அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்:
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுவரா! பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே! ஆமென் சேசு.
தேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்:
தேவதூதர்களுடைய இராக்கினியே, மனிதர்களுடைய சரணமே, சர்வ லோகத்துக்கும் நாயகியே, நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். எப்படியாகிலும் எங்களை இரட்சிக்கவேணும் என்று தேவரீரை மன்றாடுகிறோம். தாயாரே, மாதாவே, ஆண்டவளே, உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு உம்முடைய திருக்குமாரன் இயேசுநாதரிடம் நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம். இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே. ஆமென்.
ஜெபமாலை துவக்குகிற வகையாவது:
அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி! நீச மனுஷருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீருக்குத் ஸ்துதி வணக்கமாகவும் அர்ச்சியசிஷ்ட தேவ மாதாவுக்குத் தோத்திரமாகவும் 153 மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி! ஆமென்.
உத்தம மனஸ்தாப மந்திரம்:
சர்வேசுரா சுவாமி! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் அன்பும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறேன்.
எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கு இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.
மேலும் எனக்குப் பலம் போதாமையால், சேசுநாதர் சுவாமி பாடுப்பட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரபிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்.
திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசமென்கிற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாச மந்திரம் சொல்லுகிறது:
விசுவாச மந்திரம்.
ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர் பார்க்கிறேன். ஆமென்.
இஸ்பிரீத்துசாந்து மந்திரம்:
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
தரித்திரர்களுடய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும்.
வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி! ஆமென்.
மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்லுகிறது.
பரமண்டலங்களில் இருக்கிற…
பரிசுத்த கன்னியாஸ்த்ரீயாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிற வகையாவது:
பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
பிரியதத்தத்தினாலே (அருள் நிறைந்த)…
சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
பிரியதத்தத்தினாலே (அருள் நிறைந்த)…
இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியமுண்டாகி அதிகரிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
பிரியதத்தத்தினாலே (அருள் நிறைந்த)…
பிதாவுக்கும் சுதனுக்கும்…
ஓ என் இயேசுவே…
ஆமென்…
சந்தோஷ தேவரகசியங்கள்.
1. கபிரியேல் சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து தாழ்ச்சிஎன்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
2. தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்து வாழ்த்தியதை தியானித்து, உத்தம பிறர் சிநேகம்என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
3. கர்த்தர் பிறந்ததைத் தியானித்து மனத் தரித்திரம் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
4. சேசுநாதர் சுவாமி கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்டதை தியானித்து கீழ்ப்படிதல் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
5. பன்னிரண்டு வயதில் காணாமற் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டு களிகூர்ந்ததை தியானித்து சர்வேசுரனுடைய சித்தத்தைத் தேடும் வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
துக்க தேவரகசியங்கள்.
1. சேசுநாதர் சுவாமி பூங்காவனத்தில் இரத்த வேர்வை வேர்த்ததைத் தியானித்து சர்வேசுரனுடைய சித்தத்துக்கு அமைந்து நடக்கும் வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
2. சேசுநாதர் சுவாமி கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டதைத் தியானித்து சகலத்திலும் பரித்தியாகம் செய்யும் வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
3. சேசுநாதர்சுவாமி திருச்சிரசில் முள்முடி சூட்டப்பட்டதை தியானித்து நிந்தை அவமானங்களைப் பொறுமையுடன் சகிக்கும் வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
4. சேசுநாதர் சுவாமி சிலுவை சுமந்து கொண்டு போனதை தியானித்து நீடித்த பொறுமை என்கிற வரத்தை கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
5. சேசுநாதர் சுவாமி சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானித்து உத்தம மனஸ்தாப வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
மகிமை தேவரகசியங்கள்.
1. சேசுநாதர் சுவாமி உயிர்த்தெழுந்ததை தியானித்து தேவ விசுவாசம் என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
2. சேசுநாதர் சுவாமி பரலோகத்துக்கு ஆரோகணமானதைத் தியானித்து தேவ நம்பிக்கை என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
3. தேவமாதாவின்பேரிலும், அப்போஸ்தலர்கள்பேரிலும் இஸ்பிரீத்துசாந்துவானவர் எழுந்தருளி வந்ததை தியானித்து உத்தம தேவசிநேகத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
4. தேவமாதா தமது ஆத்தும சரீரத்தோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை தியானித்து பரிசுத்த கற்பு என்கிற புண்ணியத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
5. தேவமாதா பரலோக பூலோக இராக்கினியாக அர்ச்சியசிஷ்ட தமத்திரித்துவத்தினால் முடிசூட்டப்பட்டதை தியானித்து மாதாவுக்கு நம்மை முழுவதும் அர்ப்பணிக்கும் வரத்தைக் கேட்போமாக!
