ஓர் ஏழை இளம் தம்பதியர், தலைப்பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்தனர். நிதி நெருக்கடியால், அந்த இளம் தாய், கருவுற்ற நாள் முதல் மருத்துவ பரிசோதனை செய்யவில்லை. இதையறிந்த மருத்துவர்கள் சிறிது கடிந்துகொண்டாலும், இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்பதால், அப்பெண்ணை அனுமதித்தனர். அந்த இளம் பெண்ணும் அழகான ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அச்செய்தியை அத்தம்பதியரிடம் சொன்ன மருத்துவர், கூடவே ஒரு சோகத்தையும் சொன்னார். உங்கள் குழந்தைக்கு நெற்றியில் ஒரு விஷக்கட்டி இருக்கின்றது. அதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தை இன்னும் சிலமணி நேரத்தில் இறந்துவிடும். இறந்த குழந்தையை இங்கிருந்து எடுத்துச் செல்ல நிறையச் செலவாகும். அதனால் குழந்தையை இங்கேயே விட்டுச் செல்லுங்கள். நான் அடக்கம் செய்கிறேன் என்றார். அந்த தம்பதியரும் கண்ணீரோடு குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றனர். பின்னர் அந்த மருத்துவர் செவிலியரை அழைத்து, இக்குழந்தைக்கு பால் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிச் சென்றார். அந்தக் குழந்தை இறந்திருக்கும் என நினைத்து, அடுத்த நாள் அங்கு வந்தார் மருத்துவர். ஆனால் அந்தக் குழந்தை அவரைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது. சரி, இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என எண்ணிச் சென்றார், மருத்துவர். இப்படியே ஏழு நாள்கள் கடந்து சென்றன. குழந்தை உயிரோடு இருந்தான். மருத்துவருக்குச் சந்தேகம். அனைத்து செவிலியரையும் அழைத்து, இக்குழந்தைக்கு பால் கொடுப்பது யார் எனக் கேட்டார். நான் இல்லை என ஒவ்வொருவராகச் சொன்னார்கள். கடைசியில் ஓய்வு பெறப்போகும் ஒரு செவிலியர் வந்து, ஐயா, ஓய்வுபெறும் சமயத்தில் மருத்துவர் கட்டளைப்படி நடக்காமல் இருந்தால், ஓய்வூதியம் தடை செய்யப்படும் என என் கணவர் சொன்னார், ஆனாலும் நான்தான் அக்குழந்தைக்கு வீட்டிலிருந்து தினமும் பால்கொண்டு வந்து மூன்றுவேளையும் கொடுத்தேன், என்னை மன்னித்து விடுங்கள் என்றார். என்ன நடக்குமோ என, எல்லாரும் அச்சத்தால் நடுங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த மருத்துவரோ கண்ணீருடன், அந்தச் செவிலியரின் தாய்மையைப் போற்றி நன்றி சொன்னார். தான் செய்திருக்க வேண்டியதை, அந்தச் செவிலியர் செய்தார் என்று சொல்லி, அவரின் மனித நேயத்தைப் புகழ்ந்து நெஞ்சார நன்றி சொன்னார், மருத்துவர். குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு வந்து குழந்தையை எடுத்துச் சென்றனர். பின்னர் ஆறு மாதம் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது.
இது ஓர் உண்மை நிகழ்வு. 2018ம் ஆண்டின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். இந்த ஆண்டின் நிகழ்வுகளை எல்லாருமே திரும்பிப் பார்க்கிறோம். தனிமனித வாழ்விலும், பொது வாழ்விலும், எத்தனையோ மனதுக்கு மகிழ்வைத்தரும் நிகழ்வுகள் நடந்துள்ளன. கடந்த ஏப்ரல் 27ம் தேதி, வட கொரிய அதிபர் Kim Jong Un அவர்களும், தென் கொரிய அரசுத்தலைவர் Moon Jae-in அவர்களும் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 1953ம் ஆண்டுக்குப் பின்னர், வட கொரிய தலைவர், தென் கொரிய எல்லையில் நுழைந்தது அதுவே முதன்முறையாகும். அச்சந்திப்பின் இறுதியில், அவ்விரு தலைவர்களும் சேர்ந்து ஒரு மரத்தை நட்டனர். அந்த மரம், 1953ம் ஆண்டில், கொரியச் சண்டை முடிவுற்ற சமயத்தில் வளர்ந்ததாகும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பகுதியாக மாறவும், கொரிய நாடுகளுக்கிடையே அமைதி நிலவவும், இந்த சந்திப்பு வழியமைத்துள்ளது. இதற்கு முன்னதாக, தென் கொரியாவில் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும், தென் கொரியாவின் அழைப்பின்பேரில், வட கொரியா கலந்துகொண்டது உலகினரின் வரவேற்பைப் பெற்றது. மேலும், கடந்த ஜூன் 12ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களும், வட கொரிய அதிபரும் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நடத்தினர். அமெரிக்க அரசுத்தலைவர் ஒருவர், வட கொரிய அதிபரைச் சந்தித்ததும் இதுவே முதன்முறையாகும்.
கியூபாவில் ராவுல் காஸ்ட்ரோ அவர்கள், அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அந்நாட்டில், ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆட்சிசெய்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் தலைமைத்துவம் முடிவுக்கு வந்தது. நவம்பர் 11ம் நாளன்று, உலகின் பல நாடுகளில், குறிப்பாக, ஐரோப்பாவிலும், காமன்வெல்த் நாடுகளிலும், முதல் உலகப் போர் முடிவடைந்த நூறாம் ஆண்டு நினைவுகூரப்பட்டு, அதில் இறந்தவர்கள் எல்லாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. டிசம்பர் 14ம் தேதி, போலந்தின் காத்தோவிச்ச நகரில் நிறைவடைந்த, காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டில், 2015ம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தை செயல்படுத்த, ஏறக்குறைய 200 நாடுகள் இசைவு தெரிவித்தன. சிரியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளை அழைத்துக்கொள்ளவிருப்பதாக, இந்த டிசம்பரில், அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சிரியாவில் போர் முடிவுக்கு வரும் என்பதன் அடையாளமாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் பார்வையிழந்தோர் தேசிய கிரிகெட் அணி, 2018ம் ஆண்டின் உலக கோப்பையை வென்றது. 2018ம் ஆண்டின் ரமோன் மகசேசே விருது பெற்ற ஆறு பேரில் இருவர் இந்தியர். பாரத் வஸ்வானி என்ற உளவியல் மருத்துவர், மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் திரிபவர்களுக்குப் பணியாற்றி வருகிறார். சோனம் வாங்சுக் என்பவர், லடாக்கில் இளையோர் வாழ்வு முன்னேற உதவி வருகிறவர். சிறப்பு ஆயுதங்களைக் கையாள்கின்ற SWAT பெண்கள் குழு, இந்தியாவில் முதன்முறையாக, டெல்லி காவல்துறையால் கடந்த ஆகஸ்டில், உருவாக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 31 விண்கோள்களை அனுப்பியுள்ளது. இந்தியாவில் அமலிலிருந்த, பழமையான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, முக்கிய அம்சங்களுடன்கூடிய முன்வரைவுச் சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது, சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட பின், நுகர்வோரை யாராலும் ஏமாற்ற முடியாத நிலை ஏற்படும். போலி விளம்பரங்களுக்கும் தீர்வு வரும் என்று நம்பப்படுகின்றது. 2018-ம் ஆண்டு முதல் 2035-ம் ஆண்டுக்குள் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்புள்ள நகரங்கள் குறித்து, ஆக்ஸ்போர்டின் உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி துறை, ஆய்வு செய்துள்ளது. இந்த பட்டியலில், முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன
ஆசியாவின் மிக நீளமான ரயில் – சாலை பாலமான போகிபீல் பாலம், இந்த டிசம்பர் 3ம் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 4.94 கி.மீ. நீளம் கொண்ட போகிபீல் பாலம், அசாமின் கிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதில், மேலே மூன்று வழிச் சாலையும் கீழே இரண்டு வழி இரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பாலமாக இது விளங்கும் எனச் சொல்லப்படுகிறது.
