
தவக்காலம் நான்காம் வாரம்
திங்கட்கிழமை
I எசாயா 65: 17-21
II யோவான் 4: 43-54
“நம்பிப் புறப்பட்டுப் போனார்”
நம்பிக்கை, இதய நோயாளர்களுக்கு நலமளித்தது:
அமெரிக்கர்கள் ஆய்வுக்குப் பெயர்போனவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக கலிஃபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த ஒருசில மருத்துவர்கள் நானூறு இதய நோயாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை இரு குழுக்களாகப் பிரித்துத் தனித்தனி அறையில் வைத்தார்கள். பின்னர் ஒருகுழுவினரிடம் சில கிறிஸ்தவர்களை அனுப்பி, அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடச் சொன்னார்கள். இன்னொரு குழுவினரிடம் யாரையும் அனுப்பாமல் அப்படியே வைத்திருந்தார்கள்.
ஒருசில மணிநேரங்களுக்குப் பின்னர் மருத்துவர்கள் இரண்டு குழுவினரையும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்பொழுது கிறிஸ்தவர்கள் எந்த இதய நோயாளர்களுக்காக வேண்டினார்களோ அந்த இதய நோயாளர்களுடைய உடல்நலனில் நல்ல முன்னேற்றமும் நலமும் காணப்பட்டதை உணர்ந்தார்கள். இதற்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்தவர்கள் வேண்டாத ஏனைய இதய நோயாளர்களின் உடல் நலனில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை. அப்பொழுது ஆய்வை நடத்திய மருத்துவர்கள், நம்பிக்கையோடு வேண்டிக்கொண்டால் அல்லது நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் நலம் கிடைக்கும்’ என்ற முடிவுக்கு வந்தார்கள். (The Associated Press, quoted in “Religion in the News” sigins of the Times, March 1997, p.4).
ஆம், நாம் நம்பிக்கையோடு இருந்தால், நிச்சயம் நலம் கிடைக்கும். அதையேதான் மேலே நாம் கண்ட நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், “இனி அங்கே சில நாள்களுள் இறக்கும் பச்சிளம் குழந்தையே இராது” என்கிறார். மெசியா வருகையின்பொழுது என்ன நடக்கும் என்பதை முன்னறிவிக்கும் இவ்வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம்.
நற்செய்தியில் இயேசு, இறக்கும் தருவாயில் இருந்த அரச அலுவலரின் மகனை நலமாக்குகின்றார். இதற்கு அடிப்படைக் காரணம் அரச அலுவலர் இயேசுவிடம் கொண்டிருந்த நம்பிக்கைதான். ஏனெனில், “நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அவர் புறப்பட்டுப்போனார். அவர் நம்பியதுபோன்றே அவரது மகன் பிழைத்துக் கொள்கின்றான். இயேசு இருந்த இடத்திற்கும் அரச அலுவலரின் மகன் இருந்த இடத்திற்கும் இடையே இருபது கிலோமீட்டர் இருக்கும். ஆனாலும் இயேசு அரச அலுவலரின் மகனை நலப்படுத்தி, தான் எல்லாம் வல்லவர் என்பதை நிரூபிக்கின்றார். நாமும் எல்லா வல்ல இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு நலம்பெற்று வாழ்வோம்.
சிந்தனைக்கு:
இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வளிப்பவை (யோவா 5: 24-25, 6: 68)
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23)
அருமடையாளங்களைக் கண்டால்தான் இயேசுவை நம்ப வேண்டுமா? எல்லா வேளையிலும் நாம் அவரை நம்ப வேண்டாமா?
இறைவாக்கு:
‘அவர் மேல் நம்பிக்கை கொள்ளும் எவரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார்’ (உரோ 10: 4) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
