
தவக்காலம் மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
I 2 அரசர்கள் 5: 1-15
II லூக்கா 4: 24-30
“எல்லாருக்குமான இயேசு”
எந்தவொரு பேதமின்றிச் சிகிச்சையளித்த மருத்துவர்:
ஒரு நகரில் மருத்துவர் ஒருவர் இருந்தார். இவர் தன்னிடம் வந்த நோயாளர்களிடமிருந்து சொற்பமான பணமே வசூலித்துவந்தார். இவர் கைராசியான மருத்துவர் என்பதாலும், தன்னிடத்தில் வருகின்ற நோயாளர்களிடம் சொற்பமான தொகையே வசூலித்து வந்ததாலும், இவரிடம் எல்லாத் தரப்பு மக்களும் சிகிச்சைபெற வந்தார்கள். அவர்களிடமெல்லாம் இவர் எந்தவொரு பேதமும் பார்க்காமல் சிகிச்சை அளித்து வந்தார்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. இதனால் இப்பொழுது இவரால் முன்புபோல் ஓடியாடி மருத்துவம் பார்க்கமுடியவில்லை. ஆனாலும் இவர் தன்னிடம் வந்த நோயாளர்களிடம் எந்தவொரு பேதமும் பார்க்காமல் மருத்துவம் பார்த்தார். இப்படியிருக்கையில் ஒருநாள் இரவு இவருடைய வீட்டுக்கதவு தட்டப்பட்டது. “யாரது?” என்று இவர் படுக்கையிலிருந்து குரலெழுப்பியபொழுது, “ஐயா! அவசரமாக எனக்கு உங்களுடைய மருத்துவ உதவி தேவைப்படுக்கின்றது?” என்று வெளியேயிருந்து ஒரு குரல் கேட்டது. உடனே இவர், “வேறொரு மருத்துவரிடம் மருத்துவ உதவிபெற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் வசதி இருக்கின்றதா?” என்று கேட்க, அவரும் “ஆமாம்” என்றார். “அப்படியானால் நீங்கள் வேறொரு மருத்துவரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளுங்களேன்…! ஒருவேளை நீங்கள் வசதியில்லாதவராக இருந்திருந்தால், எனக்கு உடம்புக்கு முடியாத இந்த நேரத்திலும் நான் உங்களுக்கு மருத்துவ உதவி செய்திருப்பேன்” என்றார். இதைக்கேட்டு வந்தவர் வேறொரு மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மருத்துவர் எல்லாருக்கும் அதிலும் குறிப்பாக சமுதாயத்தில் இருந்த வறியவர்களுக்கு மிகுந்த அக்கறையோடு மருத்துவர் பார்த்தார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணி எல்லாருக்குமானது என்ற செய்தியை எடுத்துக்சொல்கின்றார். அதனால் அவருக்கு நேர்ந்தது என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திற்கு வரும் இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்த முடித்த பின்னர் எலியாவையும் (1 அர 17: 8-16), இன்றைய முதல் வாசத்தில் இடம்பெறும் இறைவாக்கினர் எலிசாவையும் (2 அர 5) குறிப்பிட்டுப் பேசுகின்றார். இயேசு இவ்விருவரையும் குறிப்பிட்டுப் பேசியதைக் கேட்டதும், தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் அவர்மீது சீற்றம் கொள்கின்றார்கள்; அவரை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் செல்கின்றார்கள். காரணம், இறைவாக்கினர்கள் எலியாவும் எலியாவும் பிற இனத்தார்கள் நடுவில் பணிசெயததால்தான். அவர்களைப் போன்று தன்னுடைய பணியும் இருக்கும் என்பதால்தான் தொழுகைக்கூடத்திலிருந்தவர்கள் இயேசுவின்மீது சீற்றம் கொள்கின்றார்கள். மக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோதும், இயேசு யூதருக்குக் மட்டுமல்லாது, பிறவினத்தாருக்கும் பணிசெய்தார் என்பதுதான் நாம் கருத்தில்கொள்ளவேண்டிய செய்தி
சிந்தனைக்கு:
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நாம் ஒன்றாய் இருக்கின்றோம் எனில், நமக்குள் வேறுபாடு எதற்கு? (கலா 3: 28).
இயேசு எல்லா உயிர்களையும் தன் உயிரெனவே பார்த்தார்.
குறுகிய மனப்பான்மையைத் தவிர்த்து, பரந்தமனப்பான்மையோடு வாழ்வோம்.
இறைவாக்கு:
‘அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும்நிலை ஏற்படும்’ (யோவா 10: 16) என்பார் இயேசு. எனவே, நாம் அனைவரும் ஒரே ஆயனின் மந்தை என்ற உணர்வோடு ஒன்றாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
