
தவக்காலம் நான்காம் வாரம்
புதன்கிழமை
I எசாயா 49: 8-15
II யோவான் 5: 17-30
“நான் உன்னை மறக்கவே மாட்டேன்”
மகனுக்காகத் துடித்த தாய்:
ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த நேரமது. ஒருநாள் அவர், இராணுவத்தில் பணியாற்றிய ஓர் உயரதிகாரியை வெள்ளை மாளிகைக்கு அழைத்தார். அவரோ ‘அதிபர் தனக்கு உயரிய விருது கொடுக்கப்போகிறார்’ என்று நினைத்துக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு வந்தார். வந்தவரை அன்போடு வரவேற்ற ஆபிரகாம் லிங்கன், வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின், “உங்களுடைய (விதவைத்) தாய் எப்படி இருக்கின்றார்?” என்றார். இராணுவ அதிகாரியோ, “அவர் மிகவும் நன்றாக இருக்கின்றார்” என்றார். “அவர் மிகவும் நன்றாக இருக்கின்றார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்… கடிதம் மூலம் தெரிந்துகொண்டீர்களா?” என்றார் ஆபிரகாம் லிங்கன். அதற்கு அந்த இராணுவ அதிகாரியிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
அப்பொழுது ஆபிரகாம் லிங்கன் அவரிடம், “நீங்கள் இறந்துவிட்டதாகவும், உங்களுடைய உடல் எனக்குக் கிடைக்குமா என்றும் கேட்டு, அவர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார். ஆகையால், நீங்கள் உயிரோடுதான் இருக்கின்றீர்கள் என்று உங்கள் தாய்க்கு ஒரு கடிதம் எழுதுங்கள்” என்றார். அதன்பிறகு இராணுவ அதிகாரி தன் தவற்றை உணர்ந்து, தன் தாய்க்குக் கடிதம் எழுதினார்.
இந்த உலகத்தில் நம்மை விட்டுவிலகாத சொந்தம் தாய்தான். அவர் தன் பிள்ளையை ஒருபோதும் மறப்பதில்லை; ஆனால், இன்றைய இறைவார்த்தை மூலம் ஆண்டவர், தாய் மறந்தாலும், நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்கிறார். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாக வாழ்ந்தார்கள். இந்நிலையில் அவர்கள், ஆண்டவர் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார், மறந்துவிட்டார் என்று அழுதுபுலம்பினார்கள். அப்பொழுதுதான் கடவுள் அவர்களிடம், “பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ…? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்க மாட்டேன்” என்கின்றார். ஆண்டவரின் இவ்வார்த்தைகள் அவரது தாயன்பை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. “தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” (எசா 66: 13) என்ற வார்த்தைகளும் நமக்கு இதையே உணர்த்துகின்றன.
இவ்வாறு ஒரு தாயைப்போன்று தன் பிள்ளைகளை ஆண்டவர் மறவாமல் இருக்கின்றார் என்பதற்குச் சான்றாக, நற்செய்தியில் இயேசுகூறும், “என் தந்தை இன்றும் செயலாற்றுகின்றார்; நானும் செயலாற்றுகின்றேன்” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. கடவுள் இன்றும் செயலாற்றுகின்றார் எனில், அவர் நம்மை மறக்கவில்லை என்பதே உண்மை. எனவே, நம்மை மறவாத கடவுளுக்கு உண்மையாய் இருந்து, அவர் வழியில் நடப்போம்.
சிந்தனைக்கு:
கடவுளை நாம் மறந்தாலும், அவர் நம்மை மறவார் (எசா 44: 21).
கடவுளின் பேரன்பு எந்நாளும் உள்ளது (திபா 52: 1).
கடவுள் ஒருபோதும் நம்மை விட்டு விலக மாட்டார் (எபி 13: 5)
இறைவாக்கு:
‘இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்’ (மத் 28: 20) என்பார் இயேசு. எனவே, நம்மோடு இறுதிவரைக்கும் உடனிருக்கும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து, அவர் வழிநடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
