
பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
I தெசலோனிக்கர் 4: 1-8
II மத்தேயு 25: 1-3
“தூயோராய் ஆவதே கடவுளுடைய திருவுளம்”
தனித்து வாழ்வதுதான் தூய வாழ்க்கையா?
ஒரு காலத்தில், காட்டிற்குச் சென்று, தனிமையில் கடுந்தவம் செய்வது வாழ்வதுதான் தூய வாழ்க்கை, அப்படிப்பட்டவர்களே தூயவர்கள், புனிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இன்றைக்கு அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
நான்காம் நூற்றாண்டில், எகிப்தில் வாழ்ந்த இராணுவ வீரரான பசோமியுஸ் (Pachomius) அந்நாட்டில் இருந்த ஒருசில கிறிஸ்தவர்களின் எடுத்துக்காட்டன வாழ்வால் தூண்டப்பட்டு மனம்மாறி, கி.பி. 315 ஆம் ஆண்டு திருமுழுக்குப் பெற்றார். இவர் திருமுழுக்குப் பெற்ற பிறகு தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ முடிவுசெய்தார். ஆனால், இவருக்குக் காட்டிற்குச் சென்று, உண்ணாமல், உறங்காமல் கடுந்தவம் மேற்கொள்வதில் விருப்பம் இல்லை. அதற்கு இவர் சொன்ன காரணம் இதுதான்: “காட்டில் தனியாக இருந்துகொண்டு ஒருவரையும் அன்பு செய்யாமல், ஒருவருக்கும் சேவை செய்யாமல் வாழ்வது எப்படித் தூய வாழ்க்கை ஆகும். மக்களோடு இருந்து மக்களுக்காகப் பணிசெய்வதும், ஆண்டவரின் அன்புக்குச் சான்று பகர்ந்து வாழ்வதும் அன்றோ தூய வாழ்க்கை! அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள்தான் தூயவர்கள்.”
இதன்பிறகு இவரும் இவருடைய சீடர்களும் மக்கள் நடுவில் தங்கி, அவர்களுக்குக் கடவுளின் அன்பை எடுத்துச் சொன்னார்கள். இடையிடையே அவர்களுக்கு மக்களிடமிருந்து எதிர்ப்புகளும் துன்பங்களும் வந்தன. ஆனாலும், அவர்கள் அவற்றைப் பொறுத்துக்கொண்டு, ஆண்டவரின் அன்பிற்குச் சான்று பகர்ந்து தூயவர்களாய் வாழ்ந்தார்கள்.
காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிவது மட்டும் தூய வாழ்க்கை இல்லை, மக்களோடு, மக்களாக இருந்து, ஆண்டவரின் அன்பிற்குச் சான்று பகர்ந்து வாழ்வதும் தூய வாழ்க்கைதான் என்ற செய்தியை மேலே உள்ள நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, தூயோர் ஆவதே கடவுளின் திருவுளம் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தெசலோனிக்கரிடமிருந்த பரத்தமையைச் சுட்டிக்காட்டிப் பேசும் பவுல், பிற இனத்தார்தான் இப்படி ஒழுக்கக்கேடாக வாழ்வர், தூய வாழ்வுக்கு அழைக்கப்பட்ட நீங்கள் இப்படி வாழக்கூடாது என்கிறார். மேலும் அவர் அவர்களிடம் தூயோர் ஆவதே கடவுளின் திருவுளம் என்கிறார்.
தூய்மை என்பது மேலே இடம்பெறும் நிகழ்வு சொல்வதுபோல தனிமையான வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆண்டவரின் அன்பிற்குச் சான்று பகர்வதுதான். அந்த வகையில், நம்மையே நாம் தயாரித்து, ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருப்பதுதான் தூய வாழ்க்கைதான் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு சொல்லும் இந்த உவமையில் வரும் ஐவர் மணமகனின் வருகைக்காக ஆயத்தமாக இருக்க, ஐவர் ஆயத்தமில்லாமல் இருக்கின்றார்கள். இதனால் ஆயத்தமில்லாமல் இருந்தவர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் போய்விடுகின்றார்கள்.
ஆகையால், நாம் தூயவர்களாக வாழ்வோம். அத்தகைய தூய வாழ்க்கையை நாம் ஆண்டவரின் வருகைக்காகக் காத்திருப்பதில், ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் வெளிப்படுத்துவோம்.
சிந்தனைக்கு:
தூயோராய் இருங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் (லேவி 19: 2).
கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள் (உரோ 12: 1).
கடவுளின் திருவுளத்திற்ப நாம் தூயோராய் வாழ்வோம்.
இறைவாக்கு:
‘நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள்’ (லேவி 20: 7) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் நம்மையே புனிதப்படுத்தி, ஆண்டவரைப் போன்று தூயோராகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
