
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் புதன்கிழமை
I தொடக்க நூல் 21: 5, 8-20
II மத்தேயு 8: 28-34
(ஆபத்திலிருந்து) காக்கும் கடவுள்!
சிறுவனைக் காப்பாற்றிய இளைஞன்:
அந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அவ்வூரில் இருந்த குளங்கள், குட்டைகள், ஏரிகள் பெருகின. ஆற்றில் நீர்வரத்து மிகுதியாக இருந்தது.
ஆற்றில் வரும் வெள்ளத்தைப் பார்ப்பதற்காகப் பலர் ஆற்றுப் பாலத்திற்கு வந்தார்கள். அப்படி வந்த மக்கள்கூட்டத்தில் பத்து வயதுச் சிறுவன் ஒருவனும் இருந்தான். அவன் ஆற்றில் வரும் வெள்ளத்தைப் பார்ப்பதற்காகக் கீழே குனிந்தபொழுது, இடறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டான். ஆற்றுக்குள் விழுந்த சிறுவன், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறினான்; யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
தற்செயலாக அங்கு வந்த இளைஞன் ஒருவன், அங்கிருந்தவர்களிடம், “என்ன நடந்தது?” என்று விசாரித்தபொழுது, அவர்கள் நடந்ததைச் சொல்ல, உடனே அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றினான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவனை யாரும் காப்பாற்ற முன்வராதபொழுதும், தானே முன்வந்து காப்பாற்றினான். இன்றைய இறைவார்த்தை ஆபத்தில் அல்லது இக்கட்டில் இருந்தவர்களை ஆண்டவர் காப்பாற்றுவதைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கல்லறையை வாழிடமாகக் கொண்டிருக்கும் ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? – நினைத்துப் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கின்றது. நற்செய்தியில், இயேசு கல்லறையை வாழிடமாகக் கொண்ட இருவரை எதிர்கொள்கின்றார் (மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் ஒருவர் என வரும். மாற் 5: 2; லூக் 8: 27). அவர்கள் இருவரும் பேய்பிடித்து மிகவும் கொடியவர்களாக இருந்தார்கள். பேய்பிடித்திருந்தவர்கள் ஆபத்தில்தான் இருந்திருப்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட இருவரிடமிருந்தும் பேய்களை ஓட்டி, இயேசு அவர்கள் இருவருக்கும் புதுவாழ்வு தருகின்றார்.
இன்றைய முதல்வாசகத்தில், ஆபிரகாமின் மனைவி சாராவால் பாலை நிலத்திற்குத் துரத்தப்படும் ஆகார், தன் குழந்தை சாவதைப் பார்க்கச் சகியாமல் கூக்குரலிட்டு அழுகின்றார். கூடவே அவளுடைய மகனும் அழுகின்றான். அப்பொழுது ஆண்டவர் ஆகாருடைய பையனின் அழுகுரலைக் கேட்டு, சாவிலிருந்து அவனைக் காப்பாற்றுகின்றார். மட்டுமல்லாமல் ஆண்டவர் அவனோடு இருந்தார். நற்செய்தி வாசகத்தில் வருகின்ற நிகழ்வும், முதல் வாசகத்தில் வருகின்ற நிகழ்வும் ஆண்டவர் யாரையும் கைவிடுவதில்லை. மாறாக, அவர் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றார் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. நாமும் நம்முடைய கண்காணிப்பில் உள்ள மக்களிடம் பாராமுகமாக இல்லாமல், இலாபத்தை மட்டுமே முதன்மையாகக் கருதி வாழாமல், ஆண்டவரைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பு கொண்டு வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார் (திபா 72: 12)
திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள் (எசா 1: 7)
ஏழைகள், வறியவர்கள் ஆகியோர்மீது நம்முடைய பார்வை எப்படி இருக்கின்றது? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார் (சீஞா 35: 14) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நம்மைக் கைவிடாத ஆண்டவரிடம் சரணடைந்து, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed