
தவக்காலம் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை
I எரேமியா 17: 5-10
II லூக்கா 16: 19-31
“ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்”
பணத்தின்மீது நம்பிக்கைகொண்டிருந்த பெண்மணி:
கின்னஸ் புத்தகம், உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே மிகவும் கஞ்சத்தமான ஆள் என்று அமெரிக்காவைச் சார்ந்த ஹெட்டி கிரீன் (Hetty Green 1834-1916) என்பவரைச் சொல்கிறது. காரணம், இவரது தந்தை இறந்தபொழுது அவர் இவருக்கு நூறு மில்லியன் டாலரை வைத்துவிட்டுச் சென்றபோதும் இவர் அதைச் செலவழிக்கவில்லை; மாறாக அதைப் ‘பொத்திப் பொத்தி’ வைத்திருந்தார். இவர் எப்பொழுதும் பணத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால், இவர் கணவர் இவரை விவாகரத்து செய்தார்.
இதற்குப் பிறகு இவர் தன் மகனோடு வாழ்ந்து வந்தார். நல்ல உணவு உண்டால் பணம் செலவாகிவிடும்; நல்ல உடை உடுத்தினால் பணம் செலவாகிவிடும் என்பதற்காக, இவர் மிகவும் சாதாரண உணவை உண்டு, சாதாரண உடையே உடுத்திவந்தார். தன் மகனையும் இவர் அவ்வாறே இருக்கச்செய்தார். ஒருமுறை இவருடைய மகன் நெத் (Ned) ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டான். அப்பொழுது இவர் தன் மகனைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தால் மிகுதியான செலவாகும் என்று அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு இவருடைய மகனுக்குச் சரியாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் அவன் தன் கால்களை இழக்க வேண்டியதாயிற்று. இப்படி எப்பொழுதும் பணம் பணம் இருந்த இவர் திடீரென ஒருநாள் இறந்தார். அப்பொழுது இவருடைய சொத்து மதிப்பு நான்கு பில்லியன் டாலர்.
இவ்வளவு பணமிருந்தும், அதைச் செலவழிக்காமல் இருந்ததால்தான் கின்னஸ் புத்தகம் இவர், மிகவும் கஞ்சத்தனமான ஆள் என்று குறிப்பிடுகின்றது. இன்றைக்குப் பலரும் இந்த ஹெட்டி கிரீனைப்போன்று பணம்தான் எல்லாம் என்று, அதை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்றைய இறைவார்த்தை, பணத்தின்மீதோ, மனிதர்கள் மீதோ அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துவாழ அழைப்புவிடுக்கின்றது.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில் இயேசு ‘செல்வரும் இலாசரும்’ என்ற உவமையைச் சொல்கின்றார். செல்வத்தின்மீது பற்றுக்கொண்டு வாழ்வோரின் முடிவு எப்படி இருக்கும் என்பதற்காக இயேசு சொல்லும் இவ்வுவமை, அவர் பணத்தாசை பிடித்த பரிசேயரைத் (லூக் 16: 14) மனத்தில் வைத்துச்சொல்லும் ஓர் உவமையாகும். இவ்வுவமையில் பணத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த செல்வந்தன் இறந்தபின் பாதாளம் செல்கின்றான்; ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த இலாசரோ விண்ணகம் செல்கின்றார்.
எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், மனிதரில் நம்பிக்கைவைப்போர் சபிக்கப்படுவர் என்கிறது. யூதாவை ஆண்டவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்ததாலேயே எரேமியா இப்படிச் சொல்கின்றார். எனவே, நாம் பணத்தின்மீதோ, மனிதர்கள்மீதோ அல்ல, ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
பொருள் ஆசையே எல்லாத்தீமைகளுக்கும் ஆணிவேர் (1திமொ 6: 10)
காசுக்கும் கடவுளுக்கும் ஒரேநேரத்தில் பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24)
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம் (திபா 118: 8)
இறைவாக்கு:
‘ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்’ (திபா 40: 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கைவைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
