வலைத்தளம் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வந்த காலத்திலிருந்து, அது, மக்களிடையே சந்திப்பை உருவாக்கவும், ஒருங்கிணைப்பைக் கொணரவும் வேண்டுமென்ற நோக்கத்தில், திருஅவை, அதனைப் பயன்படுத்தியுள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் செய்தியில் கூறியுள்ளார்.
செய்தியாளர்களின் பாதுகாவலரான, புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் திருநாள், சனவரி 24ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சமூகத் தொடர்பு உலக நாளின் செய்தியை, திருத்தந்தையர், அந்நாளில் வெளியிட்டு வந்துள்ளனர்.
53வது சமூகத் தொடர்பு உலக நாள் செய்தி
ஆயரும் மறைநூல் வல்லுனருமான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் திருநாள், இவ்வியாழனன்று கொண்டாடப்பட்டதையொட்டி, 53வது சமூகத் தொடர்பு உலக நாளின் செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
திருத்தூதர் பவுலின் கூற்றான, “நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்” (எபேசியர் 4:25) என்பதை தலைப்பாகவும், ‘சமூக வலைத்தள குழுமங்களிலிருந்து மனித குடும்பத்திற்கு’ என்பதை உப தலைப்பாகவும் கொண்டு திருத்தந்தையின் செய்தி வெளியாகியுள்ளது.
அரசியல், வர்த்தக உலகங்களுக்கு உதவும் வலைத்தளம்
நாம் ஒருவர் ஒருவரோடு தொடர்புகொள்ளவும், ஒருவருக்கொருவர் உதவி செய்யவும், சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன என்பதை உணரும் அதே நேரம், இந்த வலைத்தளங்கள், தனிப்பட்டவர்களின் அடையாளங்களை மறைமுகமாகப் பயன்படுத்தி, அரசியல் மற்றும் வர்த்தக உலகங்களுக்கு உதவி செய்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம் என்று திருத்தந்தை தன் செய்தியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘வலை’ என்ற சொல், ஓர் உருவகமாக செயலாற்றுகிறது என்பதை, இச்செய்தியில் சிறப்பாகக் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு கயிறுகள், கோடுகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, வலைகள் உருவாக்கப்படுவது போல், மனிதர்களும் ஒருவரோடொருவர் இணைவதற்கு, நமது வலைத்தளங்கள் உதவி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்புகள் கூடினாலும், தனிமையாக்குதல்…
தொழில்நுட்பத் தொடர்புகள் நம்மிடையே அதிகரித்துள்ள போதிலும், அவை நம்மை தனிமைப்படுத்தும் வகையிலும் செயலாற்றுகின்றன என்ற முரண்பாட்டை, திருத்தந்தை, இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தொடர்புகள் கூடியுள்ள வேளையில், நாம் தனித் தனியே பிரிக்கப்படும் ஆபத்திலிருந்து எவ்விதம் மீள்வது என்பதை, ஒரு கேள்வியாக எழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு ஒரு பதிலாக, மனித சமுதாயத்தை உடலுக்கு ஒப்புமைப்படுத்தி சிந்திக்கலாம் என்ற பதிலையும் அளித்துள்ளார்.
Source: New feed