
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 1-8
II யோவான் 16: 16-20
“உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்”
இளைஞனின் துயரம் மகிழ்ச்சியாக மாறுதல்:
ஒரு நகரில் திமொத்தேயு என்றோர் இளைஞன் இருந்தான். இவனுடைய பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால், இவன் மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தான். இவன் ஒருநாள்கூடத் தவறாமல் கோயிலுக்குச் சென்று, திருப்பலி கண்டுவந்தான். ஒருநாள் காலையில் இவன் கோயிலுக்குச் சென்று, திருப்பலியில் பங்கேற்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்தபொழுது, வழக்கமாக இவனுக்கு உணவு சமைத்துத் தரும் பணியாளர் வரவில்லை. நீண்ட நேரம் இவன் அவருக்காகக் காத்திருந்தும் அவர் வராததால், இவன் தேநீர் மட்டும் தயார்செய்து பருகிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பினான்.
வழக்கமாக இவன் அலுவலகத்திற்குத் தன்னிடமிருந்த நான்கு சக்கர ஊர்தியில்தான் செல்வான். அன்றைக்குப் பார்த்து, அந்த நான்கு சக்கர ஊர்தியும் இயங்காததால் இவன் பேருந்தில் பயணம் செய்தான். இவன் அலுவலகத்தை அடைந்து, தன் வேலையைச் செய்யத் தொடங்கியபொழுது, இவனிடமிருந்த அலைப்பேசி வேலை செய்யாததை அறிந்தான். இதனால் இவன், ‘என்ன இன்றைக்கு எல்லாமே வித்தியாசமாக நடக்கின்றது’ என்று மிகவும் மனம்வருந்தினான். அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். வீட்டில் நுழைந்ததும் மின்விசிறியைப் போட்டான். மின்விசிறி சுழலவில்லை. காரணம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் இவன் மிகுந்த மன உளைச்சல் அடைந்து, தன் அறையில் இருந்த இயேசுவின் திருவுருவப் படத்திற்கு முன்பாகச் சென்று, “இயேசுவே! இன்று ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது?” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதான்.
அப்பொழுது ஒரு குரல், “பணியாளர் இன்று வாரததற்குக் காரணம், அவருக்குக் கொரோனோ வந்திருக்கின்றது. உன்னுடைய ஊர்தி இயங்காததற்குக் காரணம், ஒருவன் குடித்துவிட்டு, வாகனத்தை ஓட்டிவந்து, உன் ஊர்தியில் மோதுவதாக இருந்தது. உன்னுடைய அலைப்பேசி இயங்காததற்குக் காரணம், தவறான உன் நண்பன் ஒருவன் உன்னைத் தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக இருந்தது. மின்சாரம் தடைப்பட்டதற்குக் காரணம், மின்விசிறி அறுந்து உன் தலையில் விழுவதாக இருந்தது. இதனாலேயே இன்று உனக்கு இப்படி நடந்தது” என்று ஒலித்தது. இதைக் கேட்டதும் இவன், ‘எல்லாம் நல்லதுக்காகத்தான் நடந்திருக்கின்றது’ என்று நினைத்துக்கொண்டு, கவலை மறந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
ஆம், கடவுள் துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். அதைத்தான் இந்த நிகழ்வும், இன்றைய நற்செய்தியும் எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தம் சீடர்களிடம், “இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காண மாட்டீர்கள்; மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று சொன்னதால், அவர்கள் கலக்கமுறுகின்றார்கள். இங்கு இயேசு சொல்லும் சிறிது காலம் என்பது அவர் விண்ணகம் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் இடையே உள்ள காலமாகும். இயேசு தங்களைவிட்டுச் செல்ல இருக்கின்றார் என்று சீடர்கள் கலங்குகின்ற வேளையில்தான், “…..உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்கிறார் இயேசு. ஆம், இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் நிரந்தரமல்ல; அவை ஒருநாள் மாறும். எனவே, நமது துன்பங்களை இன்பமாக மாற்றும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ்வோம்.
சிந்தனைக்கு
ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார் (எசா 25:8)
எதுவும் இங்கு நிரந்தமில்லை; நமது துன்பங்கள் உட்பட
இதுவும் கடந்து போகும்
இறைவாக்கு:
‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்’ (1பேது 5: 7) என்பார் புனித பேதுரு. எனவே, கவலைகளை மகிழ்ச்சியாகவும் துன்பங்களை இன்பமாகவும் மாற்றும் ஆண்டவரிடம் சரணடைந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed