
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-19
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் நிறைவேற்ற வந்த இயேசு.
முன்பொரு காலத்தில் ஒரு விறகுவெட்டி இருந்தார். அவர் தன்னுடைய ஊர்க்கும் பக்கத்து ஊர்க்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த ஆற்றினை மக்கள் அனைவரும் எளிதாகக் கடக்கும் வகையில் மரப்பாலம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தார். அதற்கு நிறையப் பலகைகள் தேவைப்பட்டன. அதனால் அவரும் அவருடைய மகனும் சேர்ந்து ஊர்க்கு வெளியே இருந்த காட்டிற்குச் சென்று, பெரிய பெரிய மரங்களை வெட்டத் தொடங்கினர். இப்படியே மரப்பால வேலைகள் மெல்ல நடந்தன.
ஒருநாள் அவரும் அவருடைய மகனும் காட்டிற்குச் சென்று, சற்றுத் தள்ளித் தள்ளி மரங்களை வெட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விறகுவெட்டியின் காலில் விழுந்தது. இதனால் அவர் பயங்கர சத்தம்போட்டுக் கீழே விழுந்தார். ‘தன்னுடைய தந்தைக்கு ஏதோ ஆயிற்று’ என்று அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த அந்த விறகுவெட்டியின் மகன் அவருடைய காலில் பெரியதொரு மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதைத் தன்னால் முடிந்த மட்டும் நகர்த்திப் பார்த்தான். அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் ஒரு சிறு அடிகூட மரத்தை நகர்த்த முடியவில்லை.
இந்நிலையில் விறகுவெட்டி தன்னுடைய மகனிடம், “தம்பி! இதோ ஒரு வழித்தடம் தெரிகிறது அல்லவா. இந்த வழித்தடத்தில் அப்படியே நடந்துபோய்க்கொண்டிருந்தால் ஓர் ஊர் வரும். அந்த ஊரின் நுழைவாயிலருகே ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் பயில்வான் ஒருவர் இருப்பார். அவரிடம் எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையைச் சொல்லி, அவரை விரைவாக அழைத்துக் கொண்டு வா” என்றார். அவனும் வேகமாகச் சென்று, ஊரின் நுழைவாயிலின் அருகில் இருந்த வீட்டினுள்ளே சென்று, அங்கிருந்த பயில்வானிடம் நடந்ததை எல்லாம் சொன்னான். பயில்வான் அந்த விறகுவெட்டியின் மகன் சொன்னதைக் கேட்டு ஒருநிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அவனிடம், “தம்பி உன்னிடத்தில் நான் ஓர் உண்மையைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். எங்கள் ஊரில் திருவிழா தொடங்கிவிட்டார்கள். எனவே, திருவிழா நடைபெறும் இந்தப் பத்து நாட்கட்கு யாரும் ஊரைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மீறி யாராவது ஊரை விட்டு வெளியே சென்றால், அவர்களை ஊரைவிட்டே தள்ளி வைத்துவிடுவார்கள்” என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து பேசினார்: “தம்பி ஊர்க்கட்டுப்பாடு ஒருபக்கம் இருக்கட்டும். ஆபத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் உன் தந்தையை நான் காப்பாற்ற வருகிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் விறகுவெட்டியின் மகனுக்குப் பின்னாலேயே சென்று, மரக்கிளை காலில் விழுந்து கிடந்த நிலையில் வலியால் துடித்துக்கொண்டிருந்த விறகுவெட்டியின் அருகே சென்றார். பின்னர் அவர் விறகுவெட்டியிடம், “நான் இந்த மரக்கிளையைச் சற்றுத் தூக்கிப் பிடிக்கின்ற இடைவெளியில் நீ உன்னுடைய காலை எடுத்துவிடு” என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்ல, பயில்வான் மரக்கிளையை சற்றுத் தூக்கிப்பிடித்தார். இந்த இடைவெளியில் விறகுவேட்டி மரக்கிளைக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்த தன்னுடைய காலை வெளியே எடுத்தார். அவர் காலை வெளியே எடுத்ததுதான் தாமதம், மரக்கிளையின் பாரம் தாங்காமல் பயில்வான் அதைத் தன் கால்களிலேயே போட்டுக்கொண்டார். இதனால் அவருடைய கால்கள் முறிந்துபோயின.
‘நமக்கு உதவ வந்தவர்க்கு இப்படியொரு நிலைமையா?’ என்று விறகுவெட்டி மிகவும் பதறினார். உடனே அவரும் அவருடைய மகனும் அருகாமையில் இருந்த வைத்திய சாலைக்கு அவரைத் தூக்கிக்கொண்டு ஓடினர். அங்கு பயில்வானுடைய கால்களைச் சோதித்துப் பார்த்த வைத்தியர், கால்களை சரிசெய்ய முடியாது என்று கைவிரித்துவிட, பயில்வான் கால்கள் முறிந்த நிலையில் அவருடைய வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பயில்வான் ஊர்க்கட்டுப்பாட்டை மீறி திருவிழா நாட்களில் ஊரைவிட்டு வெளியே சென்றதால், ஊர்நிர்வாகம் அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது. இதனால் அவர் தனியாக வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
செய்தி அறிந்த விறகுவெட்டி தன்னால் மிகவும் பாதிப்புக்குள்ளான பயில்வானைப் பார்க்கவந்தார். அப்பொழுது பயில்வான் விறகுவெட்டியிடம், “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இப்பொழுது நான் தனிமையை அதிகமாக உணர்கிறேன். அதனால் நீ உனக்கு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் என்னப் பார்க்க வருவாயா?” என்றார். விறகுவெட்டியும் அதற்குச் சரியென்று சொல்லி, தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பார்க்க வந்தார்.
திருவிழா நாட்களில் ஊரைவிட்டு போகக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தாலும், ஆபத்தில் இருந்த விறகுவெட்டிக்கு உதவச் சென்ற அந்தப் பயில்வான், ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது நோய்வாய்ப்பட்டுக் கிடந்த பலரையும் குணப்படுத்திய இயேசுவை நமக்கு நினைவுபடுத்துகின்றார்.
திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்த இயேசு.
நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “திருச்சட்டத்தை அழிப்பதற்கு அல்ல, அதை நிறைவேற்றவே வந்தேன்” என்கின்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் பலரும் அதிலும் குறிப்பாக பரிசேயக்கூட்டம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டு, இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகிறார் என்பதாகும். உண்மையில் இயேசு திருச்சட்டத்தை மீறவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே செய்தார் (கலா 4:4-5).
அப்படியானால் பரிசேயர்கள் சொல்வது போன்று இயேசு சட்டத்தை மீறவில்லையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு மீறியதெல்லாம் மனிதர்கள் உருவாக்கிய அறிவுக்கு ஒவ்வாத, நடைமுறைக்குச் சாத்தியப்படாத சட்டங்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால் இயேசு திருச்சட்டத்தின் நிறைவாகிய அன்பை (கலா 5:14) எல்லார்க்கும் வழங்கி அதை நிறைவேற்றினார். இவ்வாறு அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றுபவர் ஆனார்.
சிந்தனை.
‘உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வயாக’ என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவுபெறுகின்றது’ (கலா 5:14) என்பார் பவுல். ஆண்டவர் இயேசுவும் அன்பை மட்டும்தான் எல்லார்க்கும் காட்டி திருச்சட்டத்தை நிறைவேற்றினார். நாமும் அவர் வழியில் நடந்து அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வோம்; அறிவுக்கு ஒவ்வாக சாத்திர சம்பிரதாயங்களைப் புறக்கணிப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed