இலாபம் மற்றும் வீணாக்கும் கலாச்சாரத்தை அகற்றுவதற்கு இன்றியமையாததாகிய, மனத்தாராளம் மற்றும் கொடை எனும் கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறு, ஒவ்வொரு நிலையிலும் வாழ்கின்ற அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்க நலவாழ்வு நிறுவனங்கள், வெறும் வர்த்தகம் நோக்கில் சிக்கிக் கொள்ளாமலும், இலாபத்தைவிட, தனிநபர்கள் மீது அக்கறை காட்டுமாறும் வலியுறுத்தியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நலவாழ்வு என்பது, பிறரைச் சார்ந்து இருப்பது, பிறரோடு உறவு கொள்வது மற்றும், பிறரோடு உரையாடுவதாகும் எனவும், இதற்கு, நம்பிக்கை, நட்பு மற்றும் தோழமையுணர்வு தேவைப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11, லூர்து அன்னை விழாவன்று கடைப்பிடிக்கப்படும், 27வது உலக நோயாளர் நாளுக்கென, சனவரி 08, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொடை
“கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத்.10,8) என்ற நற்செய்தி திருச்சொற்களுடன் இச்செய்தியைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடை, மனத்தாராளம் ஆகியவை பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மனித வாழ்வு, கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றதாகும், இக்காலத்தின் வீணாக்கும் மற்றும் புறக்கணிப்பு கலாச்சாரத்திற்கு மத்தியில், தனிமனிதப்போக்கு மற்றும் கூறுபட்டுள்ள சமுதாயத்திற்கு, கொடை என்பது சவாலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கொடை என்பது, வெறுமனே பரிசுகளைக் கொடுப்பதல்ல, மாறாக, ஒருவர் தன்னையே இலவசமாக வழங்குவதாகும் மற்றும் உறவைக் கட்டியெழுப்புவதாகும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, கொடை, கடவுளன்பின் பிரதிபலிப்பாகும் என்றும், நாம் ஒவ்வொருவருமே ஏழைகள், தேவையில் இருப்பவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார். இந்த ஓர் ஏற்பானது, தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும், நன்மையை ஊக்குவிக்க, பொறுப்புடன் செயல்பட நம்மை இட்டுச் செல்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
Source: New feed