2019ம் ஆண்டு, அமைதி மற்றும், ஒப்புரவின் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையை, புருண்டி நாட்டு ஆயர்கள், தங்களின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளனர்.
1993ம் ஆண்டில் புருண்டியில் இடம்பெற்ற இரத்தம் சிந்திய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த, இரண்டாயிரமாம் ஆண்டின் அருஷா (Arusha) ஒப்பந்தத்திற்குப் பின்னர், நாட்டில் அமைதியும், ஒப்புரவும் நிலவும் என்ற நம்பிக்கை உருவானது, ஆயினும், நாடு தொடர்ந்து இக்கட்டான தருணங்களை எதிர்கொண்டு வருகின்றது என, ஆயர்கள் கூறியுள்ளனர்.
நாட்டில் மக்களாட்சி மலர்வதற்கு உழைப்பது, உண்மை மற்றும் ஒப்புரவு குழு உருவாக்கப்படுவது போன்ற உறுதிமொழிகள், அருஷா ஒப்பந்தத்தில் இடம்பெற்றன என்றும், இவை, அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கின என்றும், ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும், 2015ம் ஆண்டில் அரசுத்தலைவர் Pierre Nkurunziza அவர்கள், மூன்றாவது முறையாக பதவியில் அமர்ந்தது, அரசியலமைப்பை மீறுவதாக அமைந்து, நாட்டை, வன்முறை மற்றும் வேதனைகளில் ஆழ்த்தியது எனவும் கூறியுள்ள புருண்டி ஆயர்கள், 2019ம் ஆண்டு, அமைதி மற்றும், ஒப்புரவு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.
1993ம் ஆண்டுக்கும், 2005ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஹூட்டு மற்றும், துட்சி இனங்களுக்கு இடையே இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய போரில், குறைந்தது மூன்று இலட்சம் பேர் இறந்தனர்.
Source: New feed