
இத்தாலியிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் கழகத்தின் ஏறத்தாழ நானூறு உறுப்பினர்களை, மே 18, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மைக்குத் தொண்டாற்றவும், அதைக் கட்டியெழுப்பவும், ஊடகவியலாளர்கள், தாழ்மையும், சுதந்திரமுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், இவ்வுலகில் மறக்கப்பட்ட நிலையிலுள்ள போர்களையும், மத்தியதரைக் கடல், ஒரு கல்லறைத் தோட்டமாக மாறி வருவதையும், ஊடகவியலாளர்கள் மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வெறுப்பைத் தூண்டும் மற்றும் போலியான செய்திகள் நிறைய பரவிவரும் இக்காலத்தில், ஊடகவியலாளரின் பணிக்கு, தாழ்மைப் பண்பு முக்கியம் என்றும், தாழ்மைப் பண்புள்ள ஊடகவியலாளர், செய்திகளைப் பிரசுரிப்பதற்கு முன்பாக, அவற்றிலுள்ள சரியான உண்மைகளை அறிந்துகொள்ள முயற்சி செய்வார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
தாழ்மையான ஊடகவியலாளர், சுதந்திரமாகச் செயல்படுவார்கள் என்றும், தவறான செய்திகள் என்ற அழுகிய உணவை விற்காமல், உண்மை என்ற நல்ல உணவை வழங்குவார்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, உலகில் துன்புறும் ஏராளமான மக்களை நினைவுகூருமாறு கேட்டுக்கொண்டார்.
துன்புறும் மக்களை….
உலகின் பல்வேறு இடங்களில் ஊடகவியலாளர் கொல்லப்படுவது குறித்த புள்ளிவிவரங்கள் பற்றியும் கேள்விப்படுகிறேன், ஒரு நாட்டின் நல்வாழ்வுக்கு, பத்திரிகை சுதந்திரமும், பேச்சு சுதந்திரமும் முக்கியம் என்றும் திருத்தந்தை கூறினார்.
Rohingya அல்லது யஜிதிகள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக அறிகிறேன், இயற்கைப் பேரிடர்கள், போர்கள், பயங்கரவாதம், பசி, தாகம் போன்றவற்றால் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் மக்கள், எண்கள் அல்ல, மாறாக, ஒரு முகத்தை, ஒரு வரலாற்றை, மகிழ்வைத் தேடும் மனிதர்கள் என்பது மறக்கப்படாதிருக்க உதவுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
தீமை, அதிகச் செய்திகளைப் பரப்பினாலும், நல்ல செய்திகளை வழங்குவது முக்கியம் என்றும், சமுதாய வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், படங்கள் போன்றவற்றில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுமாறும், உண்மை மற்றும் நீதியின் அடிப்படையில் பணியாற்றுங்கள் என்றும், திருத்தந்தை வலியுறுத்தினார்.
Source: New feed
