
I திருத்தூதர் பணிகள் 5: 27b-32, 40b-41
II திருவெளிப்பாடு 5: 11-14
III யோவான் 21: 1-19
இயேசுவுக்காகத் துன்புறுவோம்; அவரது மாட்சியில் பங்குபெறுவோம்
கிறிஸ்துவுக்காக இறந்த குடும்பம்:
Jesus Freaks என்ற நூலில் அதன் ஆசிரியர் டி.ஜே.டால்க் குறிப்பிடுகின்ற ஓர் உண்மை நிகழ்வு.
கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதும் கம்போடியாவில் இருந்த ஒரு கிறிஸ்துவக் குடும்பம் யாருக்கும் அஞ்சாமல் கிறிஸ்துவைப் பின்பற்றி வந்தது. இச்செய்தியை அறிந்த அங்கிருந்த அதிகாரிகள் அக்குடும்பத்தில் இருந்த தந்தை, தாய், குழந்தைகள் அனைவரும் கைது செய்தார்கள். பின்னர் அதிகாரிகள் அவர்களிடம், “நீங்கள் புதைக்கப்பட இருக்கும் குழிகளை நீங்களே தோண்டிக்கொள்ளுங்கள்” என்று துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். அவர்களும் தாங்கள் புதைக்கப்பட இருந்த குழிகளைத் தோண்டினார்கள்.
இதையடுத்து அதிகாரிகள், “நீங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படப் போகிறீர்கள். அதற்கு முன்னதாக, சிறிது நேரம் உங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்கள். இந்த இடைவெளியில் அந்தக் கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்த சிறுவன் ஒருவன் அவர்களிடமிருந்து தப்பித்துக் காட்டுக்குள் ஓட முயன்றான். அதைப் பார்த்துவிட்டு, அதிகாரி ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவனைச் சுட முயன்றார்.
அப்போது சிறுவனின் தந்தை அதிகாரியிடம் சென்று, “அவனை எதுவும் செய்துவிடாதீர்கள். அவனை இங்கு நான் அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சிறுவனிடம் சென்று, “இன்னும் சிறிதுநேரத்தில் ஆண்டவர் இயேசு நமக்கு விண்ணகத்தில் இடமளிக்கப் போகிறார். அந்த வாய்ப்பை நீ நழுவவிட வேண்டுமா?” என்றார். உடனே சிறுவன் தந்தையுடன் திரும்பி வந்து, தனக்கென தோண்டப்பட்ட குழிக்கு முன்பாக நின்றான். அதிகாரிகள் அவர்களை சுடவே, அவர்கள் தாங்கள் தோண்டிய குழிகளில் விழுந்து, கிறிஸ்துவுக்காக மறைச்சாட்சிகள் ஆகி, விண்ணகத்திலும் இடம் பிடித்தார்கள்.
ஆம், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதும், கம்போடியாவைச் சேர்ந்த இந்தக் கிறிஸ்துவக் குடும்பம், கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையே தியாகவும் செய்தது. பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கிறிஸ்துவுக்ககத் துன்புறுவோம்; அவரது மாட்சியில் பங்கு பெறுவோம்” என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இரண்டாம் அழைப்பு:
கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஒருவர் பாவம் செய்து, அவரோடு உள்ள உறவை முறித்துக்கொண்டாலும் அவர் அவர்களை அப்படியே தள்ளிவிடுவதில்லை. இதற்குத் திருவிவிலியத்திலிருந்து பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம்.
இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீது பத்சேபாவோடு பாவம் செய்ததன் மூலம், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தார் (திபா 51:4). அப்படியிருந்தும் தனது குற்றத்தை உணர்ந்த தாவீதைக் கடவுள் ஏற்றுக்கொள்கின்றார். பிறவினத்தாராகிய நினிவே நகர மக்களுக்குத் தன்னுடைய வாக்கை அறிவிக்குமாறு ஆண்டவர் இறைவாக்கினர் யோனாவை அழைத்தபோது, அவர் ஆண்டவரிடமிருந்து தப்பித்து ஓடினார். அப்படியிருந்தும், ஆண்டவர் அவரை பெரிய மீனின் வழியாகக் காப்பாற்றி, மீண்டுமாக அவரை நினிவே நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பி வைக்கின்றார். இப்படிப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை உயிர்த்த ஆண்டவர் இயேசு மீண்டுமாக அழைத்து, அவரை நற்செய்திப் பணியில் அமர்த்துகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு பேதுருவிடம், “நீ என்மீது அன்பு செலுத்துகின்றாயா?” என்று மும்முறை கேட்பது, பேதுரு மற்ற எல்லாவற்றையும்விட, எல்லாரையும்விட இயேசுவின்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றாரா? என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இயேசுவால் கேட்கப்பட்ட கேள்வியாகும். பேதுருவும் தன்னுடைய குற்றத்தை உணர்ந்தவராய் “என்னைப் பின்தொடர்” என்ற இயேசு விடுத்த இரண்டாவது அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவரது மக்களைப் பேணிப் பராமரித்து, இயேசுவுக்காகத் தன் உயிரையும் தருகின்றார்.