பரலோகத்தில் இருக்கின்ற…
அருள் நிறைந்த மரியாயே… (10)
பிதாவுக்கும்…
ஓ என் இயேசுவே…
செபமாலை முடிவில்:
அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சியசிஷ்ட கபிரியேலே, இரஃபேலே, அப்போஸ்தலர்களான அர்ச்சியசிஷ்ட இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 153 மணி செபத்தையும் உங்கள் தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்ச்சியசிஷ்ட தேவமாதவின் திருப்பாதத்திலே பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
பாப்பரசருடைய சுகிர்த கருத்துக்களுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவிகள் மனம் திரும்புவதற்காகவும், சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காகவும் இந்த ஜெபமாலையை ஒப்புக்கொடுத்து வேண்டிக்கொள்வோம்.
1 பரலோகத்தில் இருக்கின்ற…
1 அருள் நிறைந்த மரியாயே…
1 பிதாவுக்கும்…
1 ஓ என் இயேசுவே…
ஆமென்.
கிருபை தயாபத்து / இரக்கத்தின் அரசி செபம்.
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே! எங்கள் தஞ்சமே! எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மை நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே! தயாபரியே! பேரின்ப இரசமுள்ள கன்னிமரியே! சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
செபிப்போமாக.
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் பரிசுத்த ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
புனித பெர்னார்டின் செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே! ஆமென்.
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சிஷ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். (மூன்று முறை)
காணிக்கைச் செபம்.
அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராக்கினியான பரிசுத்த தேவமாதாவே, உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று, உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து, இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும், சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும், பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே.! ஆமென்.
தேவன்னைக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும் செபம்:
என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக, இன்றைக்கு என் கண் காதுகளையும், வாய், இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே, நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். ஆமென்.
மரியாயின் கீதம். (லூக் 1: 47-55).
என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது. என் இரட்சண்யமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தன்னுடைய அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார். ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார். அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேல் இருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுடையவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைதானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி செல்வர்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவு கூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார். அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவர் சந்ததியாருக்கும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். ஆமென்.
“நித்திய பிதாவே உமது திருமகனின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தோடு, இன்று உலகெங்கிலும் நிறைவேற்றப்படும் சகல திருப்பலிகளை ஒன்றித்து, எங்கள் இல்லத்திலும், குடும்பத்திலும், திருச்சபையிலும், உலகெங்கிலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும் இருக்கும் சகல ஆத்துமங்களுக்காக ஒப்புக்கொடுக்கிறேன்.” ஆமென்.
(ஒவ்வொரு முறை செபிக்கும் போதும் 1000 உத்தரிக்கிற ஆத்துமாக்களின் கடன் தீர்கிறது).
உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆத்துமங்களுக்காக ஜெபம்.
திவ்விய சேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே, சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். சுவாமி, தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் போது பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல், இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே சகல அர்ச்சியசிஷ்டவர்களோடேயும், சம்மனசுக்களோடேயும் அவர்கள் சதா சர்வகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்களாக. ஆமென்.
உன்னதத்தில் வீற்றிருக்கிற எங்கள் பிதாவே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படும் ஆத்துமங்களுக்காக திவ்விய சேசுக்கிறீஸ்துவின் விலைமதியாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சுவாமி! பரிசுத்தரே, சர்வ வல்லப பரிசுத்தரே, அட்சயரான பரிசுத்தரே சுவாமி! எங்கள் மேல் இரக்கமாயிரும். பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும். மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும். ஆமென்.
அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேல் சம்மனசானவர் ஜெபம்:
அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் துர்க்கருத்தையும் அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்கு துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு சர்வேசுரன் பசாசுக்கு கற்பிப்பாராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பேயையும் மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக. ஆமென்.
வல்லமை மிக்க செபம்.
நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை. சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! ஆமென்.
குருசான குருசே! கட்டுண்ட குருசே! காவலாய் வந்த குருசே! தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!
திவ்ய நற்கருணைக்கு ஆராதனை.
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கு,
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்.
அன்பின் அவதாரமே, துன்புறும் சிநேகிதமே,
வந்தோம் உந்தன் பாதமே, எம்மை நாளும் ஆளுமே.
இடைவிடாமல் துதிக்கப்பட யோக்கியமுமாய், மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம திவ்விய நற்கருணைக்கே அனவரத காலமும் முடியாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது. ஆமென்.
நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு,
சதா காலமும்,
ஆராதனையும் ஸ்துதியும்
தோஸ்திரமும் நமஸ்காரமும்
உண்டாகக்கடவது.
ஆமென்.
திவ்ய நற்கருணைக்கு நிந்தைப் பரிகார ஜெபம்.
ஓ மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே! சுதனே! இஸ்பிரீத்துசாந்துவே! உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்குமுள்ள நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசு கிறீஸ்துவின் விலை மதிக்கப்படாத திருச் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும், அவருக்கு செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கிய பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன். ஆமென்.
