
வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7
அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.
மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
“தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்”
ஒரு சமயம் அமெரிக்கா ஐக்கிய மாகாணத்திலிருந்து சீனாவிற்குக் கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலின் மேல்தளத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் வணிகர். இன்னொருவர் கத்தோலிகக் குருவானவர்.
இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேட்டறிந்த பின், வணிகர் குருவானவரிடம் இவ்வாறு சொன்னார்: “ஐயா! நீங்கள் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்வதால் இந்த உண்மையை உங்களிடம் சொல்கிறேன்… சில ஆண்டுகட்கு முன்னம், மர்பி என்று ஒரு குருவானவர் சீனாவிற்குச் சென்று நற்செய்தி அறிவித்துக்கொண்டிருந்தார். மிகச் சிறப்பான முறையில் நற்செய்தியை அறிவித்து வந்த அவரை சில கயவர்கள் தூக்கிக்கொண்டுபோய் பணம் தருமாறு மிரட்டினார். அவர்கள் கேட்ட பணம் வருவதற்குக் காலதாமதம் ஏற்படவே அவர்கள் அந்தக் குருவானவருடைய விரலை வெட்டி எறிந்தார்கள். பணம் வருவதற்கு மூன்று வாரங்கள் ஆனதால், அவரைத் தூக்கிக்கொண்டு போனவர்கள் அவருடைய மூன்று விரல்களை வெட்டி எறிந்திருந்தார்கள். பணம் வந்தபின்னே அவர்கள் அவரை விடுதலை செய்தார்கள். இப்பொழுது அந்தக் குருவானவர் அவருடைய சொந்த நாட்டிற்குப் போய்விட்டார் என்று நினைக்கிறேன். ஆகையால் நீங்கள் சீனாவில் நற்செய்தி அறிவிக்கும்போது கவனமாக இருங்கள்.”
வணிகர் இவ்வாறு சொன்னதையடுத்து குருவானவர் அவரிடம் ஏதோ சொல்வதற்கு வாயை எடுத்தார். அதற்குள் சாப்பாட்டிற்கான மணி ஒலிக்கவே, இருவரும் விடைபெறத் தொடங்கினர். இருவரும் அவ்வாறு விடைபெறும்போது, தங்களுடைய கைகளைக் கொடுத்துவிட்டு விடைபெற்றனர். வணிகர் அவசரமாக குருவானவரிடமிருந்து விடைபெற்றதால், அவருடைய கையில் மூன்று விரல்கள் இல்லாதது அவர்க்குத் தெரியவில்லை.
ஆம், சீனாவிற்கு மீண்டுமாகச் சென்றுகொண்டிருந்த அந்தக் குருவானவர்தான் தன்னுடைய மூன்று விரல்களையும் இழந்தவர். அப்படியிருந்தும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், சீனாவில் உள்ள எல்லாரும் ஆண்டவரின் நற்செய்தி அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் துணிவோடு சென்றுகொண்டிருந்தார்.
‘கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்’ (2 திமொ 1:7) என்பார் பவுல். பவுலின் இவ்வார்த்தைகட்கு ஏற்ப, வல்லமை/துணிவுள்ள உள்ளத்தோடு மர்பி என்ற அந்தக் குருவானவர் சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தம்மோடு இருக்கவும் நற்செய்தி அறிவிக்கவும் துணிவுள்ள பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமென்ன, அவர்கள் வழியாக இயேசு செய்தது என்ன என்று இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
தம்மோடு இருக்க.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு பன்னிரு சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு சீடர்களை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணம் இன்றைய நற்செய்தியில் சரியாகச் சொல்லப்படாவிட்டாலும், மாற்கு நற்செய்தியில் (3:14), தம்மோடு இருக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் இயேசு பன்னிருவரை நியமித்தார் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றது.
சீடர்கள் என்றால், அடிப்படையில் கற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒருவர் (இயேசுவின்) சீடராக இருக்கமுடியாது. மேலும் கற்றுகொள்வது நிகழவேண்டும் என்றால், சீடர் குருவோடு இருக்கவேண்டும். அதைத்தான் மாற்கு நற்செய்தியாளர், தம்மோடு இருக்க இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று பதிவுசெய்கின்றார். இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து நிறையக் கற்றுக்கொண்டார்கள்.
நற்செய்தியைப் பறைசாற்ற.
இயேசு பன்னிருவரைத் தம்மோடு இருக்க தேர்ந்தெடுத்தது என்பது முதல்படி என்றால், நற்செய்தி அறிவிக்க என்பது இரண்டாவது படி. இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து, நிறையக் கற்றிருக்கவேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டத்தை அவருடைய சீடர்கள் மற்றவர்க்கும் அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் சீடத்துவ வாழ்வானது முழுமை பெறும்.
இயேசு தன்னுடைய சீடர்கள் தன்னோடு இருந்து ஓரளவு பயிற்சி பெற்றதைத் தொடர்ந்து, அவர் அவர்கட்கு பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் அதிகாரம் கொடுத்து, அவர்களை விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்க மக்கள் மத்தியில் அனுப்பி வைக்கின்றார். அவர்களும் மக்களிடம் சென்று விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார்கள். அப்படியானால், இயேசுவின் வழியில் நடக்கின்ற அவருடைய சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்தபின்பு அவரைப் பற்றி மக்கட்கு அறிவிப்பது கடமையாகும்.
சிந்தனை.
Source: New feed
