1585ல் நிகழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு

ஆன்மீகத்திலும், கலாச்சராத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்றிருந்த ஜப்பானிய, ஐரோப்பிய குழுக்களுக்கிடையே, 1585ம் ஆண்டு ஏற்பட்ட சந்திப்பு, வரலாற்று சிறப்பு மிக்கது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கூறினார்.
Tensho Kenoho Shisetsu Kenshokai என்ற பெயர் கொண்ட கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஜப்பான் இயேசு சபை மாநிலத்தின் தலைவர், அருள்பணி Renzo De Luca அவர்களோடும், டோக்கியோவில் இயேசு சபையினரால் நடத்தப்படும் சொஃபியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர், அருள்பணி Shinzo Kawamura அவர்களோடும், செப்டம்பர் 12, இப்புதன் காலை திருத்தந்தையைச் சந்தித்த வேளையில், திருத்தந்தை, உரோம் நகருக்கு முதல் முறையாக வருகை தந்த நான்கு ஜப்பானிய இளையோரைப்பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.
16ம் நூற்றாண்டில், இயேசு சபை மறைபரப்புப் பணியாளர்களுடன், உரோம் நகருக்கு வருகை தந்த நான்கு ஜப்பானிய இளையோருக்கு, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 13ம் கிரகரி அவர்கள், ஆர்வமுடன் அளித்த வரவேற்பும், அக்குழுவினர் ஐரோப்பாவின் ஏனைய நகரங்களில் பெற்ற வரவேற்பும், ஜப்பானிய-ஐரோப்பிய சமுதாயங்களுக்கிடையே ஓர் உறவுப் பாலத்தை உருவாக்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜப்பான் வரலாற்றின், Tensho காலத்தில் உரோம் நகர் வந்து சேர்ந்த நான்கு இளையோரில், Mancio Ito என்பவர், அருள்பணியாளராக மாறியதையும், Julian Nakaura என்பவர், மீண்டும் ஜப்பான் திரும்பி, நாகசாகியில் மறைசாட்சியாக உயிர் துறந்ததையும், திருத்தந்தை இக்குழுவினரிடம் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இந்த நால்வரின் நினைவாக உருவாக்கப்பட்ட Tensho Kenoho Shisetsu Kenshokai கழகம், வறியோருக்கு ஆற்றும் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை போற்றுதற்குரியன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின் இறுதியில், 2019ம் ஆண்டு, ஜப்பான் நாட்டிற்கு வருகை தர தான் விழைவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதிநிதிகள், சமாதானத்தின் தூதர்களாக தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.