இவை போன்ற, மேலும் பல நல்ல நிகழ்வுகள் இந்தியா உட்பட, உலகளவில் இடம்பெற்றுள்ளன. இவைகளை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதேநேரம், கடந்த ஆகஸ்டில் கேரளாவைத் தாக்கிய கடும் வெள்ளம், கடந்த நவம்பரில் தமிழகத்தைக் கடுமையாய் பாதித்த கஜா புயல், இந்நாள்களில், இலங்கையில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக, 45 ஆயிரம் பேர் வீடுகள் இழப்பு, டிசம்பர் 22, கடந்த சனிக்கிழமை இரவில், இந்தோனேசியாவின் சுமத்ரா, ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் சுனாமி அலையில் ஏற்பட்டுள்ள உயிர்ச் சேதங்கள்… போன்ற இயற்கைப் பேரிடர்கள், போர்களால் துன்புறும் புலம்பெயரும் மக்கள்.. உறுதியற்ற அரசுகளால் அப்பாவி பொது மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், பசிச்சாவுகள் போன்றவையும் இவ்வாண்டில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், பேரிடர்களின்போதும், அதற்குப் பின்னும், பெருமளவான மக்களின் மனிதாபிமானம் சிறந்து விளங்கியது. எனவே, உலக அரங்கில் இடம்பெற்றுள்ள அனைத்து நல்ல செயல்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் அதேநேரம், உலகில் இடம்பெறும் போர்கள் முடிவுக்கு வரும், மக்கள் அமைதியில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் புதிய 2019ம் ஆண்டை எதிர்நோக்குவோம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ம் ஆண்டு சனவரி 15 முதல் 21 வரை, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப் பயணமாக ஜூன் 21ம் தேதி சுவிட்சர்லாந்திற்கும், உலக குடும்பங்களைச் சந்திப்பதற்காக, ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் அயர்லாந்து நாட்டிற்கும், செப்டம்பர் 22 முதல் 25 வரை லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா நாடுகளுக்கும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார். சுவிட்சர்லாந்தில் திருத்தந்தை த்தை மேற்கொண்டார். இன்றைய உலகில் புனிதத்தன்மையுடன் வாழ்வதற்கு அழைப்பு விடுத்து ‘அக்களியுங்கள் அகமகிழுங்கள் (Gaudete et exsutate)’ எனப்படும் திருத்தூது அறிவுரை மடலை, இந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 9ல், வெளியிட்டுள்ளார். சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளோருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நீண்ட கடிதம் ஒன்றை, கடந்த ஆகஸ்டில், உலக இறைமக்கள் அனைவருக்குமென திருத்தந்தை எழுதியுள்ளார்.
19 அல்ஜீரிய மறைசாட்சிகளை அருளாளர்களாக உயர்த்தியது, திருத்தந்தை 6ம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ போன்றோரை புனிதர்களாக அறிவித்தது, அக்டோபரில் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் வெற்றிகரமாக நிறைவுற்றது, வத்திக்கான் நகர நாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சட்டம், திருப்பீட தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தங்கள் போன்றவற்றை, கத்தோலிக்கத் திருஅவையில் 2018ம் ஆண்டில் நடைபெற்ற மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் என, திருத்தந்தையே குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர்ந்தோர், வறியோர், பல்வேறு வழிகளில் துன்புறுவோர் அனைவரின் நலன் காக்கப்படவும், போர்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவவும், திருத்தந்தை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஒரு நல்ல அரசியல், அமைதிக்குப் பணியாற்றுவதாகும் என, 2019ம் ஆண்டு முதல் நாள் சிறப்பிக்கப்படும் உலக அமைதி தினச் செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். இதன் வழியாக, அரசியல் தலைவர்கள், அமைதிக்காகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் தனிப்பட்ட மற்றும், குடும்ப வாழ்விலும் 2018ம் ஆண்டில் மனதிற்கு அமைதிதந்த, அமைதி தராத, காரியங்கள் பல நடந்துள்ளன. இவற்றையெல்லாம் கடந்துவர, கடவுளின் அருள்கரம் நம்மோடு இருந்துவந்துள்ளது. நாம் எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத நபர்களிடமிருந்து உதவிகள் கிடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் நினைத்து, கடவுளுக்கு நன்றி சொல்வோம். நன்றி சொல்வது, அதைச் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் இடையே நல்ல உறவை வளர்க்கிறது. இது மனித நேயத்தை வளர்க்கின்றது. நன்றி நிறை நெஞ்சோடும், நேர்மறை எண்ணங்களோடும் புதிய 2019ம் ஆங்கில ஆண்டை வரவேற்போம்.
Source: New feed