
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
I தொடக்க நூல் 22: 1-19
II மத்தேயு 9: 1-8
“கடவுளே பார்த்துக்கொள்வார்”
ஃபெல்ட்கிர்ச் நகரைப் (பாதுகாப்பாகப்) பார்த்துக்கொண்ட ஆண்டவர்:
ஆஸ்திரியாவில் உள்ளது ஃபெல்ட்கிர்ச் (Feldkirch). இந்நகர்மீது நெப்போலியன் படையெடுத்து வந்தான். செய்தியறிந்த ஃபெல்ட்கிர்ச் நகர் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். அன்று உயிர்ப்புப் பெருவிழா வேறு. அதனால் நகரில் இருந்த முக்கியமான மனிதர்கள் ஒன்றுகூடி, “நெப்போலியன் நம் நகர்மீது படையெடுத்து வருகின்றான் என்பதற்காக நாம் நகரைக் காலிசெய்து ஓடிவிடக்கூடாது. இன்று உயிர்ப்புப் பெருவிழா. அதனால் நாம் கோயில் மணியை அடித்து, வழக்கம் போல் வழிபாட்டை நடத்துவோம். எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்” என்று பேசி முடிவெடுத்தார்.
இதையடுத்து, கோயில் மணி ஒலிக்க உயிர்ப்புப் பெருவிழா வழிபாடு தொடங்கியது. கோயில் மணிச் சத்தம் கேட்டதும், நகருக்கு வெளியே, நகரை எப்பொழுது தாக்கலாம் என்று பாளையம் இறங்கியிருந்த நெப்போலியனின் படை, ‘நாம் வந்திருப்பது ஆஸ்திரிய இராணுவத்திற்குத் தெரிந்துவிட்டதுபோல, அதனால்தான் அவர்கள் நம்மைத் தாக்குவதற்குக் கோயில் மணியை ஒலிக்கச் செய்கின்றார்கள்’ என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கியது.
ஆம், எல்லாவற்றையும் ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்று ஃபெல்ட்கிர்ச் நகர் மக்கள் நம்பிக்கையோடு இருந்தது போன்று, ஆண்டவர் ஃபெல்ட்கிர்ச் நகரைப் பார்த்துக்கொண்டார் அல்லது எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்துக்கொண்டார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல்வாசகத்தில், ஆபிரகாமின் மகன் ஈசாக்கு, “…எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்கின்றபொழுது, ஆபிரகாம் அவரிடம், “கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆபிரகாமிற்கு அவருடைய முதிர்ந்த வயதில் ஒரு குழந்தையைக் கொடுத்து, அதைப் பலியிட வேண்டும் என்று ஆண்டவர் ஆபிரகாமிடம் சொன்னபோது, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” (தொநூ 15: 5) என்று ஆண்டவர் சொன்னாரே, அப்படியிருக்கையில், கொடுத்த ஒரே மகனையும் அவர் பலியிடச் சொல்கின்றாரே, பின் எப்படித் என் வழிமரபினர் பல்கிப் பெறுவர் என்று ஆபிரகாம் நினைக்கவில்லை. மாறாக, ஆபிரகாம் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு இருந்தார்.
இதற்குப் பிறகு அவர் தன் மகனோடு மோரியா நிலப்பகுதிக்குச் சொல்கிற வழியில் ஈசாக்கு தந்தை ஆபிரகாமிடம், “…..எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்கின்றபொழுது, ஆபிரகாம் அவரிடம், “ஆட்டுக்குட்டியைப் பொறுத்தமட்டில், கடவுள் பார்த்துக்கொள்வார் மகனே!” என்கிறார். ஆபிரகாம் இத்தகைய வார்த்தைகளை நம்பிக்கையோடுதான் சொல்கின்றார் (எபி 11: 17-19) இதனால் ஆபிராகம் தன் மகனைப் பலியிட முற்படும்பொழுது, ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தி, முட்செடி நடுவே கொம்பு மாட்டிக்கொண்ட ஓர் ஆட்டுக்குட்டியைக் காண்பிக்கின்றார். ஆபிரகாமும் அதைப் பலியிடுகின்றார். ஆம், ஆபிரகாம் ஆண்டவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அதனாலேயே ஆண்டவர் அவருக்கு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்; அவருடைய வழிமரபினருக்கு ஆசி வழங்கினார். நாமும் ஆண்டவரிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ முற்படுவோம்.
சிந்தனைக்கு:
நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது (எபி 11: 6).
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23).
விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக (திபா 3:
.
இறைவாக்கு:
‘ஆபிரகாம் (தாம்) செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்’ (யாக் 2: 21) என்பார் புனித யாக்கோபு. ஆதலால், நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவருக்கு ஏற்படையவர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