ஆகாயமும், பூலோகமும் தாங்கிய சகலமான உயிருள்ள வஸ்துக்களுக்கும் அமுதளிக்கும் நாதனே! எனக்கு யாவற்றையும் கொடுத்து, உம்மையும் என் ஆத்தும போஜனமாக தேவ நற்கருணையில் கொடுத்துவிட்ட ஆண்டவரே, உமது மட்டற்ற தயாளத்தையும், சிநேகத்தையும் கண்டு பிரமித்து, இந்த தேவ நற்கருணையில் பயபக்தியோடு உம்மை வணங்கி, என்னை முழுமையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். வானம் கொண்ட ஆச்சரியமான அண்டகோளங்களுக்குப் பிரகாசம் தந்து, ஒன்றோடொன்று தட்டாமல் இயக்கும் தேவனே, நான் பொன்னாசை, புவியாசை, சரீர ஆசைகளில் தட்டுப்படாமல் சுகந்த பரலோக பரிமளம் வீசும் உம்மில் இளைப்பாறச் செய்தருளும். சர்வலோகங்களிலும் அடங்காத கர்த்தாவே, என் மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் தேவ நற்கருணையில் அடங்கினதை யோசித்து நடுநடுங்கி எல்லாவற்றையும் வெறுத்து, உம்மைக் கெட்டியாய்ப் பற்றி ஆராதிக்கிறேன். என் சித்தம், புத்தி, ஞாபகம், ஆசையெல்லாம் ஒன்றிலும் அடங்காமல், உம்மில் மாத்திரம் அடங்கிப் போகச்செய்தருளும் சுவாமி. ஆமென்.
மாண்புயர் இவ்வருட் சாதனத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
புனித ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக.
ஆமென்.
சருவேசுரா, இந்த வியப்புக்குரிய திரு அருட்சாதனத்திலே உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச் சென்றீர். உமது திருவுடல், திரு இரத்தம் இவற்றின் மறைபொருளை வணங்கும் நாங்கள் உம் மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. ஆமென்.
அருட்திரு தேவ தேவன் போற்றி!
அவர்தம் திருநாமம் போற்றி!
அவர் மகன் ஏசு கிறிஸ்து போற்றி!
அவர்தம் திருஅன்பே போற்றி!
அருட்திரு தூய ஆவி போற்றி!
அவர்தம் திருஞானம் போற்றி!
அருட்திரு அன்னை மரியாள் போற்றி!
அவர்தம் திருதூய்மை போற்றி!
அருட்திரு சூசைமுனியும் போற்றி!
அவர்தம் திருவாய்மை போற்றி!
அருட்திரு தூதர் அமரர் போற்றி!
அவர்தம் திருசேவை போற்றி!
அருட்திரு தேவ தேவன் போற்றி!
அவர்தம் திருநாமம் போற்றி!
தேவ ஸ்துதிகள்.
எல்லாம் வல்ல சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக. அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக.
மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுகிறீஸ்து நாதர் ஸ்துதிக்கப்படுவாராக, சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக, அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக,
அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக, பீடத்தில், மிகவும் பரிசுத்த தேவதிரவிய அநுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக.
சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக. அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக.
கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக. அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக.
தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி ஸ்துதிக்கப்படுவாராக. தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் சதாகாலமும் ஸ்துதிக்கப்படுவாராக.
ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து, எப்போதும் பரிசுத்த கன்னியாஸ்திரியுமாய், நமது ஆண்டவளுமாய் கொண்டாடப் பட்டவளுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட தேவமாதாவினுடைய அமலோற்பவத்துக்கும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக் கடவது.
தேவப் பிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச்சியசிஷ்ட மரியாயே! எங்கள் மாற்றானுடைய சோதனையிலேயும், மரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை வேண்டி, எங்களைக் காக்கவும், ஆளவும் கைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது திருப்பாதம் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென் சேசு.
சயன ஆராதனை.
சர்வேசுரா சுவாமி, மனிதர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் பண்ணி, என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறேன். அவைகள் தேவரீருடைய அளவில்லாத மகிமைக்கும், நன்மைத்தனத்திற்கும் விரோதமாயிருக்கிறதினாலே முழுவதும் அவைகளை வெறுக்கிறேன். இந்த இராத்திரியிலே, சடுதி மரணத்தினாலும், துர்க்கனவு முதலான பசாசு சோதனைகளாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக்கொள்ளும். ஆமென்.
சேசுவே! என் மரண வேளையிலே இஷ்டப் பிரசாதத்தோடிருந்து உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும், உமது இராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும். ஆமென்.
காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்.
எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து, என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும். ஆமென்.
அர்ச்சியசிஷ்ட அந்தோணியார் சீட்டு.
தூங்குவதற்கு முன்னர், நான்கு திசைகளிலும் சிலுவை அடையாளம் வரைந்துகொண்டே சொல்லத்தகும் செபம்.
✠ இதோ ஆண்டவருடைய சிலுவை.
✠ சத்துருக்களே, ஓடி ஒளியுங்கள்.
✠ யூதா கோத்திரத்தின் சிங்கம்.
✠ தாவீதின் சந்ததி வெற்றி கொண்டது.
அல்லேலூயா. ஆமென்.
✠ சிலுவை அடையாளம்.
✠ பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத்தினாலே!
ஆமென் சேசு.
Source: New feed