நிக்கராகுவா நாடு எதிர்கொண்டுவரும் சமூக-அரசியல் நெருக்கடிகளை அகற்றும் முயற்சிகளுக்கு செபத்துடன் தான் துணைச் செல்வதாகவும், அமைதியான ஒரு தீர்வைக் கண்டுகொள்ளும் முயற்சியில் அரசியல் தலைவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 27ம் தேதி முதல், நிக்கராகுவா நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு தன் ஊக்கத்தை வழங்குவதாகவும், அனைவரின் நலனையும் மனதில் கொண்ட அமைதித் தீர்வு மிக விரைவில் கிட்டப்பட வேண்டும் என்பதை ஓர் விண்ணப்பமாகவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலி மற்றும் நைஜீரியா நாடுகளில், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளால், மக்கள் பெருமளவில் உயிரிழந்துள்ளது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்
மேலும், இஞ்ஞாயிறன்று, மறைபோதக மறைசாட்சிகளின் நாள் சிறப்பிக்கப்பட்டதை குறித்து தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தத் திருத்தந்தை, 2018ம் ஆண்டில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், பெண் துறவிகள், பொதுநிலையினர் என, பலர், தங்கள் விசுவாசத்திற்காக துன்பங்களை அனுபவித்துள்ளதையும், இவர்களில், 40 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதையும், கவலையுடன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு எனவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed