
இயேசுவின் திரு இருதயம் தேவ சித்தத்திற்கு அமைதலைக் கற்பிக்கிறது.
இயேசு கிறிஸ்து வாழ்நாள் முழுவதும் தமது பிதாவின் திருச்சித்தத்திற்கு அமைந்து ஆண்டவருடைய சம்மதமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் நடைபெறகிறதில்லையென்றும், எல்லாச் செபங்களும் சிறிதோ, பெரிதோ அவருடைய மகிமைக்காகவும் ஆத்தும் மீட்புக்காகவும் நடந்தேறுகிறதென்றும், அவருடைய அளவிட முடியாத அன்பு நிறைந்த இருதயத்தை நாம் பார்க்க வேண்டுமென்று திவ்விய இரட்சகர் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்.
இயேசுவை சிலுவையிலறைய கையளிக்கக் கூடாதென்றும் தடுக்க பிரயாசப்பட்ட அர்ச். பேதுருவை திவ்விய இயேசு கண்டித்து “என் பிதாவினால் எனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை நான் குடிக்கமாட்டேனே சுவாமி?” என்று திருவுளம் பற்றுகிறார் (அருள்.18:11 தமது பாடுகளின்போது தமது பிதாவை மகிமைப்படுத்தி அவருடைய விருப்பத்துக்கு தம்மை ஒப்புக் கொடுக்கிறார். “என் விருப்பப்படியல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று பேரொலியிடுகிறார். (லூக்22:42)
நமக்கு இவ்வுலகத்தில் நடக்கிறதெதுவும் தற்செயலல்ல, சர்வேசுரனுடைய சம்மதத்தால் நடக்கிறதென்று விசுவாசப்பற்றுதலோடு நினைத்து விசுவசிக்க வேண்டியது. “நன்மையான காரியங்களும், கெடுதலான காரியங்களும் வாழ்வும், சாவும் ஆண்டவரிடமிருந்து வருகிறது” (சர்வப்பிர. 11:14) மழை அல்லது வறட்சி, செளக்கியம் அசெளக்கியம், செல்வம் தரித்திரம், சகலமும் நம்முடைய ஆண்டவரிட மிருந்து வருகிறது. நமக்கு வரும் சகல சோதனைகள், சிலுவைகள், துன்ப வருத்தங்கள் இன்னும் அவதூறு பற்பல வேதனைகள் எல்லாம் ஆண்டவருடைய உத்தரவால் நடக்கிறது. குற்றவாளிகளை அவர் தண்டிக்கிறாரென்பதற்கு யாதொரு சந்தேகமேயில்லை.
வேத கட்டளைகளை யூதர்கள் மீறினதற்கு ஆக்கினையாக அவர்களைப் பிலிஸ்தீனியர்களும் அஸ்ஸிரியர்களும் எதிர்த்துச் சண்டை செய்து, அவர்களுடைய வீடுகளையும், பட்டணங்களையும் சுட்டெறித்து வெறுமையாக்கி, அவர்களில் பலரையும் கொல்லும்படி சர்வேசுரன் உடனே உத்தரவளித்தார். தம்மால் அன்பு செய்யப்பட்ட ஜனங்கள் அக்கிரம் பாதையில் பிரவேசியாதபடி தடுத்து, உண்மையான தேவ ஊழியத்துக்கு வரும்படி அவர் எடுத்த முயற்சி இதுவே. இந்த முயற்சி அவர்கள் பேரில் அவர் வைத்த இரக்கத்துக்கும், அன்புக்கும் எடுத்துக்காட்டு என்பதற்குச் சந்தேகமில்லை.
