிதாகவும் செய்ய நமக்கு உதவும் இரகசியங்கள் உள்ளன. சுயத்தை அழித்தல், கடவுளால் நம்மை நிறைத்தல், உத்தமதானம் அடைதல் ஆகிய காரியங்களை நாம் இவ்வாறு எளிதில் அடைய முடியும்.
Source: New feed
