
தவக்காலம் நான்காம் வாரம் வியாழக்கிழமை
I விடுதலைப் பயணம் 32: 7-14
II யோவான் 5: 31-47
பாவங்களை மன்னிக்கும் கடவுள்
சிறு கிழிசலுக்காக விலையுர்ந்த ஆடையை யாரும் தூக்கிப் போடுவதில்லை:
படைவீரர் ஒருவர் துறவியிடம், “சுவாமி! மனிதர்கள் செய்யும் பாவங்களைக் கடவுள் மன்னிப்பது உண்மையா?” என்றார். அதற்குத் துறவி அவரிடம், “ஆமாம்! அதிலென்ன ஐயம்?” என்று கேட்க, “அதைச் சற்று விளக்கமாகச் சொல்லமுடியுமா?” என்று படைவீரர் அவரிடம் திரும்பக் கேள்வி கேட்க, துறவி தொடர்ந்தார்:
“தம்பி! நீ உடுத்தியிருக்கும் இந்த உடை நீ நெய்ததா?” என்றார். படைவீரர் “இல்லை” என்றதும், துறவி அவரிடம், “இந்த உடையில் ஒரு கிழிசல் ஏற்பட்டுவிட்டால் இதைத் தூக்கிப் போட்டுவிடுவாயா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். “அது எப்படி இந்த உடையை நான் தூக்கிப்போடுவேன்? இந்த உடை விலையுயர்ந்த உடையாயிற்றே!” என்றார் இராணுவவீரர். உடனே துறவி அவரிடம், “நீ சொல்வது மிகச்சரி. எப்படி நீ இந்த உடையில் ஒரு கிழிசல் விழுந்துவிட்டது என்பதற்காக இதைத் தூக்கிவீசமாட்டாயோ, அப்படி இறைவன் மனிதர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதற்காக, அவர்களை அழித்துவிடமாட்டார்; மாறாக அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார்” என்றார்.
ஆம், தாம் படைத்த மனிதர்கள் தவறுசெய்ததும் கடவுள் அவர்களை அழித்துவிடுவதல்ல. மாறாக, அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். அதைத்தான் இன்றைய முதல்வாசகம் நமக்கு உணர்த்துகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
மோசே கடவுளோடு பேசுவதற்குச் சீனாய் மலைக்குச் சென்ற இடைவெளியில், கீழே இருந்த இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபடத் தொடங்கிவிடுகின்றார்கள். இதனால் கடவுளின் சினம் அவர்கள்மீது எழ, அவர் அவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்கின்றார். அப்பொழுது மோசே கடவுளிடம், மக்களை அழித்தொழிக்கத்தான் நீர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர் என எகிப்தியர்கள் வசைபாடுவார்கள் என்றும், ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நீர் நினைவுகூரும் என்றும் சொல்லி மன்றாடுகின்றார். இதனால் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்கள் செய்த குற்றத்தை மன்னிக்கின்றார்.
கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், “நான் உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத்தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருந்தல் ஆகாது” (விப 20: 1-3) என்றார். அப்படியிருந்தும் அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து வழிபடுகின்றார்கள். அதனாலேயே கடவுளிடம் சீற்றம் அவர்கள்மேல் எழுகின்றது. கடவுள் அவர்கள்மீது சினம்கொண்டாலும் மோசே அவர்களுக்காக மன்றாடும்பொழுது, அவர் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். நாமும் பல நேரங்களில் தவறுசெய்கின்றபொழுதும் அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்பதுதான் உண்மை.
சிந்தனைக்கு:
கடவுள் நம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யாரும் அவர்முன் நிலைத்து நிற்கமுடியாது (திபா 130: 3).
ஒரே கடவுளை நம்புகின்றோமா?
சிலை வழிபாடு என்னும் பேராசைகொண்டோர் உரிமைப்பேற்றை அடையார் (எபே 5:5).
இறைவாக்கு:
‘ஆண்டவர் பாவங்களை மன்னிப்பவர்’ (சீரா 2: 11) என்பார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். எனவே, கடவுளின் மன்னிப்பை நம்வாழ்வில் உணர்ந்தவர்களாய், அவர் வழியில் நடந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
