
தவக்காலம் நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
I எசேக்கியேல் 47: 1-9,12
II யோவான் 5: 1-3a, 5-16
“நலம் பெற விரும்புகிறீரா?”
கடவுளுக்கு விருப்பமானால் நலமாகின்றேன்!
இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த கிறிஸ்தவப் பெண்மணி ஒருவர் இருந்தார். இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தியறிந்த இவரது பங்குப்பணியாளர் இவருக்காக இறைவனிடம் வேண்ட அவ்வப்பொழுது மருத்துவமனைக்கு வந்துபோனார். ஆனாலும்கூட இவருடைய உடலில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இவர் தனக்காக இறைவனிடம் வேண்ட வந்துபோன பங்குப்பணியாளரிடம், “சுவாமி! நீங்கள் எனக்காக இறைவனிடம் வேண்டும்பொழுது, ‘உமக்கு விருப்பமானால் இந்தச் சகோதரியை நலம்பெறச் செய்யும். இல்லையென்றால் இவர் உமக்கு இன்னும் நெருக்கமாக வரச் செய்யும்’ என்று சொல்லி வேண்டுங்கள்” என்றார். பங்குப் பணியாளரும் இவர் சொன்னதுபோன்று வேண்ட, இவர் விரைவில் நலமடைந்தார். அப்பொழுது இவர், ‘நான் நலம்பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்போல’ என்று தன் மனத்தில் நினைத்துக்கொண்டு, அவருக்கு நன்றி செலுத்தினார்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் நலம்பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அதையே இந்த நிகழ்வும், இன்றைய இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒவ்வொரு யூதரும் ஆண்டிற்கொரு முறை நடைபெறும் பாஸ்காத் திருவிழா, பெந்தக்கோஸ்துத் திருவிழா, கூடாரத் திருவிழா என்று மூன்று திருவிழாக்களில் கலந்துகொள்வதற்கு எருசலேமிற்குச் செல்வதுண்டு. இயேசுவும் இப்படித்தான் திருவிழாவில் கலந்துகொள்வதற்கு எருசலேமிற்குச் செல்கிறார். அவர் எருசலேமிற்குச் செல்கின்றபொழுது முப்பத்தெட்டு ஆண்டுகளாய்ப் படுத்தபடுக்கையாய்க் கிடந்த ஒருவரை கண்டு, அவரிடம், “நலம் பெற விரும்புகிறீரா?” என்று கேட்கின்றார். அந்த மனிதர் இயேசு கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாவிட்டாலும், “தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை” என்று மறைமுகமாகச் சொல்லி, “ஆம், நான் நலம்பெற விரும்புகிறேன்” என்று சொல்லாமல் சொல்கின்றார். அப்பொழுது இயேசு அவரிடம், “படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்று சொல்லி அவரை நலப்படுத்துகின்றார்.
இயேசு முப்பதெட்டு ஆண்டுகளாய்ப் படுத்தபடுக்கையாய்க் கிடந்த மனிதருக்கு நலமளிக்கின்றார்; ஆனால், அவர் விரும்பியதுபோன்று, இயேசு அவரைக் குளத்தில் இறக்கிவிட்டு நலம்பெறச் செய்யவில்லை. “படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்று சொல்லியே நலமளிக்கின்றார். இதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் நலமோடு வாழவேண்டும் என்று இயேசு விரும்புகிறார் என்பது உறுதியாகின்றது. காரணம் அவர் நன்மைகளின் ஊற்றாக இருக்கின்றார். இன்றைய முதல்வாசகத்தில் “ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும்” என்று வாசிக்கின்றோம். வாழ்வின் ஊற்றான இயேசு இருக்குமிடத்தில் நலம் பெருகும்தானே! நமக்கு இயேசுவிடமிருந்து நலம்பெற விருப்பம் இருக்கின்றதா?
சிந்தனைக்கு:
யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும் – இயேசு (யோவா 7: 37)
மெய்யாகவே அவர் பிணிகளைத் தாங்கிக்கொண்டார் (எசா 53:4)
இயேசுவுக்கு நாம் உடல் உள்ள நோய்களிலிருந்து நலம்பெற விருப்பமிருக்கின்றது. நமக்கு இருக்கின்றதா?
இறைவாக்கு:
‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை’ (லூக் 5: 31) என்பார் இயேசு. எனவே, நாம் நலம்பெற விரும்பும் இயேசுவிடம் நம்மையே ஒப்படைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
