
பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 15: 22-31
II யோவான் 15: 12-17
“உங்களை நான் நண்பர்கள் என்றேன்”
நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள்:
சங்க காலத்தில் நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் பாரியும் புலவர் கபிலரும். இதில் பாரி திடீரென இறந்துவிட, கபிலரும் அவரோடு சேர்ந்து இறக்க முடிவு செய்தார். அப்பொழுதுதான் அவருக்கு, ‘நாமும் இறந்துவிட்டால், பாரியின் மகள்களுக்கு யார் திருமணத்தை நடத்தி வைப்பார்?’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. ஆகவே, அவர் உயிர் துறக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுப் பாரியின் மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடத்தி வைத்தார். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், பாரியில்லா வாழ்க்கை அவருக்கு மிகவும் கசக்கவே, அவர் வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஆம், பறம்பு நாட்டின் மன்னரான பாரிக்கும் புலவர் கபிலருக்கும் இடையே நல்ல நட்பு நிலவியது. அதனாலேயே பாரியில்லாத வாழ்வைக் கற்பனை செய்து பார்க்க முடியாதவராய்க் கபிலர் தன் உயிரைத் துறந்தார். நற்செய்தியில் இயேசு, நான் உங்களை நண்பர்கள் என்றேன் என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்று நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றார் எனில், அவர் சொல்லக்கூடிய ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் நிறைந்ததாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் இயேசுவும் தம் சீடர்களை விட்டுப் பிரிந்துசெல்கின்றபோது உதிர்க்கின்ற ஒவ்வொரு சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.
நற்செய்தியில் இயேசு தம் சீடர்களைப் பார்த்து, “உங்களை நான் நண்பர்கள் என்றேன்” என்கிறார். யூத இரபிகள் தங்கள் சீடர்களை அடிமைகள் எனக் கருதுவார்கள். அவ்வாறே அவர்களை அவர்கள் நடத்தவும் செய்வார்கள்; ஆனால், ஆண்டவர் இயேசு இதற்கு முற்றிலும் மாறாக, தம் சீடர்களை நண்பர்கள் என்கிறார். இதன்மூலம் இயேசு தன் தந்தையிடமிருந்து கேட்டவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவிக்கின்றார். மேலும் இயேசு தன் நண்பர்கள் இப்படி இருக்கவேண்டும் ஒன்றே ஒன்றை எதிர்பார்க்கின்றார். அதுதான் அவர் இடும் கட்டளைகளைச் செய்வது. எனவே, நாம் இயேசு இடும் கட்டளைகளைச் செய்து முடித்து, தம் நண்பர்களுக்காக உயிரையும் தந்த இயேசுவின் உண்மையான நண்பர்களாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும் (சீஞா 6: 5)
எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்பவனே சிறந்த நாயகன் – யூதப் பழமொழி
உடைகள் புதிதாக இருக்கும்போது சிறந்தவை. நண்பர்கள் பழையதாகும்போது சிறந்தவர்கள் – சீனப் பழமொழி.
ஆன்றோர் வாக்கு:
‘குறையில்லாத நண்பர்களே வேண்டும் என நினைப்பவனுக்கு ஒரு நண்பனும் கிடைக்கமாட்டான்’ என்கிறது யூதப் பழமொழி. எனவே, நாம் இயேசுவைப் போன்று குறைகளையும் ஏற்றுக்கொள்ளும் நல்ல நண்பர்களாக விளங்குவோம். இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed