
தவக்காலம் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
I தொடக்க நூல் 37: 3-4, 12-13a, 17b-28
II மத்தேயு 21: 33-43, 45-46
புறக்கணிக்கப்பட்ட கல் மூலைக்கலாயிற்று
புறக்கணிக்கப்பட்ட அருள்பணியாளர்:
“Encyclopedia of Illustrations” என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது. அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். இவர் ஒரு பங்கில் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் மறையுரையை நன்றாகத் தயாரித்து வழங்கியபோதும்கூட பங்கு மக்கள், ‘என்ன இவர் மறையுரை ஆற்றுகின்றார்; இவருக்குச் சரியாகவே மறையுரை ஆற்றத் தெரியவில்லை’ என்று இவரைப் புறக்கணித்தார்கள்.
இவருக்கு ஒன்றும் புரியவில்லை, ‘இறைவார்த்தை ஒளியில் நன்றாகத்தானே மறையுரை ஆற்றுகின்றேன். பிறகு எதற்கு மக்கள் என்னுடைய மறையுரைகளைப் புறக்கணிக்கின்றார்கள்’ என்று புலம்பினார். ஒருநாள் இவர் அருகிலிருந்த ஒரு பூங்காவிற்குச் சென்று, தனியாக அமர்ந்துகொண்டு இது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு கிழிந்த ஆங்கில நாளிதழ் இவர்மீது வந்து விழுந்தது. அதை இவர் பார்த்தபொழுது, “No Man is ever fully accepted until he has, first of all, been utterly rejected” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. உடனே இவர், ‘நான் இப்பொழுது புறக்கணிக்கப்படுவதுகூட, பின்னாளில் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரு தொடக்கம்தான்’ என நினைத்துக்கொண்டு, நம்பிக்கையோடு திரும்பிவந்து, இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டு மறையுரை ஆற்றத்தொடங்கினார். நாள்கள் மெல்ல உருண்டோடின. இப்பொழுது இவருடைய பங்குமக்கள் இவரது மறையுரையை வெகுவாகப் பாராட்டினார்கள். மட்டுமல்லாமல், இவரது மறையுரைக் கேட்பதற்காகவே பலரும் பல இடங்களிலிருந்தும் வந்தார்கள்.
ஆம், யாருக்கு மறையுரை தெரியவில்லை என்று மக்கள் புறக்கணித்தார்களோ, அவருடைய மறையுரையைக் கேட்க, பலரும் பல இடங்களிலிருந்து வந்தது, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லும், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று” என்ற வார்த்தைகளை மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைச் சொல்லிவிட்டுச் சொல்லும் வார்த்தைகள்தான், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று” என்பதாகும். இயேசுவைத் தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பர்களும் புறக்கணித்தார்கள், ஏன் கொலைகூடச் செய்தார்கள்; ஆனால், அவர்கள் எதிரிபாராத வகையில் இயேசு உயிர்த்தெழுந்து, தவிர்க்க முடியாதவரானார். முதல்வாசத்தில் யோசேப்பை அவருடைய சகோதரர்கள், அவர்மீதுகொண்ட பொறாமையினால் இஸ்மயேலருக்கு விற்கின்றனர்; ஆனால், கடவுள் யோசேப்பை மன்னருக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தி, யார் தன்னைப் புறக்கணித்தார்களோ அல்லது கொல்லத் துணிந்தார்களோ அவர்களுக்கே பஞ்சக்காலத்தில் உதவும்படி செய்கின்றார். இவ்வாறு இயேசுவும் யோசேப்பும் எவரால் புறக்கணிக்கப்பட்டார்களோ, அவர்களால் தவிர்க்க முடியாதவர்கள் ஆனார்கள். எனவே, நாம் மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்பொழுது மனந்தளராமல் உறுதியாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
புறக்கணிக்கப்பட்டதன் வலியை உணர்ந்த யாரும், மற்றவரைப் புறக்கணிக்கமாட்டார்.
புறக்கணிக்கப்படுவதெல்லாம் உயர்த்தப்படுவதற்கே!
பகைமை சண்டைகளை எழுப்பும். அன்பு மன்னித்து மறக்கும் (நீமொ 10: 12)
ஆன்றோர் வாக்கு:
‘புறக்கணிப்பின் மறுபக்கம் வெற்றி மறைந்திருகின்றது’ என்பார் டோனி ரோப்பின்ஸ் என்ற அறிஞர். எனவே, நாம் புறக்கணிக்கப்படும்போது, வருத்தமடையாமல், இயேசுவைப் போன்று இலக்கை நோக்கி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