ஆதலால், கடவுள் தாம் தேர்ந்துகொண்டவர்களை, அவர்கள் பாவம் செய்திருந்தபோதும் தள்ளிவிடாமல், அவர்களைத் தன்னுடைய பணிக்காக அழைக்கின்றார் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
கடவுளுக்குக் கீழ்ப்படிவோம்:
கடவுள், பாவம் செய்து, தன்னோடு உள்ள உறவை முறித்துக் கொண்ட தம் அடியவர்களை அப்படியே விட்டுவிடாமல், அவர்களை மீண்டுமாக அழைக்கின்றார் என்று மேலே பார்த்தோம். கடவுள் மீண்டுமாக விடுத்த அழைப்பினை ஏற்றுத் திருத்தூதர்கள் எப்படியெல்லாம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது.
உயிர்த்த ஆண்டவரின் அனுபவத்தைப் பெற்ற திருத்தூதர்களால் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அவர்கள் யாரெல்லாம் இயேசுவின் இறப்புக்குக் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு முன்பாகவே இயேசு உயிர்த்துவிட்டார்; இதற்கு நாங்கள் சாட்சிகள் என்று துணிவோடு அறிவித்தார்கள். இதனால் சீற்றம் அடைந்த தலைமைச் சங்கத்தார் அவர்களை நையப்புடைத்து, கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படியிருந்தும் திருத்தூதர்கள் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி அறிவித்து வந்தார்கள். அப்போதுதான் தலைமைக் குரு, “நீங்கள் இந்த இயேசுவைப் பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா?” என்கிறார்கள். பதிலுக்குப் பேதுருவும் திருத்தூதர்களும், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியே வேண்டும்?” என்கிறார்கள்.
திருத்தூதர்கள் மனிதர்களுக்குக் கீழ்ப்படியாமல், கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததற்குக் காரணம், மனிதர்களால் உடலை மட்டுமே கொல்லமுடியும்; ஆண்டவரால் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க முடியும் (மத் 10:28) என்பதால்தான். அதைவிடவும் இயேசு மாண்புக்கும் பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவர். அதனால் திருத்தூதர்கள் அவருக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடந்தார்கள்.
இயேசுவுக்குத் தொண்டு செய்வோர் அவரோடு இருப்பர்:
ஆண்டவராகிய இயேசு மாண்புக்குரிவர் என்று பார்த்தோம். அவர் எத்துணை மாண்புக்கும் பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவர் என்பதைத் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
யோவான் காணும் காட்சியில் வானதூதர்கள், “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று புகழ்ந்து பாடுவது இடம்பெறுகின்றது. அதைத் தொடர்ந்து மண்ணுலகில் இருந்த படைப்பு அனைத்தும் அவரைப் புகழ்ந்து பாடுகின்ற காட்சி இடம்பெறுகின்றது. மண்ணுலகில் உள்ள படைப்புகள் அவரைப் புகழ்ந்து பாடுகின்றன என்றால் அவருக்குத் தொண்டு செய்தோர் அவரோடு இருந்து, அவரைப் புகழ்ந்து பாடினர் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம். இதை நற்செய்தியில் இயேசு, “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” கூறியிருக்கின்றார் (யோவா 12:26). இதன்மூலம், இயேசுவுக்குத் தொண்டுவோர், அவருக்காகத் தம் உயிரையும் கொடுப்போர் மாட்சிமை நிறைந்த இயேசுவோடு இருப்பர் என்பது உறுதியாகின்றது.
எனவே, நாம் திருத்தூதர்களைப் போன்று கடவுளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து அவரது பணியைச் சிறப்பாகச் செய்து, அவருக்குச் சான்று பகர்வோம்; அவர் தரும் விண்ணக ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனைக்கு:
‘நாம் அவரோடு இறந்தால் அவரோடு வாழ்வோம்’ (2 திமொ 2:11) என்பார் புனித பவுல். எனவே, நாம் கிறிஸ்துவின் நற்செய்தியை அவரை அறியாத மக்களுக்கு அறிவித்து, அவரோடு இறப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
