
திறந்த உள்ளத்துடன், இரக்கம்நிறை இதயம் கொண்ட கருணையாளர்களாக, தாராள கரங்களைக் கொண்ட கடின உழைப்பாளர்களாக, அன்பிற்காகக் காயமடையவும் தயாராக இருப்பவர்களாக ஒவ்வோர் அருள்பணியாளரும் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 100ம் ஆண்டை முன்னிட்டு, அவர் பயின்ற இத்தாலிய லொம்பார்தியா மாவட்ட புனிதர்கள் அம்புரோஸ் மற்றும் சார்லஸ் குருமடத்தின் அங்கத்தினர்களை பிப்ரவரி 7, திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் வழி சான்றுபகர வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.
பூசை அறைக்குளேயே முடங்கிக் கிடத்தல், சிறு நண்பர் குழுவை உருவாக்கி அதற்குள்ளேயே வலம் வருதல் என்ற பாதுகாப்பு உணர்வுகளைவிட்டு வெளியே வந்து, உலகம் முழுவதும் நற்செய்தி தேவைப்படுகிறது என்ற உண்மையை உணர்ந்தவர்களாக, அருள்பணியாளர்கள் செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘என்னால் கடவுளுக்கு என்னச் செய்ய முடியும்’ என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்கும்போது, பணிக்குத் தயாராக இருப்பதன் இதயம் திறக்கும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில் புதுமைவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகள், உலகில் ஏழை-பணக்கார இடைவெளி அதிகரிப்பு ஆகியவைக் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
Source: New feed
