
மே 21 : நற்செய்தி வாசகம்
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 18-21
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உலகு உங்களை வெறுக்கிறது என்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கடைப்பிடித்திருந்தால்தானே உங்கள் வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்! என் பெயரின் பொருட்டு உங்களை இப்படியெல்லாம் நடத்துவார்கள். ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
“வெறுக்கும் உலகம்”
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 16: 1-10
II யோவான் 15: 18-21
“வெறுக்கும் உலகம்”
இறையடியார்கள் அனுபவிக்கும் துன்பம்:
அது ஒரு பழமையான பங்குத்தளம். அங்கு எந்த அருள்பணியாளர் போனாலும், அந்த அருள்பணியாளர் நீண்ட நாள்களுக்குப் பணிசெய்ய முடியாது. அந்த அளவுக்கு அந்தப் பங்குத்தளத்தில் இருந்த மக்கள் அருள்பணியாளர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தார்கள். இதையெல்லாம் பார்த்த மறைமாவட்ட ஆயர் அந்தப் பங்குத்தளத்தில் ஓர் இளம் அருள்பணியாளரைப் பங்குப் பணியாளராக நியமித்தார்.
இளம் அருள்பணியாளரோ கடவுள் தனக்கு ஆற்றலையும் ஞானத்தையும் கொண்டு அந்தப் பங்கைத் திறம்பட வழிநடத்திச் சென்றார். இது பலருக்கும் வியப்பைத் தந்தது. ஒருநாள் அவரைப் பார்க்க அவருக்கு மிகவும் தெரிந்த, அதே நேரத்தில் வயதான அருள் பணியாளர் ஒருவர் வந்தார். அவர் அந்த இளம் பங்குப் பணியாளரிடம், “எப்படி உன்னால் இந்தப் பங்குத் தளத்தில் இவ்வளவு சிறப்பாகப் பணியாற்ற முடிகின்றது?” என்று கேட்டார்.
உடனே இளம் அருள்பணியாளர், திருவிவிலியத்தை எடுத்து, எசாயா நூல் 48: 10 இல் இடம்பெறும், “நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் என்னும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்ற இறைவார்த்தையை வாசித்துக் காட்டிவிட்டு, “கடவுள் என்னைத் துன்பம் என்னும் உலை வழியாகத் தேர்ந்தெடுத்ததால், நான் எத்தகைய துன்பத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். அதனால்தான் இங்கே பங்குப்பணியை மிகச் சிறப்பாகச் செய்ய முடிகின்றது” என்று தீர்க்கமாகப் பதிலளித்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளம் அருள்பணியாளர் மக்களிடமிருந்து வரும் துன்பங்களையும் வெறுப்பினையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தார். அதனால்தான் அவர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னுடைய சீடர்கள் உலகிலிருந்து எத்தகைய எதிர்ப்புகளைச் சந்திப்பார்கள் என்று கூறுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தனது இறுதி இராவுணவில் – தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரியும் நேரத்தில் – அவர்கள் உலகினரிடமிருந்து எப்படியெல்லாம் வெறுப்பையும் துன்பத்தையும் சந்திப்பார்கள் என்று கூறுகின்றார்.
இங்கு இயேசு ‘உலகு’ என்று சொல்வதை அவரது போதனையைக் கேளாதவர்கள், அதன்படி நடக்காதவர்கள் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்டிருந்தால், அவரை ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். அவர்களோ இயேசுவின் போதனையைக் கேட்கவில்லை. அதனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய காரணத்தால், உங்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசு தம் சீடரிடம் கூறுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார் பவுலை ஆசியாவில் கடவுளின் வார்த்தையை அறிவிக்காதவாறு, அவரைத் தடுத்தார் என்று வாசிக்கின்றோம். பவுலுக்கு எங்கு எதிர்ப்புகள் நிறைய இருந்திருக்கலாம். அதனாலோ என்னவோ தூய ஆவியார் பவுலைத் தடுக்கின்றார்.
ஆண்டவரின் சீடராய் இருந்து அவரது பணியைச் செய்யும்போது நமக்கும் மக்களிடமிருந்து எதிர்ப்பும் வெறுப்பும் வரலாம். அதையெல்லாம் நாம் சோர்ந்துவிடாமல், கடவுளுடைய பணியைத் தொடர்ந்து செய்வோம்.
சிந்தனைக்கு:
இயேசுவின் சீடர்களுக்கு எதிர்ப்புகள் இல்லையென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
துன்பங்கள் நம்மைப் புடமிடும் கருவிகள்
தாயின் கருவில் உருவாகு முன்பே நம்மைத் தேர்ந்துகொண்டவர் தனியாய் விடுவதில்லை.
இறைவாக்கு:
‘உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1:19) என்பார் ஆண்டவர். எனவே, என்றும் நம்மோடு இருக்கும் ஆண்டவரின் பணியை எத்தகைய எதிர்ப்புகள் வந்திடினும் தொடர்ந்து செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
