
தூய பர்னபாவின் விழா
இன்று திருச்சபையானது தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. தூய பர்னபா திருத்தூதர்களின் அணியில் இடம்பெறாவிட்டாலும், ஒரு திருத்தூதரைப் போன்று தொடக்கத் திருச்சபையில் பற்பல பணிகளை ஆற்றியவர்; மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவர்.
தூய பர்னபாவைக் குறித்து வாசிக்கும்போது ‘இவர் நல்லவர், தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்” என்று அறிகின்றோம். (திப 11:24), அதேபோன்று அந்தியோக்கு நகரில் இயேசுவைப் பின்பற்றக்கூடியவர்களின் எண்ணிக்கை பெருகியபோது பர்னபாதான் அங்கு சென்று, இறைமக்களைத் தேற்றுக்கிறார்; அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
முன்னதாக இவர் தன்னுடைய நிலத்தை விற்று, அதிலிருந்து வந்த வருமானத்தை திருதூதர்களின் காலடியில் வைத்தார், திருதூதர்கள் அந்த பணத்தை தேவையில் இருந்தோருக்குப் பகிர்ந்தளித்தார் என்றும் வாசிக்கின்றோம் (திப 4: 36-37). மேலும் இவர் இயேசுவின் எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
தூய பர்னபா ஆற்றிய நற்செய்திப் பணிகள் ஏராளம். இவர்தான் சவுலாக இருந்த பவுலை திருதூதர்களிடமும், இறைமக்கள் கூட்டத்திடமும் அறிமுகப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாது. அதன்பின்னர் பவுலோடு பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதில் உறுதுணையாக இருந்தார்; அவரோடு எல்லா துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தார்.
வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இவர் கி.பி. 61 ஆம் ஆண்டு உரோமைக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது யூதர்களால் கொல்லப்பட்டார் என்றும், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்தான் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அறிகின்றோம். இவ்வாறு அவர் ஆண்டவர் இயேசு சொன்னதுபோன்று உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவித்து, கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாகத் திகழ்ந்தார்.
தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவரது விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். தொடக்கத்திலே சொன்னோம் பர்னபா தன்னுடைய நிலத்தை விற்று அதிலிருந்து வந்த தொகையை திருதூதர்களின் காலடியில் வைக்க, அதை அவர்கள் தேவையில் இருப்போருக்கு பகிர்ந்தளித்தார்கள் என்று. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கொடுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்கிறார். ஆகவே, நம்மிடத்தில் கொடுக்கக்கூடிய மனநிலை அதுவும் தேவையில் இருப்போருக்குக் கொடுக்கக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ முயல்வதுதான் தூய பர்னபாவின் விழா நமக்கு எடுத்துரைக்கும் செய்தியாக இருக்கும் என நம்பலாம்.
இன்றைக்கு நம்மிடத்தில் கொடுக்கக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். ஏதோ இயற்கைப் பேரிடர் என்றால் உதவ முன்வருகின்றோம். ஆனால் மற்ற நேரங்களில் நம்மிடம் பிறருக்குக் கொடுக்கும் மனநிலை அடியோடு மறைந்துபோய்விடுகிறது. எல்லாச் சூழ்நிலையிலும் கொடுப்பதுதான் மிகச் சிறந்த கொடையாகும்.
அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய வள்ளல் ராக்பெல்லர். அவர் பெரிய கோடிஸ்வரர், ஸ்டாண்டர்ட் ஆயில் கார்பரேசன் நிறுவத்தின் உரிமையாளர். அவர் தன்னுடைய நண்பர்கள், ஊழியர்களிடத்தில் அடிக்கடி சொல்வார். “மக்கள் நம்மிடத்தில் எண்ணெய் வாங்கி, வாங்கி நம்மை கோடிஸ்வரராக்கி விட்டார்கள். அவர்கள் எப்போது நம்மைப் போன்று கோடிஸ்வரர் ஆவது” என்று.
மக்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகமாக இருந்தது. அதனால் அவர் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு உதவினார்; ஏழை எளிய மக்களுக்கு உதவி வந்தார்.
ஒருநாள் அவரைச் சந்திக்க அவருடைய நெருங்கிய நண்பர் வந்திருந்தார். அவர் ஒரு மருத்துவர். அவர் தான் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்து, அதை அவரிடம் பரிசாகக் கொடுத்தார். அந்த புத்தகத்தில் நூற்றுக்கணக்கான நோய்களுக்கு மருத்துவக் குறிப்புகள், மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் இருந்தன. அதைப் பார்த்த ராக்பெல்லர் தன்னுடைய நண்பரிடம், “இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்துகளை வாங்குவதற்கும், மருத்துவம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் எல்லா உதவிகளை செய்கிறேன்” என்று வாக்களித்து, உடனே 2 லட்சம் பவுண்டுகளை அவர்களிடம் கொடுத்தார்.
தேவையில் இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்பதில் ராக்பெல்லர் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
ஆகவே தூய பர்னபாவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று தேவையில் இருப்பவருக்கு உதவுவோம். தளர்ந்திருப்போரை ஊக்கப்படுத்துவோம், இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். இயேசுவின் உண்மையான ஊழியனாக இருந்து அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed