
தவக்காலம் மூன்றாம் வாரம் வியாழக்கிழமை
I எரேமியா 7: 23-28
II லூக்கா 11: 14-23
கண்மூடித்தனமாய் விமர்சிக்கும் உலகம்
விமர்சிப்பவருக்கு எங்கேயும் சிலை கிடையாது:
பின்லாந்தில் உள்ள ஒரு நகரில் இளைஞன் ஒருவன் இசைக்கச்சேரி நடத்தினான். அதில் கலந்துகொண்ட பலரும் அவனைப் பலவிதமாக விமர்சித்தார்கள். இதனால் மனமுடைந்துபோன அந்த இளைஞன் இனிமேல் இசைக் கச்சேரியே நடத்தக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான். இதை அறிந்த, அந்நாட்டைச் சார்ந்த வயலின் இசைக் கலைஞரான ஜீன் சிபெலியூஸ் (Jean Sibelius 1865-1957) என்பவர் அவனிடம், “மக்கள் உன்னுடைய இசைக்கச்சேரியை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக இனிமேல் இசைக்கச்சேரியே நடக்கக்கூடாது என நீ நினைப்பது மிகவும் தவறான முடிவு. ஒன்றை உன்னுடைய மனத்தில் வைத்துக்கொள்: இந்த உலகத்தில் எந்த நகரிலும் கலைஞர்களுக்குச் சிலை இருக்கின்றதே அன்றி, விமர்சிப்பவர்களுக்கு அல்ல” என்றார். அந்த இளைஞன் ஜீன் சிபெலியூசிடமிருந்து இத்தகைய நம்பிக்கைநிறைந்த வார்த்தைகள் வந்ததும், மிகுந்த உற்சாகத்தோடு இசைக் கச்சேரிகளை நடந்தினான்.
ஆம், ஜீன் சிபெலியூஸ் சொல்வது போன்று, இந்த உலகில் எந்த நகரிலும் அடுத்தவரை விமர்சிப்பவருக்குச் சிலை இல்லை; கலைஞர்களுக்கே சிலை உண்டு. ஆதலால், நாம் அடுத்தவர் நம்மை விமர்சிக்கின்றார் என்பதற்காக நமது முயற்சிகளைக் கைவிடாமல், நமது இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். நற்செய்தியில் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டும்பொழுது, ஒருசிலர் அவரை விமர்சிக்கின்றார்கள். அதற்கு இயேசு என்ன மறுமொழி கூறினார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் அடுத்தவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அதில் குறைகண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லது விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் இத்தகையோரே!
நற்செய்தியில் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். மக்கள் அதைக்கண்டு வியந்து போகின்றனர்; ஆனால், பரிசேயர்களோ இயேசு பேய்களின் தலைவனான பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுவதாக விமர்சிக்கின்றார்கள். இயேசு தூய ஆவியாரின் துணையால் மக்கள் நடுவில் வல்லசெயல்களைச் செய்துவந்தார் (திப 10: 38). அப்படியிருக்கையில் பரிசேயர்கள் இயேசு தீய ஆவியால் பேய்களை ஓட்டுகின்றார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது. இதற்கு இயேசு தக்க பதிலைச் சொல்லி அவர்களிடம் வாயை அடைக்கின்றார். நம்மையும்கூட பலர் தேவையற்ற விதமாய் விமர்சிக்கலாம், இவர்களை நாம் இயேசுவைப் போன்று விவேகத்தோடு எதிர்கொள்வது சிறந்தது.
சிந்தனைக்கு:
இயேசு உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டார் எனில் (யோவா 16: 33), அவர் சாத்தான்மீதும் வெற்றிகொண்டுவிட்டார் என்பதே பொருள்.
விமர்சனம் ஒருவரைச் சிதைப்பதாக இல்லாமல், செதுக்குவதாக இருக்கவேண்டும்.
இந்த உலகத்தில் கடைசி மனிதன் உள்ளவரையில் விமர்சிப்பவர் இருப்பர் என்பதால், விமர்சனங்களைக் கண்டு நாம் மனம் சோர்ந்துபோய்விடக் கூடாது.
ஆன்றோர் வாக்கு:
‘நீங்கள் மற்றவரை விமர்சிப்பவராக இல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாக இருங்கள். ஏனெனில், இந்த உலகம் பல விமர்சகர்களை ஏற்கெனவே கண்டுவிட்டது’ என்பார்கள் பெரியவர்கள். எனவே, நாம் அடுத்தவரை விமர்சிப்பவராக இல்லாமல், ஊக்கப்படுத்துபவர்களாக இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
