
பொதுக்காலம் இருபதாம் வாரம் திங்கட்கிழமை
I நீதித் தலைவர்கள் 2: 11-19
II மத்தேயு 19: 16-22
“ஏழைகளுக்குக் கொடும்”
ஏழைக்கு உதவிய டோரியோவின் தந்தை:
தங்களுடைய மகன் டோரியோவிற்குச் சரியாகப் பசிக்கவில்லை என்று அவனுடைய பெற்றோர் அவனை நகரில் இருந்த குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நான் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை இவனுக்குச் சாப்பிடக் கொடுங்கள். நன்றாகப் பசியெடுக்கும்” என்றார். டோரியாவின் பெற்றோரும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டு, மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர். எல்லாமும் சேர்த்து ஐநூறு உரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது.
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபொழுது, பெண்மணி ஒருத்தி, கையில் குழந்தையுடன், “ஐயா! சரியாகச் சாப்பிட்டு, இரண்டு மூன்று நாள்கள் ஆகிவிட்டன. குழந்தை பசியில் அழுதுகொண்டே இருக்கின்றது. எதாவது கொடுங்கள்” என்றாள். உடனே டோரியோவின் தந்தை தனது சட்டைப் பையிலிருந்து ஓர் ஐந்நூறு உரூபாய் நோட்டை எடுத்து, அவளிடம் கொடுத்துவிட்டு, வேகமாக நடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன டோரியோவின் தாய், “பிச்சைக்காரிக்கு எதற்கு ஐந்நூறு உரூபாய் தந்தீர்கள். மனத்தில் பெரிய வள்ளல் என்ற நினைப்பா?” என்றார். “அப்படியெல்லாம் இல்லை! நம்முடைய மகனுக்குப் பசிக்கவில்லை என்பதற்காக ஐந்நூறு உரூபாய் செலவழித்தோம். இந்தப் பெண்மணியின் குழந்தைக்குப் பசிக்கின்றது. அதனால் பசிக்காத நம் மகனுக்காக ஐந்நூறு உரூபாய் செலவழிக்கும் நாம், பசிக்கும் குழந்தைக்கு ஐந்நூறு உரூபாய் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான், அந்தப் பெண்மணிக்கு ஐந்நூறு உரூபாய் கொடுத்தேன்” என்றார்.
ஆம், பசியோடு இருக்கும், பல்வேறு தேவைகளோடு இருக்கும் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் நாம் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும். அதை இந்த நிகழ்வு நமக்கு
அருமையாக
எடுத்துக்கூறுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இறைவன் குடிகொண்டிருக்கும் ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் வருகின்ற செல்வரான இளைஞரிடம், இயேசு (கடைசியாகச்) சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்பதாகும். கட்டளையெல்லாம் கடைப்பிடித்து வந்துள்ளதாக, இயேசுவிடம் சொல்லும் இந்த இளைஞரிடம் இயேசு, ஏழைகளுக்குக் கொடும் என்று சொன்னதும், வருத்தத்தோடு சென்றதை வைத்துப் பார்க்கும்போது, அவர் கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தெரிகின்றது. ஏனெனில், கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்திருந்தால், அவரது சாயலாகப் படைக்கப்பட்ட ஏழைகளை அன்பு செய்திருப்பார்; அவர்களுக்குத் தன்னிடம் இருந்ததைக் கொடுத்திருப்பார். அதுவரை அவர் ஏழைக்குக் கொடுக்காதினாலும், அதற்குப் பின்பும் ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாததினாலும்தான் அவர் வருத்தத்தோடு செல்கிறார்.
முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் உண்மைக் கடவுளை அன்பு செய்யாமல், வேற்று தெய்வங்களான பாகாலையும் அஸ்தரோத்தையும் அன்பு செய்வதையும், அவற்றை வழிபடுவதையும் குறித்து வாசிக்கின்றோம். இதற்காக இஸ்ரயேல் மக்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் கடவுளையும், அவர் குடிகொண்டிருக்கும் ஏழைகளையும் அன்பு செய்யவேண்டும். அதுவே நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
சிந்தனைக்கு:
ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார் (நீமொ 19: 17).
ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார் (நீமொ 14: 21).
தன் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதவர் கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.
இறைவாக்கு:
‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத் 25: 40) என்பார் இயேசு. எனவே, இறைவன் குடிகொண்டிருக்கும் ஏழைகளுக்கு இரங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
