
பாஸ்கா காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
I திருத்தூதர் பணிகள் 6: 8-15
II யோவான் 6: 22-29
“இவன் மோசேக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னான்”
இறையடியார்மீது குற்றம் சுமத்திய சாத்தான்:
இறையடியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு கனவுகண்டார். அந்தக்கனவில் இவர் விண்ணகத்தில் இருக்கும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். பின்பு சாத்தான் அங்குவந்து, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த இறையடியாருக்கு முகம்வாடியது. சாத்தான் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு முடித்ததும், இறையடியார் சாத்தானைப் பார்த்து, “எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை எல்லாம் பட்டியலிட்டு முடித்தாலும், இன்றும் ஒன்றே ஒன்றை நீ சொல்ல மறந்துவிட்டாய்” என்றார். “அது என்ன?” என்று சாத்தான் இறையடியாரிடம் கேட்டபொழுது, அவர் அதனிடம், “இயேசுவின் இரத்தம் என் பாவங்களைக் கழுவிப் போக்கிவிட்டது. இதை நீ சொல்ல மறந்துவிட்டாய்” என்றார். இதைக்கேட்டதும் சாத்தான் வாயடைத்து நின்றது.
ஆம், மேலே உள்ள கற்பனைக் கதையில் வரும் சாத்தானைப் போன்று, இன்றைக்குப் பலர் நம்மீது பொய்க்குற்றம் சுமத்தத் தயாராக இருக்கின்றார்கள். இன்றைய முதல்வாசகத்தில் சிலர் ஸ்தேவான்மீது பொய்க்குற்றம் சுமத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவராக இருந்தவர் ஸ்தேவான் (திப 6: 3). இவர் அருஞ்செயல்களைச் செய்பவராக மட்டுமல்லாது (திப 6: 8), ஞானத்தோடு பேசக்கூடியவராகவும் இருந்தார் (திப 6: 10). இப்படிப்பட்டோரோடு சிலர் வாதாடத்தொடங்கி, முடியாமல் போகவே, அவர்கள் இவருக்கு எதிராகப் பொய்க்குற்றம் சுமத்துகின்றார்கள். எப்படிப்பட்ட பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.
ஸ்தேவானோடு வாதாடமுடியாமல் தோற்றுப்போனவர்கள், ஸ்தேவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்களை சொன்னார் என்று தலைமைச்சங்கத்தாரிடம் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். காரணம், தலைமைச் சங்கத்தில் இருந்த பலர், ‘ஐந்நூல்களை’ மட்டுமே ஏற்றுக்கொண்ட சதுசேயர்களாக இருந்தார்கள். இவர்கள் மோசேக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். எனவே, ஸ்தேவானோடு வாதிட முடியாமல் தோற்றுப்போனவர்கள் ஸ்தேவான் மோசேக்கு எதிராகப் பழிச்சொற்களைச் சொன்னார் என்று சதுசேயர்களிடம் சொன்னதன் மூலம், அவர்களின் சினம் ஸ்தேவான்மீது எழும்படி செய்கிறார்கள்.
இன்றைக்கும் ஒருசிலர் ஒருவரோடு போட்டிபோட முடியாமல் போகும்போது, அவர்கள் தங்களுடைய கையில் எடுக்கக்கூடிய ‘மிகக்கேவலமான ஆயுதம்’தான் பொய்க்குற்றம் சுத்துவது. இப்படி நமக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, நம்மீது பொய்க்குற்றம் சுமத்துபவர்களுக்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அதுதான் ஸ்தேவானைப் போன்று பொய்க்குற்றம் சாட்டுபவர்களுக்காக வேண்டுவது.
சிந்தனைக்கு:
உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் (லூக் 6: 28)
நன்மையால் தீமையை வெல்லுங்கள் (உரோ 12: 21)
ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசாமல், நல்லதைப் பேச முயற்சி செய்வோம்
இறைவாக்கு:
‘என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே’ (மத் 5: 11) என்பார் இயேசு. எனவே, நாம் பிறர் நமக்கெதிராகப் பொய்க்குற்றம் சாட்டிலும், அதை நினைத்து வருந்தாமல், இயேசுவின் வழியில் தொடர்ந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
