
தவக்காலம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
I சாலமோனின் ஞானம் 2: 1a, 12-22
II யோவான் 7: 1-2, 10, 25-30
“அவர்கள் சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்”
உண்மையான வைரத்தைக் கண்டறியும் முறை:
இன்றைக்கு அன்றாடம் நாம் உண்ணக்கூடிய உணவுப்பொருள் முதல், அணியக்கூடிய ஆபரணங்கள் வரை யாவும் கலப்படமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக எது உண்மையான வைரம், எது போலியான வைரம் என்பதைக் கண்டறிய மிகவும் கடினமாக இருக்கின்றது. இத்தகைய சூழநிலையில் உண்மையான வைரம் எது எனக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழிமுறை பின்பற்றப்படுகின்றது. இதுதான் அந்த வழிமுறை.
ஒரு வைரம் உண்மையானது எனக் கண்டறிய அதைத் தூக்கித் தண்ணீரில் போடுவார்கள். ஒருவேளை அது போலியான வைரம் எனில், தண்ணீருக்குள் தூக்கிப் போடப்பட்ட பின் அது மின்னாது. அதே நேரத்தில் அது உண்மையான வைரம் எனில், அது மின்னும். இப்படித்தான் உண்மையான வைரம் எது, போலியான வைரம் எது எனக் கண்டறிவார்கள்.
மனிதர்களையும்கூட யார் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர், யாருக்கு இறைவன்மீது மேலோட்டமான நம்பிக்கை இருக்கின்றது என்பதை அவர்கள் தங்களுக்கு வரும் துன்பங்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதைக் கொண்டு நாம் கண்டறிந்து விடலாம். இன்றைய இறைவார்த்தை நீதிமான்களும் இயேசு கிறிஸ்துவும் துன்பங்களுக்கு நடுவில் எப்படி மன உறுதியோடு இருந்தார்கள் என்பதை எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், இறைப்பற்றில்லாதவர்கள், இறைவன்மீதுமிகுந்த பற்றுக்கொண்ட நேர்மையாளர்களை எப்படிப் பதுங்கியிருந்து தாக்கலாம் என்றும், அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறியவும் முடிவுசெய்கின்றார்கள். இப்படிப்பட்ட இறைப்பற்றில்லாதவர்கள் இறைவன்மீது பற்றுக்கொண்டு தூயவாழ்வு வாழ்பவருக்குக் கைம்மாறு உண்டு என்பதை அறியாமலேயே இருக்கின்றார்கள். நற்செய்தியில் யூதர்கள் இயேசுவைக் கொல்ல வழி தேடியும், அவர் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கின்றார். இதைப் பார்த்துவிட்டு எருசலேம் நகரத்தவர் வியப்படைகின்றனர்.
ஆம், முதல்வாசகத்தில் வரும் நேர்மையாளர்களும், நற்செய்தியில் வரும் இயேசுவும் எதிரிகளிடமிருந்து தங்களுக்கு ஆபத்து வருகின்றது என்பதற்காகக் கலங்கிவிடவில்லை; தங்களுடைய நிலையிலிருந்தும் அவர்கள் பின்வாங்கவும் இல்லை. மாறாக, அவர்கள் மன உறுதியோடும் ஆண்டவர்மீது நம்பிக்கையோடும் வாழ்ந்து வந்தார்கள். நாமும் நமது வாழ்வில் வரும் சவால்களைக் கண்டு அஞ்சாமல், இயேசுவைப் போன்று மன உறுதியோடு இருப்போம்.
சிந்தனைக்கு:
உங்கள் நம்பிக்கை மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் (1 பேது 1: 7)
துன்பங்கள் நம்மைச் சிதைப்பதற்கு அல்ல, செதுக்குவதற்காக வருகின்றன.
நம்பிக்கை கொண்டான் பதற்றமடையான் (எசா 28: 16)
இறைவாக்கு:
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24: 13) என்பார் இயேசு. எனவே, இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
