
தவக்காலம் ஐந்தாம் வாரம்
புதன்கிழமை
I தானியேல் 3: 14-20, 24-25, 28
II யோவான் 8: 31-42
யார் இயேசுவின் சீடர்?
தந்தை சொன்னதை அப்படியே கேட்ட மகன்:
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தந்தையும் அவரது பத்துவயது மகனும் பனிபடர்ந்த ஒரு காட்டுப்பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் மகன் பாதைமாறிச் சென்றுவிட, சட்டென திரும்பிப் பார்த்த தந்தை அதிர்ந்துபோனார். ‘என் மகனுக்கு என்னாவாயிற்றோ?’ என்று அவர் அவனைத் தேடியலைந்தார். நேரம் கடந்ததே ஒழிய, அவன் அவருக்குக் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் மீட்புக் குழுவினருக்குத் தகவலைச் சொல்ல, அவர்களும் இரவுமுழுவதும் தேடிப்பார்த்தார்கள். அப்பொழுதும் அவன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பொழுது விடிந்தது. இன்னும் பலர் வந்து அவனைத் தொடத்தொடங்கினார்கள். ஓரிடத்தில் சிறுவனின் கால்தடம் தெரியவே, மீட்புக்குழுவினர் அதைப் பின்தொடர்ந்துகொண்டே சென்றனர். அங்கு ஒரு பெரிய மரத்தை கட்டியணைத்தவாறு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவனைச் சுற்றி மரக்கிளைகள் கிடந்தன. அவன் உயிரோடு இருப்பதைக்கண்டு, மீட்புக்குழுவினருக்கு வியப்பு தாங்கமுடியவில்லை. அப்பொழுது மீட்புக் குழுவில் இருந்த ஒருவர் அவனிடம், “எப்படி உன்னால் இரவுமுழுவதும் இந்தக் கடும்பனியையும் தாங்கிக்கொண்டு இருக்கமுடிந்தது?” என்று கேட்டதற்கு அவன், “என் தந்தை என்னிடம், ‘ஒருவேளை நீ இந்தப் பனிபடர்ந்த காட்டுப்பாதையில் தொலைந்துபோனால், ஒரு பெரிய மரத்தைக் கட்டியணைத்துக்கொண்டு, சுற்றிலும் அதன் கிளைகளை போட்டுவிட்டு அப்படியே இரு. உனக்கு எதுவும் ஆகாது’ என்றார். நன் என் தந்தை சொன்னதை அப்படியே கடைப்பிடித்தேன். அதனால்தான் எனக்கு எதுவும் ஆகவில்லை” என்றான்.
ஆம், சிறுவன் தன் தந்தை சொன்னதை அப்படியே கடைப்பிடித்தால் அவனுக்குஎதுவும் ஆகவில்லை. நற்செய்தியில் இயேசு, என் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் என் சீடராய் இருப்பார் என்கிறார். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் அவர் சொன்னதைக் கேளாமலும், அவர்மீது நம்பிக்கைகொள்ளாமலும் இருக்க, ஒருசில யூதர்கள் அவர்மீது நம்பிக்கைகொண்டார்கள். அவர்களைப் பார்த்துத்தான் இயேசு, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்” என்கின்றார்.
இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படியே பொருந்திப் போகிறார்கள் இன்றைய முதல்வாசகத்தில் வரும் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூன்று இளைஞர்கள், இவர்களிடம் நெபுகத்னேசர் பொற்சிலையை வணங்கச் சொன்னபொழுது, அவர்கள் அதை வணங்காமல், ஆண்டவர் கொடுத்த கட்டளைக்கு (விப 20: 1-3) உண்மையாய் இருந்நார்கள். இதனால் தீச்சூளையில் தூக்கிப்போடப்பட்டபோதும், அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. இவ்வாறு அவர்கள் கடவுளுக்கு உண்மையாய் இருந்தார்கள். நாம் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவரது உண்மையான சீடராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
இயேசுவை அன்புகூர்வோர் அவர் கட்டளையைக் கடைப்பிடிப்பர் (யோவா 14: 15)
கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது (1சாமு 15: 22)
இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர், அவரது அன்பில் நிலைத்திருப்பர் (யோவா 15: 20).
இறைவாக்கு:
‘…செயலில் உண்மையான அன்பை விளங்கச்செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் யோவான். எனவே, நாம் இயேசுவின்மீதுகொண்ட அன்பைச் செயலில் விளங்கச்செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