தூயவரான யோபு என்பவருடைய சொத்துக்களெல்லாம் திடீரென்று அழிந்த மாத்திரத்தில் அவர் தம்முடைய விரோதிகளை யென்கிலும் அல்லது பசாசையென்கிலும் குற்றம் சாட்டவில்லை. உடனே ஆண்டவரை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஆண்டவர் அறிவித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார் : ஆண்டவரது பெயர் போற்றப்படக்கடவது. (யோபு.1:21) என்றார். அப்படியே நாமும் செல்வாக்கோ தரித்திரமோ, செளக்கியமோ அசௌக்கியமோ, அநுகூலமோ பிரதி கூலமோ, எல்லாம் சர்வேசுரன் நம்முடைய நன்மைக்காக வரவிடுகிறாரென்றும், நமது ஆத்தும் மீட்புக்கு மிகவும் பிரயோசனமானவையென்றும் ஏற்றுக்கொண்டு இயேசுவின் திரு இருதயத்துக்கு மிகவும் நன்றியறிந்திருப்போமாக. இப்போது மோட்சபாக்கியத்தை அனுபவிக்கும் பல ஆத்துமாக்கள் அநுகூலமடைந்திருக்கிறார்கள்.
புனித . கூரேதர்ஸ் இதுகாரியத்தில் சொல்லுகிறதென்னவென்றால்: தமது நண்பர்களுக்கு இயேசு கொடுக்கிற கொடை சிலுவையே. அது யாரிடத்திலிருந்து வருகிறதென்று நாம் பார்க்கக்கூடாது. நம்முடைய அன்பை ஆண்டவருக்கு நாம் காண்பித்து நித்திய மோட்ச சம்பாவனையை அடைவதற்கு ஏற்ற வழியாக அதை ஆண்டவர் நமக்கு அனுப்புகிறார்.
இயேசுவின் திருஇருதயப் பக்தியை பரவச் செய்ய வெகு உதவியான சில வழிகளை புனித. மார்கரீத் மரியம்மாள் 1688-ம் வருஷம் பாப்பானவரிடம் கேட்டபோது அவர் உத்தரவு கொடாததினால் புனிதை மிகவும் துன்பப்பட்டார். அச்சமயம் ஆண்டவர் அவளுக்குத் தம்மைக் காண்பித்து, “மகளே, கவலைப்படாதே. நீ கேட்டது நடைபெறாதது நம்முடைய மகிமைக்காகத்தான். தற்சமயம் வெளிப்படையான வழிபாடுகளில்லாமலே ஆத்துமாக்கள் நம்மை அன்பு செய்து ஆவலுள்ளவைகளாயிருக்கின்றன. ஆனால் இந்த ஆவல் சீக்கிரம் தணிந்து போகும். அப்போது இருதயங்களில் அன்பு சுடர்விடும்படி நீ கேட்ட சுதந்தரங்கள் மாத்திரமல்ல, அவைகளிலும் பெரியவைகளை பாப்பாண்டவர் வழியாய் உனக்குக் கிடைக்கத் தயை புரிவோம்” என்றார்.
தேவசித்தத்துக்கு அமைதல் என்னும் புண்ணியத்தைப்போல் நமது ஆண்டவருக்குப் பிரியமானது வேறொன்றுமில்லை. உரோமாபுரி இயேசுசபை மடத்தில் செலஸ்தினி என்ற துறவி ஒருவர் வியாதிப்பட்டுச் சாகுந்தருவாயிலிருந்தார். வைத்தியர், அவர் கூடிய சீக்கிரம் இறந்து போவாரென்று தீர்மானித்தார். இன்று நாம் கொண்டாடுகிற பெரிய புனிதர் ஞானப்பிரகாசியார் துறவிக்கு தம்மைக் காண்பித்து, பிரிய சகோதரரே, உமக்கு குணம்பெற ஆசையா? அல்லது சாகப் பிரியமா? என, துறவி கேட்டார். “தேவ சித்தமே எனக்குப் பிரியம்” என்றார் புனிதர். புன்னகை கொண்டு மிகுந்த பட்சத்தோடு, தேவ சித்தம் தவிர வேறோர் ஆசையும் உமக்கில்லாததாக நீர் சொன்னது நமது ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறதென்றால், நீர் திரும்பவும் வாழ்ந்து அவருடைய திரு இருதய பக்தியை விர்த்தி செய்ய உழைக்கும்படியாய் அவர் உமக்கு உத்தரவு கொடுக்கிறார் என்றார்.
ஒரு துறவற சகோதரிக்கு முழுதும் கண் தெரியாமல் போய்விட்டது. யாராகிலும் தன் மேல் பரிதாபப்படுகிறதாக கண்டால், “என்மேல் பரிதாபப்படாதேயுங்கள். உலக காரியங்களையும், பிரகாசத்தையும் நான் பார்ப்பதினால் எனக்கு உண்டாகும் சந்தோஷத்தை நமது ஆண்டவர் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், என்னுடைய கண்கள் மோட்சத்தில் அவருடைய திரு இருதயத்தின் தெய்வீக ஜோதி வடிவை கண்டு களிக்கும்படியாகவேயன்றி மற்றப்படியல்ல. தவிர, இவ்வுலகத்தில் ஒரே ஒரு பொல்லாப்பு உண்டு. அது பாவம். சிலுவைகளும், துன்பங்களும், தேவாசீர்வாதத்தின் அடையாளங்கள். அவைகள் பாக்கியமேயொழிய பொல்லாப்பல்ல” என்று மறுமொழி சொல்லுவாள்.
இயேசுவின் திருஇருதயப் பக்தியை துறவறவாசிகளிடத்திலும், இல்லறவாசிகளிடத்திலும் வளர செய்ய தமது வாழ்நாளெல்லாம் உழைத்த இயேசுசபை ருசின் குரு சாகும் படுக்கையிலிருக்கும்போது, ஆ! இயேசுவின் திருஇருதயம் அநுபவித்த வேதனைகளோடு நாம் படும் வேதனைகளையும் ஒன்றுபடுத்தி அவைகளை நமது சம்பாவனையாக மாற்றுகிறது எவ்வளவு இன்பமானது என்று அடிக்கடி அவர் சொல்லுகிற சப்தம் மற்றவர்கள் காதில் விழும். அவர் அனுபவித்த பயங்கரமான வேதனை வெகு உக்கிரமாயும் சகிக்கக்கூடாததாயும் இருக்கும்போது தமது திருஇருதயத்தைக் காட்டும் பாவனையாக அவருக்கு முன்னாலிருந்த திவ்விய இரசகருடைய படத்தைப் பார்ப்பார். எல்லா வேதனைகளையும் மறந்தவராய், சாது அமரிக்கையோடு புன்னகை கொள்வார். அவர் புத்தி சுயாதீனத்தைச் சற்று இழந்தவராகத் தெரிந்த அந்த நேரத்திலும், இயேசுவின் திருஇருதயம் என்கிற நாமத்தைச் சொன்னாலே போதும். உடனே அன்பு பற்றுதலோடு அவ்இனிய நாமத்தை உச்சரிப்பார். தாம் முழுவதும் புத்தி சுயாதீனம் இழந்த சில சமயங்களில் இயேசுவின் திரு இருதயத்தில் கண்டடையும் அருட்கொடைகளை கிறிஸ்துவர்கள் நன்றாய்க் கண்டுபிடிக்கச் செய்வதற்கு உதவியான புது வழிகளையும், சுதந்திரங்களையும் பாப்பானவரிடம் கெஞ்சிக் கேட்கும்படி உரோமாபுரிக்குப் போகவேண்டுமென்று சொல்லிக்கொண்டே படுக்கையைவிட்டு எழுந்திருக்கப் பிரயாசைப்படுவார். கடைசியாய் தனது கண்கள் ஆண்டவருடைய திருஇருதயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சமாதான ஐக்கியமாய் மரித்தார்.
நாமும் தேவ சித்தத்துக்கு முழுதும் அமைந்த மனதோடு இயேசுவின் திரு இருதய சகலத்தையும் ஏற்றுக் கொள்வோமாக. நமது உத்தமதனம், தேவசித்தத்துக்கு அமைந்து நடத்தலிலேதான் அடங்கியிருக்கிறது. அப்போதுதான் ஒரு பாசமுள்ள அரசனைப் போல் நமது ஆண்டவர் நமது ஆத்துமத்தில் அரசாள்வார். சகலத்திலும் ஆண்டவருடைய திருக்கரத்தையும் இருதயத்தையும் காண்போமேயாகில் சோதனைகள் நடுவிலும் வேதனைகள் நடுவிலும் நம்முடைய இருதயம் அமைதியாயிருக்கும்.
Source: New feed
